சினிமா படப்பிடிப்புகளை நிறுத்த முடிவு எடுப்பதா? தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நடிகர் சங்கம் கண்டனம்!

கடந்த 21.06.2024 அன்று திரு.முரளிராமசாமி அவர்கள் மற்றும்  திரு.கதிரேசன் அவர்கள் தலைமையில்  தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் குழுவிற்கும் திரு.நாசர் மற்றும் திரு.பூச்சி S.முருகன் அவர்கள் தலைமையில் தென்னிந்திய நடிகர் சங்கம் நிர்வாகிகள் குழுவிற்கும் இடையே நிகழ்ந்த கலந்துரையாடலின் தீர்மானங்கள் கீழ்வருமாறு :
1) 2007- ஆம் ஆண்டு இரு சங்கங்களுக்கும் இடையே கையெழுத்தான  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தற்கால சூழலுக்கு ஏற்ப சில மாற்றங்கள் மட்டுமே செய்து அதை இயன்ற விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
2) 21.06.2024 வரையிலான இருதரப்பு புகார்கள் மீதும் விசாரணை நடந்து தீர்வு காணப்பட்ட நிலையில், அன்றைய தினம் அளிக்கப்பட்ட புதிய புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தென்னிந்திய நடிகர் சங்கம் ஒப்புக்கொண்டது. அதற்குரிய அவண ஆதாரங்களை விரைவில் வழங்குவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
3) இனி எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் இன்றி தயாரிப்பாளர்கள், நடிகர்களை படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டாமென்ற முடிவிற்கு பரஸ்பர ஒப்புதல் வழங்கப்பட்டது.
4) ஒப்பந்த நகல் மற்றும் ஆவண அதாரங்கள் இல்லாமல் புகார்களை விசாரிக்க இயலாது என்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கருத்தை தயாரிப்பாளர்கள் சங்கமும் ஏற்றுக்கொண்டது.
5) தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு, துணை நடிகர்கள்,  Special artistes, Gymboys எண்ணிக்கையில் 50%  வாய்ப்புகளை திரைப்படங்களில் வழங்கும் உடன்படிக்கையை தவறாமல் நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற தென்னிந்திய நடிகர் சங்க தரப்பு கோரிக்கை தயாரிப்பாளர்கள் சங்கத்தால் எற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், 29.07.2024 தேதியிட்ட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பத்திரிகை செய்தியில், நடிகர்கள் தொடர்பான பொதுத் தீர்மானம் மற்றும் திரு.தனுஷ் குறித்த தனித் தீர்மானம் தொடர்பான தகவல் எங்களுக்கு அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து திரு.தனுஷ் மீது இதுநாள்வரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்பதையும் அவர்மீது எந்தவித புகாரும் நிலுவையில் இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இருதரப்பும் கலந்துரையாடி, பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டிய நடைமுறை சிக்கல்களுக்கு, எங்களிடம் கலந்தாலோசிக்காமல் தீர்மானம் நிறைவேற்றி, அதை பத்திரிகை செய்தியாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்  வெளியிட்டு இருப்பதை தொன்மையான, பாரம்பரியமிக்க தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டிக்கிறது.
திரைத்துறையின் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண முயற்சி எடுக்கும்போது, திரைப்படங்களில் மிக பிரதான பங்காற்றும் எங்கள் தென்னிந்திய நடிகர் சங்கத்தை ஆலோசிக்காமல், ஆயிரக்கணக்கான நடிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வுரிமையை பறிக்கும் விதமாக, 01.11.2024 முதல் படப்பிடிப்புகளை முழுமையாக நிறுத்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றிருப்பது பெரும் கண்டனத்துக்குரியது.
அனைத்து தரப்பு திரைத் தொழிலாளிகளையும் பாதிக்கும் இந்த தன்னிச்சையான அவசர தீர்மானத்தை உடனடியாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் திரும்ப பெறவேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் உறுதியாக வலியுறுத்துகிறது.
29.07.2024 பத்திரிகை செய்தியில் குறிப்பிட்ட மற்ற தீர்மானங்களையும் மறுபரிசீலனை செய்து, நட்புறவு பாதிக்காமல் சுமூகமான தீர்வு காண தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முன்வரும் என எதிர்பார்க்கிறோம்.
இது தொடர்பாக விரைவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.