இணையத்தில் இலவசமாக திருக்குறள் திரைப்படம் !!
திருவள்ளுவருக்கு ஓபனிங் சாங், துப்பாக்கி – தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் !!
எங்கு திருவள்ளுவர் சிலை வேண்டுமானாலும் எங்களை அணுகலாம் – விஜிபி சந்தோஷம்
திருவள்ளுவர் எந்த மதம், எந்த ஜாதி என தெரியாது ஆனால் அவர் பற்றி தெரிந்த ஒன்றே ஒன்று அவர் தமிழர் என்பது தான் – ராம்ராஜ் குழும தலைவர் கே ஆர் நாகராஜன் !!
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ” Welcome Back Gandhi ” என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் இயக்கத்தில், திருக்குறளை மையமாக வைத்து உருவான ‘திருக்குறள்’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகம் முழுக்க உள்ள மக்களுக்குக் கொண்டு செல்லும் வகையில், இப்படம் யூடுயூப் ( YouTube ) தளத்தில் வெளியிடும் விழா, இன்று படக்குழுவினருடன் பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் பேசியதாவது..,
இந்த படம் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. படம் வெளிவந்த போது, நல்ல விமர்சனங்கள் வந்தது ஆனால் திரையரங்குக்குச் சரியான ஆட்கள் வரவில்லை. அதனால் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று, யூடுயூப்பில் இலவசமாக வெளியிடலாம் என முடிவு செய்தோம். ராம்ராஜ் குழும தலைவர் நாகராஜ் அவர்கள் விளம்பரம் தந்து வெறும் கார்ட் மட்டும் போடுங்கள், என்று பெருந்தன்மையோடு சொன்னார். அவருக்கு நன்றி. இப்படம் உலகம் எங்கும் போய்ச் சேரும் காலம் கடந்து நிற்குமென நம்பிக்கை உள்ளது. அனைவருக்கும் நன்றி.
ஐ ஏ எஸ் அகாடமி தலைவர் தமிழய்யா பேசியதாவது..,
திருக்குறள் சார்ந்த ஒரு திரைப்படம் என்பது திரைத்துறையின் நீண்ட நாள் கனவு. அதை யார் எடுத்திருக்கிறார்கள் என்றால் மிகச்சரியான ஒரு இயக்குநர் செய்துள்ளார். ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ” Welcome Back Gandhi ” என்ற பெயரிலும் திரைப்படமாக உருவாக்கிய இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் இதைச் செய்திருப்பது சிறப்பு. இப்போது இது மக்கள் அனைவருக்கும் செல்லும் வகையில் யூடுயூப்பில் வெளியிடுவது இன்னும் சிறப்பு. இப்படத்தின் கதையை செம்பூர்.கே.ஜெயராஜ் மிக அற்புதமாக உருவாக்கியுள்ளார். இது தமிழர்கள் அனைவரிடத்திலும் சென்று சேர வேண்டும். அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன் பேசியதாவது..,
திரைத்துறையில் பலவிதமான படங்கள் உள்ளது அதில் திருக்குறளை வைத்துப் படமெடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. இதை உருவாக்கிய ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனத்திற்கும் A.J.பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் என் நன்றிகள். இப்படம் மக்கள் அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தில் யூடுயூப்பில் வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி. இப்படத்தைக் கண்டிப்பாக மக்கள் கொண்டாடுவார்கள். நன்றி.
தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியதாவது..,
திருக்குறள் படம் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக அனைத்து பத்திரிக்கைகளும் பாராட்டினார்கள் அதற்கு முக்கிய காரணம் பாலகிருஷ்ணன் தான். காமராஜ், காந்தி, திருக்குறள் என எல்லாவற்றையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற வேள்வியுடன் அவர் செயல்பட்டு வருகிறார். இப்போது சினிமா மாறிவிட்டதாகச் சொன்னார். ஆமாம் இப்போது புது புது துப்பாக்கிகளால் சுடுகிறார்கள். திருவள்ளுவருக்கு ஓபனிங் சாங், துப்பாக்கி எல்லாம் தந்தால் நன்றாக இருக்குமா?. திருக்குறள் படத்தின் முக்கிய நோக்கமென்ன மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது தான். அதை மனதில் வைத்து இதை யூடுயூப்பில் வெளியிடுவது மிகச்சிறந்த முயற்சி. இதற்கு உதவும் ராம்ராஜ் நிறுவனத்தின் நாகராஜ் அவர்களுக்கு நன்றி. திருவள்ளுவரை உலகம் முழுக்க கொண்டு சென்றுள்ள விஜிபி விஜி சந்தோஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இப்படத்திற்கு மக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் நன்றி.
