*சென்னை டு பாண்டிச்சேரி பயணத்தில் நடக்கும் கதை ‘ டேக் டைவர்ஷன்’*
சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் கார் பயணத்தில் நடக்கிற கதையாக உருவாகி இருக்கிறது ‘டேக் டைவர்ஷன்’ படம்.
இப்படத்தை சிவானிசெந்தில் இயக்கியிருக்கிறார். சிவானி பிலிம்ஸ் சார்பில் சுபா செந்தில் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார்.
‘திருமலை தென்குமரி’ முதல் ‘பையா’ வரை பயண வழிக் கதைகளைக் கொண்ட பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் சேரும் அளவிற்கு நம்பிக்கையோடு உருவாகி வரும் படம் தான்’ டேக் டைவர்ஷன்’ .
சென்னை ராயபுரத்தில் ஒரு வெப்பமான பின்புலத்தோடு காட்சிகள் தொடங்க, வழியில் பல்வேறுபட்ட நிலக்காட்சிகள் மாறி பாண்டிச்சேரி கடற்கரை வரை செல்லும் கதை இது. வழியில் பல வர்ண ஜாலங்களாகக் காட்சிகள் திரையில் விரிகிற கதையாக இப்படம் உருவாகியிருக்கிறது.
இப்படத்தை இயக்கி இருக்கும் சிவானி செந்தில் ஏற்கெனவே’கார்கில்’ என்ற படத்தை 2018-ல் இயக்கி இருந்தார் .அந்தப் படம் தமிழில் ஒரே ஒரு கதாபாத்திரம் தோன்றும் படமாக ஊடகங்களில் பேசப்பட்டது. நாயகன் காரில் செல்கிற பயணம் சார்ந்த காட்சிகள் தான் அந்தப் படத்தின் கதையாக இருக்கும்.
அதே போல் இந்தப் படத்தில் நாயகிக்கு மூன்று பேரால் நடக்கும் பிரச்சினைகள் வரும். அதற்கான தீர்வை நோக்கிச் செல்லும்படி இந்த கதையின் ஓட்டம் இருக்கும். மூன்றாண்டு காலம் அவளுக்கு இருந்த பிரச்சினைகள் அந்த ஒரு நாள் பயணத்தில் தீர்கிறது. எப்படி என்பதுதான் கதையின் போக்கு.
படத்தின் தலைப்பைப் பற்றி இயக்குநர் கூறும்போது,
” நாம் அனைவருமே புறப்பட்ட பாதையிலிருந்து நேராகச் சரியாக அடையவேண்டிய இடத்திற்குப் போய்ச் சேருவதில்லை. காலம் நம்மை மாற்றுப்பாதையில் திசை திருப்பி வேறு ஒரு கிளை பிரித்து அங்கே பயணிக்க வைத்து இறுதியில் தான் அந்த இடத்தை அடைய வைக்கும். அப்படி வாழ்க்கையில் ‘ டேக் டைவர்ஷன் ‘ என்ற வார்த்தைக்குப் பொருள் அனைவரும் அனுபவபூர்வமாக உணர்ந்து இருப்பார்கள். அந்த வகையில்தான் இந்த பெயரை வைத்தேன். இதற்கான சரியான தமிழ்ப்பெயர் கிடைக்கவில்லை என்பது ஒரு காரணம். இது ஒரு கலர்ஃபுல்லான படமாக இருக்கும். இளமை ததும்பும் காட்சிகள் புதிதாக இருக்கும்” என்றவர்.
“இந்த கொரோனா காலத்தில் அவ்வப்போது படப்பிடிப்பு என்று திட்டமிடாமல் துண்டுதுண்டாக படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருக்க முடியாது என்பதால் ஒரே பயணத்திட்டத்தில் படத்தை முடிப்பது என்ற நோக்கில் ஆரம்பித்தோம். இதோ முடிவடையும் தருவாயில் இருக்கிறது .இந்தப்படத்தில் எத்தனை பேர் இருந்தாலும் சரி கதைதான் ஹீரோ” என்கிறார் இயக்குநர்.
ஏனென்றால் அவர் கே. பாலச்சந்தரின் ரசிகர். அவரது அத்தனை படங்களிலும் எத்தனைக் கதாநாயக நடிகர்கள் நடித்து இருந்தாலும் திரைக்கதை தான் பிரதான நாயகனாக இருக்கும். அதுபோல்தான் இந்தப் படத்தில் பலபேர் நடித்திருந்தாலும் கதைதான் கதாநாயகன்.
இப்படத்தில் ‘கேஜி எப்’ படத்தின் துணை இயக்குநரும்,கூத்துப்பட்டறையில் பத்தாண்டுகள் நடிப்புப் பயிற்சி பெற்றவருமான சிவகுமார் அறிமுக நாயகனாக நடித்து முத்திரை பதித்துள்ளார். ‘பேட்ட’, ‘சதுரங்கவேட்டை’ படங்களில் வில்லனாக நடித்த ராமச்சந்திரன் முக்கியமான கதாபாத்திரத்தில் இளமை துள்ளலுடன் நடித்துள்ளார் .
பாடினி குமார் நாயகியாக நடித்துள்ளார் .இவரது நடிப்பு அனுபவ சாலியைப் போல அற்புதமாக அமைந்துள்ளது. இரண்டாம் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார்.ஜான் விஜய் வில்லனாக வருகிறார். படத்தில் 20 நிமிடங்கள் அவரது கலக்கல் நடிப்பு அனைவராலும் ரசிக்கப்படும் .விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலாஜி சந்திரன், சீனிவாசன், அருணாச்சலம், ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு ஒளிப்பதிவு ஈஸ்வரன் தங்கவேல். இவர் ஏற்கெனவே நான்கு படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். கன்னடத்தில் இவர் ஒளிப்பதிவு செய்த ஒரு படத்திற்குத் தேசிய விருது கிடைத்திருக்கிறது.
படத்திற்கு இசை ஜோஸ் பிராங்க்ளின். இவர் ‘நெடுநல்வாடை’, ‘என் பெயர் ஆனந்தன்’ படங்களின் மூலம் நல்லதொரு அறிமுகம் பெற்றிருப்பவர். படத்தொகுப்பு -விது ஜீவா.
“பயண வழிப் படமாக இந்த படம் ஒரு புதிய அனுபவத்தை தரும். அதற்கு நான் உத்திரவாதம் “என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் இயக்குநர் சிவானி செந்தில்.
படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.
sakthi saravanan pro