அடையாள வேலை நிறுத்தம் – அறிக்கை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், கடந்த மூன்று வருடங்களாக முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளங்கள் அளவுக்கு அதிகமாக அதிகரித்து, தற்போது பல தயாரிப்பாளர்களை நஷ்டத்தில் ஆழ்த்தி வருவதால், அவர்கள் இனிமேல் வருமானத்தில் பங்கு (Revenue Share) என்ற முறையில் சம்பளங்களுக்கு ஒப்புக்கொண்டு தயாரிப்பாளர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று நடிகர் சங்கத்திடம் நேரடியாகவும், கடிதம் மூலமும் கேட்டு வருகிறது.
ஹிந்தி சினிமா துறையில் இந்த வருமானத்தில் பங்கு (Revenue Share) என்கிற முறை கடந்த 15 வருடங்களாக முன்னணி நடிகர்களான அமீர் கான், சல்மான் கான், ஷாருக் கான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் போன்றவர்களாலும், தெலுங்கு சினிமா திரையில் பல முன்னணி நடிகர்களால் இதே முறையும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக அந்த மொழி படங்களின் நஷ்டங்கள் பெருவாரியாக குறைக்கப்பட்டு, தயாரிப்பாளர்கள் மீண்டும் திரைப்படங்கள் எடுக்கவும், நஷ்டங்களிலிருந்து மீண்டு வரவும் வழி உள்ளது.
அனால், தமிழ் சினிமாவில், தயாரிப்பாளர் ஒரு திரைப்படம் எடுத்து நஷ்டம் அடைந்தால், அவரை காப்பாற்ற எந்த முன்னணி நடிகரும், தொழில்நுட்ப கலைஞரும் முன் வராமல், வேறு மொழி தயாரிப்பாளர்களுக்கு தேதி கொடுத்து, தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை தவிர்த்து விடுகிறார்கள். இந்த காரணத்தினால், பல தயாரிப்பாளர்கள் அடுத்து திரைப்படம் எடுக்க முடியாத சூழ்நிலை தற்போது உள்ளது.
இந்த சூழ்நிலை மாறவும், முன்னணி நடிகர்கள், தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்து, வருமானத்தில் பங்கு (Revenue Share) என்ற முறையில் சம்பளங்கள் வாங்கி நடிக்க வலியுறுத்தி, அனைவரின் கவனத்திற்கு இந்த விஷயத்தை கொண்டு வர, ஒரு அடையாள வேலை நிறுத்தம் (Token Strike) இன்று (மே 2, 2026) கடைபிடிக்கப்படும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. இதனை தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் முழுமனதாக ஆதரிக்கிறது.. இன்று எந்த படப்பிடிப்பும், போஸ்ட்-ப்ரொடக்ஷன் (Post-Production) வேலைகளும் நடைபெறாது.
இந்த அடையாள வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பில் உள்ள அனைத்து சங்கங்களுக்கும், FEFSI மற்றும் அதை சார்ந்துள்ள அனைத்து சங்கங்களுக்கும் எங்கள் நன்றிகள்.
முன்னணி நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும், இந்த விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் விரைவில் பேச்சு வார்த்தைக்கு வந்து, சுமூக முடிவு எட்ட ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறோம்.
நன்றியுடன்,
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில்,
T.G. தியாகராஜன்
தலைவர்
T. சிவா
பொது செயலாளர்
G. தனஞ்ஜெயன்
பொருளாளர்