விஜிபி புகழ் விஜி சந்தோஷ் பேசியதாவது..,
திருக்குறள் விழாவில் கலந்துகொள்வதே மகிழ்ச்சி. உலகம் முழுக்க புகழ்பெற்ற ஒருவரைப் பற்றிப் படமெடுப்பது சாதாரண விசயமில்லை.
அன்பு நண்பர் பாலகிருஷ்ணன் அவர்களின் இந்த சீரிய முயற்சிக்கு நன்றி. ராம்ராஜ் குழும நாகராஜ் ஐயா அவர்கள் இதற்கு உதவியுள்ளார் அவருக்கு என் நன்றிகள். இந்தப்படம் இப்போது யூடுயூப்பில் வெளியாகியுள்ளது. இதனைப் பத்திரிக்கை நண்பர்கள் உலகம் முழுக்க கொண்டு செல்ல வேண்டும். விஜிபி தமிழ் சங்கம் 198 திருவள்ளுவர் சிலைகளை உலகம் முழுக்க வைத்துள்ளோம். ஆப்ரிக்கா, அமெரிக்கா என உலகம் முழுக்க தந்துள்ளோம். எங்கு திருவள்ளுவர் சிலை வேண்டுமானாலும் எங்களை அணுகலாம் எனச் சொல்லிக்கொண்டு விடை பெறுகிறேன் நன்றி,
ராம்ராஜ் குழும தலைவர் கே ஆர் நாகராஜன் பேசியதாவது..,
திருக்குறள் என்பது நமக்குப் பள்ளிகளிலேயே சொல்லித்தரப்பட்டது. 1330 குறளை படித்து, பாஸ் செய்வதை விட அதில் ஒரு குறள் படி நடந்தால் வாழ்க்கை சிறக்கும். திருவள்ளுவர் எந்த மதம், எந்த ஜாதி எனத் தெரியாது ஆனால் அவர் பற்றி தெரிந்த ஒன்றே ஒன்று அவர் தமிழர் என்பது தான். அவருக்கு உருவமில்லை என்பதால் தான், அவரை தெய்வப்புலவர் எனப் பெயர் கிடைத்துள்ளது. எந்த இடத்திலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் மக்களுக்காக குறள் தந்தவர். எல்லா நாடுகளிலும் மக்களை நல்வழிப்படுத்த பல நூல்கள் உண்டு. அதிலெல்லாம் சிறந்தது திருக்குறள். பொய்க்கு நிறைய அவதராம் உள்ளது, உண்மைக்கு ஒரே வடிவம் தான் அது திருக்குறள். அதை மிக அழகான கதையாக்கி அதற்குச் சரியான நடிகர்களைப் பிடித்து படத்தைச் செய்துள்ளார்கள். வாசுகியாக நடித்தவர் எங்கள் திருப்பூர் பெண் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இப்படி ஒரு சாதனை செய்துவிட்டு நான் ஒரு அணில் மாதிரி என்று எளிமையாக இருக்கிறார், ஏ ஜே பாலகிருஷ்ணன். காமராஜ் வாழ்க்கை வரலாற்றை இவர் தான் எடுத்தார் என தெரியவந்தபோது அவர் மீது பெரிய மரியாதை வந்தது. மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு இருக்கிறது. நான் காமராஜ் படம் பார்த்து அவரை வாழ்த்துவது போல, உலகம் முழுக்க இனி திருக்குறளைப் பார்த்து இவரைக் கொண்டாடுவார்கள். அறம் அன்பு இதைத்தான் திருவள்ளுவர் சொல்லியுள்ளார். இது தான் உலகம் முழுமைக்குமானதாக உள்ளது. இப்படத்தை எடுத்த குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி, இசையமைத்துள்ளார்.
கலை இயக்குநராக சுரேஷ் கலேரியும், ஆடைவடிவமைப்பாளராக சுரேஷ் குமாரும் பணியாற்றியுள்ளனர். செம்பூர்.கே.ஜெயராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுத, எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இத்திருப்பணியில் மதுரை டி.பி.ராஜேந்திரன் முதன்மைப் பங்களிப்புச் செய்துள்ளார். வி.ஐ.டி.வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமையிலான தமிழியக்கமும் இப்பணியில் இணைந்துள்ளது.
ரமணா கம்யூனிகேஷன்ஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.
தயாரிப்பு நிர்வாகம் – S. ஜெய்சங்கர்
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன்.
தற்போது யூடுயூப் தளத்தில் இப்படம் இலவசமாக கிடைக்கிறது.