கில்ட் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், “ஹபீபி” படத்திற்கு பாராட்டு விழா !

தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்த ‘ஹபீபி’ திரைப்படம் – படக்குழுவினருக்குப் பாராட்டு விழா!

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவான ‘ஹபீபி’ திரைப்படம், தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காதல் மற்றும் குடும்பப் பின்னணியிலான திரைப்படமாகும். ரோமியோ பிக்சர்ஸ், நேசம் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜிகேஎஸ் பிரதர்ஸ் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ், தனஸ்ரீ சுதாகரன், அனுஸ்ரேயா ராஜன், அருள்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்; மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

1980-களில் தொடங்கி நிகழ்காலம் வரை ஒரு குடும்பத்தின் வாழ்க்கைப் பயணத்தைப் பதிவு செய்யும் இப்படம், தென் தமிழகத்தின் முஸ்லிம் சமூகத்தின் கலாசாரம், நம்பிக்கைகள், குடும்ப உறவுகள், காதல், ஆசைகள் மற்றும் கைத்தறி நெசவுத் தொழிலின் பின்னணியில் உருவாகும் வாழ்க்கை மாற்றங்களைப் படம்பிடித்துள்ளது. தமிழ் சினிமாவில் முஸ்லிம் மக்களின் அன்றாட வாழ்வியலை விரிவாகவும் நெருக்கமாகவும் பதிவு செய்த படைப்பாக ‘ஹபீபி’ கவனம் பெற்றுள்ளது. வெளியானதைத் தொடர்ந்து இப்படத்தின் கதைக்களம், கலாசாரப் பதிவுகள் மற்றும் கதாபாத்திரங்களின் இயல்பான சித்தரிப்பு குறித்து விமர்சனங்கள் வெளியாகின.

திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்திற்குக் 125 வது நாள் கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து, படக்குழுவினரைப் பாராட்டும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. கில்ட் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலும் இடம்பெற்றது. திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு படக்குழுவினரைப் பாராட்டினர்.

இந்நிகழ்வினில்

கில்ட் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சக்கரவர்த்தி பேசியதாவது..,

“‘ஹபீபி’ ஒரு காவியத்தைப் போன்ற படைப்பு. இத்தகைய படத்தை உருவாக்கிய இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படத்திற்குப் பாராட்டு விழா நடத்துவது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இதுபோன்ற படைப்புகளுக்கு இன்னும் அதிகமான அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். நான் பத்தாம் வகுப்பு படித்தபோது ஹர்ஷத் என்ற நண்பர் இருந்தார். சென்னையில் சமீர் என்ற நண்பரும் இருக்கிறார். அவர்கள் என்னுடன் பழகியது மதத்தின் அடிப்படையில் அல்ல; அன்பும் நட்புமாகத்தான். அந்த அன்பும் பாசமும் இப்போது எங்கே போய்விட்டன என்று தெரியவில்லை.

இஸ்லாமியர்களைப் பற்றிய தவறான பிம்பங்களைத் தாண்டி, அவர்களின் உண்மையான வாழ்வியலையும் அன்பையும் மனிதநேயத்தையும் இந்தப் படம் உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கிறது. நாம் அனைவரும் மத வேறுபாடுகளைக் கடந்து சகோதரர்களாகவும் தமிழர்களாகவும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதையே இந்தப் படம் உணர்த்துகிறது.

நான் தயாரித்து நடித்த படங்கள் மூலம் எதிர்பார்த்த அளவுக்குப் பெரிய அங்கீகாரம் கிடைக்காதது எனக்கு வருத்தம்தான். இருப்பினும், ‘ஹபீபி’ போன்ற படைப்பைப் பாராட்டுவதற்கான இந்த மேடை எனக்கும் கில்ட் சங்கத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த்!”

