18 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற “அமலா “

18வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் கடந்த 18.02.2021அன்று சென்னை PVR  சத்யம் திரையரங்கில் கோலாகலமாக தொடங்கியது.உலக நாடுகளில் இருந்து, பல மொழிகளில், பல திரைப்படங்கள் திரையிடப்பட்ட போதும், இந்தியாவில் இந்தியன்  பனோரமா பிரிவில் இருந்து மொத்தம் 17 படங்கள்  தேர்வாகி  இருந்தது . அதில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் கிரைம் திரில்லர் பாணியில்  எடுக்கப்பட்ட “அமலா” திரைப்படமும் தேர்வாகி இருந்தது.

இயக்குனர் நிஷாத் இப்ராஹிம் இயக்கத்தில், நடிகர்களான  ஸ்ரீகாந்த், “ஆட்டோ சங்கர்  வெப் சீரிஸ்” புகழ் அப்பாணி  சரத் ,அனார்கலி மரிக்கர், இவர்களுடன் குழந்தை நட்சத்திரங்களான வைஷ்ணவ், ஆன்மரியா  மற்றும் பல நட்சத்திரங்கள்   நடித்துள்ள இப்படத்தை முஷினா  நிஷாத் இப்ராஹிம் தயாரித்துள்ளார் .

இசையமைப்பாளர் லிஜின் பொம்மினோ  இசையில் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த அமலா திரைப்படம்  பிப்ரவரி 24 ஆம் தேதி சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

படம் தொடங்கிய சில நொடிகளிலேயே ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளதாகவும், படம் முடியும் வரையிலும் ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்களது நாற்காலி முனையில்  அமர்ந்தபடியே படத்தை பார்த்து ரசித்ததாகவும் தெரிவித்தனர். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான ஸ்ரீகாந்த், அப்பணி சரத், அனார்கலி மரிக்கர் ஆகியோரின் நடிப்பு தங்களை  வெகுவாக கவர்ந்ததாக ரசிகர்கள் ஒவ்வொருவரும் இயக்குனரிடம் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

சர்வதேச திரைப்பட விழாவில்  ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கும் படக்குழுவினருக்கும் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து  தெரிவித்தனர்.

வசனம் – ராம் பிரகாஷ்  ஒளிப்பதிவு – அபிலாஷ் சங்கர்  பாடல்கள்  -மோகன்ராஜன்  ஸ்டண்ட் – பயர் கார்த்திக்   கலை – சிஜி பட்டணம்   மக்கள் தொடர்பு  – மணவை புவன் தயாரிப்பு – மஸ்காட் புரொடக்ஷன்ஸ்  முஷினா  நிஷாத் இப்ராஹிம்

இந்தப் படத்தில், ஒரு இளம் பெண் ஒருத்தி மர்மமான  முறையில் ஒரு பூங்காவில் இறந்து  கிடக்க, அது  கொலையா..? தற்கொலையா..? என்று போலீசார் குழம்பியிருக்கும் அந்த  சமயத்தில் உயர் அதிகாரியான  நடிகர் ஸ்ரீ காந்த் இதை கொலைதான்  என்று அடித்து  சொல்லி, துப்பு துலங்கும் அதே  நேரத்தில் நகரத்தில் அடுத்தும் ஒரு இளம் பெண் இறக்கும் தருவாயில்  இருக்கிறாள். அவளைக்  காப்பாற்றிய ஸ்ரீ காந்த், அவளிடம்  விசாரிக்க , அவளோ  “அமலா”  என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் சொல்லி இறந்து விடுகிறாள். புரியாத மர்மமாக  இருக்கும் அந்த  நேரத்தில், சீர்திருத்த பள்ளியிலிருந்து ஒருவன் தப்பித்து விட்டதாக தகவல் கிடைக்க, அந்த  தப்பித்தவன்  யார்..? அவனுக்கும் இந்த  கொலைகளுக்கும் என்ன தொடர்பு..? தப்பித்தவன்  பிடிப்படானா.?  என்று துப்பு துலங்குவதே மீதி  படத்தின் கதை.