பத்திரிகையாளரும் இயக்குநருமான கோடங்கி பேசியதாவது..,

“இது ஆடம்பரமான விழா இல்லை; ஆனால் அற்புதமான, அழகான விழா. ‘ஹபீபி’ போன்ற படைப்புகளை நாம் எந்த அளவுக்கு உயர்த்திப் பிடிக்கிறோம் என்பதுதான் முக்கியம். இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் மீரா கதிரவன் சொல்லியிருப்பது அன்பு. அன்புக்கு மதம் கிடையாது, ஜாதி கிடையாது, மொழி கிடையாது. ஆனால் அந்த அன்பு வெற்றி பெறுவதற்குப் பல நேரங்களில் அதிகமான போராட்டங்கள் தேவைப்படுகின்றன. இந்தப் படத்தை நான் இரண்டாவது முறையாகப் பார்க்கிறேன். ஒவ்வொரு காட்சியிலும் இயக்குநரின் நோக்கத்தையும் உழைப்பையும் உணர முடிகிறது.

“ஒரு படத்தைத் தயாரிப்பவர், இயக்குநர், நடிகர்கள் ஆகியோர் நல்ல படைப்பைக் கொடுப்பதற்காக எவ்வளவு போராடுகிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். நானும் பத்திரிகையாளராக 30 ஆண்டுகளாகப் பணியாற்றியிருக்கிறேன்; படங்களைத் தயாரித்தும் இயக்கியும் இருக்கிறேன். ஒரு படம் பாதியில் நின்றுவிட்டால் தயாரிப்பாளருக்கு ஏற்படும் வலியும், ஒரு நல்ல படைப்பை மக்களிடம் கொண்டு சேர்க்க இயக்குநர் படும் வேதனையும் எனக்குத் தெரியும். இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா தனது கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கும் விதம் மிகவும் பாராட்டுக்குரியது. இயக்குநரின் பார்வையைப் புரிந்துகொண்டு அந்தக் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

“தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான சிறு முதலீட்டுத் திரைப்படங்கள் வெளியாகின்றன. பல தயாரிப்பாளர்கள் காணாமல் போகிறார்கள்; பல இயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இத்தகைய சூழலில் நல்ல படைப்புகளை உருவாக்குபவர்களை அவர்கள் இருக்கும்போதே பாராட்ட வேண்டும். நல்ல திரைப்படங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தால்தான் தொடர்ந்து இதுபோன்ற படங்களை உருவாக்கும் உற்சாகம் அவர்களுக்குக் கிடைக்கும். கமர்ஷியல் வெற்றி முக்கியம்தான்; அதே நேரத்தில் உணர்வுபூர்வமான, அழகான படைப்புகளையும் நாம் கொண்டாட வேண்டும்.

“இஸ்லாமியர்களைப் பற்றிய கதையாக இருப்பதால் மட்டும் ஒரு திரைப்படத்தை வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன? இந்து மதம், கிறிஸ்தவ மதம் சார்ந்து பல திரைப்படங்கள் வருகின்றன. இஸ்லாமியர்களின் வாழ்க்கையைப் பேசும் படங்களுக்கும் அதே அளவிலான கவனமும் ஆதரவும் கிடைக்க வேண்டும். ‘ஹபீபி’ போன்ற திரைப்படங்களைத் திரையுலகினர் பெரிய அளவில் கொண்டாட வேண்டும். இந்தப் படத்தில் உழைத்த இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் கோவை இப்ராஹிம் பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். இந்த விழாவில் கலந்துகொண்டுள்ள ‘ஹபீபி’ படக்குழுவினர், இயக்குநர் மீரா கதிரவன், கஸ்தூரி ராஜா சார் மற்றும் அனைவருக்கும் எனது மாலை வணக்கங்கள். கில்ட் உறுப்பினர்களாக இருந்து எங்களுடைய திரைப்படத்தைக் கொண்டாடி, பாராட்டி வரும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

“அதிக நேரம் பேச விரும்பவில்லை. இங்கு பல பெரியவர்கள் பேச இருப்பதால் சுருக்கமாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். சிறிய படங்கள் மட்டுமல்ல, பெரிய படங்களையும் தரமான படைப்புகளாக நம்மால் வழங்க முடியும். எங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் தொடர்ந்து திரைப்படங்களை உருவாக்குவதற்கு இதுபோன்ற பாராட்டு விழாக்கள் நிச்சயமாகத் தேவைப்படுகின்றன. இத்தகைய அங்கீகாரம் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. விரைவில் எங்களுடைய அடுத்த திரைப்படத்தின் அறிவிப்புடன் உங்களைச் சந்திக்கிறோம். மற்ற விஷயங்களைப் படத்தின் இயக்குநரும் குழுவினரும் விரிவாகப் பேசுவார்கள். நன்றி, வணக்கம்” என்றார்.

தயாரிப்பாளர் சாகுல் ஹமீத் பேசியதாவது..,

“நேசம் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் இதற்கு முன்பு பத்துக்கும் மேற்பட்ட சிறந்த திரைப்படங்களைக் கொண்டாடியிருக்கிறோம். அந்த வரிசையில் ‘டூலெட்’, ‘பரியேறும் பெருமாள்’ ।மற்றும் “கொட்டுக்காளி” உள்ளிட்ட படங்களும், இடம்பெற்றன. இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதன் நோக்கம், நல்ல திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான். இன்று தமிழ் சினிமா ஒரு சவாலான சூழலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. மலையாள சினிமா நமக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறது. மொழி தெரியாதவர்களும் ஓடிடி தளங்கள் வழியாகப் படங்களைப் பார்த்து, அவற்றில் சொல்லப்படும் கருத்துகளைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கிறார்கள். சிறிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்கள்கூட மிகச் சிறந்த கருத்துகளை உலகளவில் கொண்டு சேர்க்க முடியும் என்பதற்கு அது சான்றாக இருக்கிறது.

“எங்களுடைய முதல் திரைப்படம் உலகளவில் பல விருதுகளைப் பெற்றது. அதன் மூலம் கேன்ஸ் திரைப்பட விழாவிலிருந்தும் அழைப்பு கிடைத்தது. அந்த அனுபவம் எனக்குப் புதிய உலகத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், ‘ஹபீபி’ சாதாரணமான படைப்பு அல்ல. இது இயக்குநர் மீரா கதிரவனின் நீண்டகாலக் கனவு. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக அவர் இந்தப் படத்திற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார். அவருடன் பயணித்த அனுபவத்தில், இந்தப் படைப்பை உருவாக்குவதற்காக அவர் எவ்வளவு உழைத்தார் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன். அவர் எப்போது ஓய்வெடுக்கிறார் என்றே கேட்கும் அளவுக்கு அவரது உழைப்பு இருந்தது. அத்தகைய அர்ப்பணிப்பின் விளைவாக இன்று ஒரு சிறந்த படைப்பை நம்மால் கொண்டாட முடிகிறது. இந்தப் படம் உலகின் பல இடங்களில் திரையிடப்பட்டிருப்பது சாதாரணமான விஷயமல்ல. ரோமியோ பிக்சர்ஸ், ஜி.கே.எஸ். பிரதர்ஸ் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களின் பங்களிப்பும் இந்தப் பயணத்தில் முக்கியமானது. கில்ட் அமைப்பு இந்தப் படத்தைக் கொண்டாடியிருப்பதை எனது வாழ்நாளில் கிடைத்த அற்புதமான தருணங்களில் ஒன்றாகப் பார்க்கிறேன்.

“தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட் படங்களுக்குத் திரையரங்குகள் கிடைப்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. எங்களுடைய படம் நான்கு வாரங்கள் ஓடியது. ஆனால், அது இன்னும் பல இடங்களைச் சென்றடைய வேண்டியிருந்தது. அருப்புக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து படத்தைத் திரையிடக் கேட்டு அழைப்புகள் வந்தன. ஆனால், அடுத்தடுத்த வாரங்களில் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியானதால், அந்தப் பகுதிகளில் எங்களால் படத்தைக் கொண்டு சேர்க்க முடியவில்லை. ஒரு படம் பெரிய திரையரங்குகளில் வெற்றிபெற்று, அடுத்தடுத்த மையங்களுக்குச் செல்லும் நேரத்தில் புதிய பெரிய படங்கள் வெளியாவதால், சிறிய படங்களுக்கான வாய்ப்புகள் குறைந்துவிடுகின்றன. இதற்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு திரைப்படத் துறையின் சங்கங்களுக்கு இருக்கிறது. குறைந்த பட்ஜெட் திரைப்படங்களுக்கும் உரிய திரையரங்குகளும் வெளியீட்டு வாய்ப்புகளும் கிடைப்பதை உறுதிசெய்வதே முக்கியமான பணியாக இருக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமா என்ற கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன். ‘ஹபீபி’ படத்தைக் கொண்டாட இந்த வாய்ப்பை ஏற்படுத்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. வணக்கம்” என்றார்.

நடிகர் கஸ்தூரி ராஜா பேசியதாவது..,

“‘ஹபீபி’ படத்துக்காகக் கிட்டத்தட்ட 40, 50 மேடைகளில் பங்கேற்றிருக்கிறோம். பல இடங்களுக்குக் காரிலும், ரயிலிலும், விமானத்திலும் பயணம் செய்திருக்கிறோம். மகிழ்ச்சியையும் வலியையும் அனுபவித்திருக்கிறோம். இன்றுவரை தொடர்ந்து பாராட்டுகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. கஸ்தூரி ராஜா சிறப்பாக நடித்திருக்கிறார், என்று பலரும் பாராட்டுகிறார்கள். இவை அனைத்தையும் எங்களுக்குத் தாய்ப்பால் போல ஊட்டி, எங்களை வழிநடத்தியவர் இயக்குநர் மீரா கதிரவன். ஒரு இயக்குநரின் பார்வையும் வழிகாட்டுதலும் இல்லாமல் ஒரு படத்தில் எதையும் சாதிக்க முடியாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். கிட்டத்தட்ட 48 ஆண்டுகளாகச் சினிமாவில் இருக்கிறேன்; 25 படங்களை இயக்கியிருக்கிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன், ஒரு படத்தின் ஒவ்வொரு அசைவிலும் இயக்குநரின் பங்களிப்புதான் முக்கியமானது.

“இந்தப் படத்தில் நடித்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியானது. படப்பிடிப்பில் யாருக்கும் ஏற்றத்தாழ்வு காட்டப்படவில்லை; அனைவரும் சாதாரண மனிதர்களாகவே நடத்தப்பட்டோம். எனக்கு ஒரு விஷயத்தில் ஈகோ இருந்தது உண்மைதான். இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்திருக்கிறேன்; உதவி இயக்குநராக இருந்து இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வளர்ந்திருக்கிறேன். பல புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். குடும்பத்தையும் நல்லபடியாகக் கவனித்துவிட்டோம்; இனி நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் மீரா கதிரவன் என் வீட்டுக்கு வந்தார். நீங்கள் நடிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், எனக்கு நடிப்பதில் ஆர்வம் கிடையாது. திரையிலும் வாழ்க்கையிலும் என்னால் நடிக்க முடியாது; என் மனதில் என்ன தோன்றுகிறதோ, அதை அப்படியே சொல்லிவிடுவேன். அதனால், ‘எனக்கு நடிக்கத் தெரியாது; என்னை நடிக்க வைத்தால் நீங்கள் வருத்தப்படுவீர்கள்’ என்றுகூட அவரிடம் சொன்னேன்.

“ஆனால், அவர் விடாமல் பேசினார். வீட்டில் உள்ளவர்களிடமும் ஆலோசித்தேன். பின்னர் அவர் கொடுத்த திரைக்கதையை இரண்டு, மூன்று நாட்கள் கழித்துத்தான் எடுத்துப் படித்தேன். படிக்கப் படிக்க, இந்த இயக்குநர் கதைக்காக எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் என்பது புரிந்தது. கதையில் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது என்று தோன்றியது. இஸ்லாமியர்களின் வாழ்க்கை மற்றும் கோட்பாடுகள் குறித்து எனக்கு முழுமையான புரிதல் இல்லாதபோதிலும், இந்தக் கதையை முயற்சி செய்து பார்க்கலாம் என்று அரைமனதுடன் ஒப்புக்கொண்டேன். ஆனால், அந்த முடிவு இவ்வளவு சிறப்பான அனுபவத்தைத் தரும் என்று எதிர்பார்க்கவில்லை. இன்றுவரை எங்களுக்குள் எந்தவிதமான உரசலும் ஏற்பட்டதில்லை. இந்தப் படத்தை மீரா கதிரவனைத் தவிர வேறு யாருடைய இயக்கத்திலும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவர் அனைவரையும் சமமாக நடத்தும் விதத்தையும் நேரில் பார்த்திருக்கிறேன். இந்தப் படம் எனக்கு மீண்டும் ‘கஸ்தூரி ராஜா’ என்ற பெயரையும் அடையாளத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது. இதற்கு முன்பு பலரும் என்னை ‘யூசுப் பாய்’ என்றுதான் அழைத்தார்கள். இப்போது மீண்டும் ‘கஸ்தூரி ராஜா சார்’ என்று அழைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

“நான் நூறு சதவீதத்துக்கும் மேலாக இந்து மதத்தைச் சார்ந்தவன். ஆனால், இந்தப் படத்தில் நடித்ததற்காக என்னை வேறு ஒருவராக மாற்ற வேண்டும் என்று இயக்குநர் எந்தவிதத்திலும் வற்புறுத்தவில்லை. கதையையும் கதாபாத்திரத்தையும் தெளிவாகப் புரியவைத்தால், தேவையான உணர்வுகள் இயல்பாகவே வந்துவிடும் என்பதை இந்தப் படம் உணர்த்தியது. இந்தப் படத்துக்காக உழைத்த தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், தொழில்நுட்பக் குழுவினர் என அனைவருக்கும் நன்றி. இன்றைய சூழலில் ஒரு படத்தை உருவாக்குவதற்குப் பெரும் துணிச்சல் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட படங்களைத் தொடர்ந்து உருவாக்கவும், என்னை மீண்டும் மீண்டும் நடிக்க அழைக்கவும் அனைவரும் முன்வர வேண்டும். இந்தப் படத்தின் வெற்றிக்கும் பாராட்டுகளுக்கும் காரணமான இயக்குநர் மீரா கதிரவன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்”.

இயக்குநர் மீரா கதிரவன் பேசியதாவது:

“‘ஹபீபி’ திரைப்படத்துக்கு இதுவரை 50-க்கும் மேற்பட்ட பாராட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து பல இடங்களில் இப்படத்துக்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. இயக்குநர் ராம் சார், படம் வெளியான பிறகு குறைந்தது மூன்று மாதங்களுக்குப் பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டிருப்பீர்கள் என்று சொன்னார். அவர் எந்த முகூர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை; இன்றுவரை உலகம் முழுவதும் இப்படத்துக்குப் பாராட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம், உங்கள் அனைவரின் அன்புதான். இதற்கு முன்பு எழுத்தாளர்கள், மகளிர் அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் சாதி, மதங்களைக் கடந்து செயல்படும் அமைப்புகள் இப்படத்தைப் பாராட்டியுள்ளன. இப்போது தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து இப்படத்தைப் பாராட்டுவது எனக்கு மிகவும் சிறப்பான தருணம். தயாரிப்பாளர்கள் இல்லையென்றால் என்னுடைய கதை வெறும் காகிதத்தில்தான் இருந்திருக்கும். தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இணைந்து ‘ஹபீபி’ படத்தைப் பாராட்டுவது தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நிகழ்வாக நான் பார்க்கிறேன்.

“என்னுடைய முதல் படத்துக்குப் பிறகு, இரண்டாவது படத்தை நானே தயாரிக்கும் அளவுக்கு ஒரு சூழல் உருவானது. ஆனால் ஒரு படத்தைத் தயாரித்த பிறகுதான் தயாரிப்பாளரின் முக்கியத்துவம் முழுமையாகப் புரிந்தது. தயாரிப்பாளர்கள் அளிக்கும் இந்த ஊக்கமும் அங்கீகாரமும் தொடர்ந்து நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. ‘ஹபீபி’ படத்தில் நடித்த கஸ்தூரி ராஜா சார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் மிகப்பெரிய ஒத்துழைப்பைக் கொடுத்தார்கள். தனஸ்ரீ, மாளவிகா மனோஜ் உள்ளிட்ட பலருக்கு இந்தப் படம் முக்கியமான வாய்ப்பாக அமைந்தது. விஜயகுமார், ஜெயஸ்ரீ, மலர், ரிஸ்வானா, மஷூக் உள்ளிட்ட நடிகர்களும், உதய், மதி உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களின் பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியுள்ளனர். இந்தப் படத்துக்காக உழைத்த உதவி இயக்குநர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

“தமிழ் சினிமாவுக்கு 110 ஆண்டுகால வரலாறு இருக்கிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தனித்துவமான மொழியும் வாழ்வியலும் இருக்கின்றன. கொங்கு மக்களின் வாழ்க்கை, கரிசல் நிலத்தின் வாழ்க்கை, வடசென்னையின் வாழ்க்கை எனப் பல்வேறு கதைகள் திரையில் வந்துள்ளன. அதுபோல, இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றினாலும் தமிழையே தாய்மொழியாகக் கொண்டு வாழும் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கையைப் பேசும் திரைப்படம்தான் ‘ஹபீபி’. இத்தகைய கதையை இயக்குவதற்கு நான் ஒரு கருவியாக இருந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். அதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.

“இந்தப் படத்தின் உருவாக்கத்தில் மிக முக்கியமானவர் வி.எஸ். முஹம்மத் அமீன். அவரை இந்தப் படத்தின் இயக்குநர், எழுத்தாளர் அல்லது தயாரிப்பாளர் என்று மட்டும் குறிப்பிட முடியாது; அவர் இந்தப் படத்தின் சகலகலா வல்லவர். இஸ்லாமிய வாழ்வியலை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு சுமார் 20 ஆண்டுகளாக இருந்தது. அந்தக் கனவைச் சாத்தியப்படுத்தியவர் அமீன்தான். அவர் இல்லையென்றால் ‘ஹபீபி’ இந்த மேடையை அடைந்திருக்காது. நாங்கள் இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால், எங்களுக்குள் அந்த வாழ்க்கை அனுபவங்கள் குறித்த நெருக்கமும் புரிதலும் இருந்தன. இந்தப் படத்தை உருவாக்க உதவிய அனைவருக்கும், தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

‘ஹபீபி’ திரைப்படத்தின் கதைக்களம், கலைஞர்களின் பங்களிப்பு மற்றும் தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்த விதம் குறித்துப் பங்கேற்பாளர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகளுடன் நிகழ்ச்சி நடைபெற்றது. படக்குழுவினரின் முயற்சியைப் பாராட்டும் விதமாக அமைந்த இந்நிகழ்ச்சியில் திரையுலகினர் பலரும் கலந்துகொண்டனர்.