பிரித்திவிராஜ் சுகுமாரன் நடித்திருக்கும் ’தி கோட் லைஃப்’
பிராந்தியத்தை தாண்டி, மாநில எல்லையை தாண்டி இந்திய நடிகர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களின் படத்திற்கு விளம்பரம் செய்து உதவுவது மிகவும் ஆரோக்கியமான விஷயம். அந்த வகையில், ரசிகர்கள் நீண்ட நாட்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் தேசிய விருது பெற்ற பிளெஸி இயக்கத்தில், பிரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள ‘தி கோட் லைஃப்’ படத்தின் முதல் பார்வையை ’பாகுபலி’ மூலம் இந்திய ரசிகர்கள் எல்லோர் மனதையும் கவர்ந்த நடிகர் பிரபாஸ் வெளியிட்டுள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஏப்ரல்10, 2024 அன்று வெளியாகிறது. உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை மிகப்பெரிய சர்வைவல் அட்வென்சர் என்கிறது படக்குழு. இதுபோன்ற சர்வைவல் அட்வென்சர் கதைகள் இந்திய சினிமாவில் அரிதாகவே வருகிறது. அதுவும் இது உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது என்பது இந்தப் படத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது. இந்தப் படத்தின் முதல் பார்வையை பிரித்விராஜூடன் ‘சலார்’ படத்தில் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ரெபல் ஸ்டார் பிரபால் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வலி, தீவிரம், நம்பிக்கை, தீர்மானம் என பலவற்றின் கலவையாக ஒரு ரக்டான லுக்கில் இந்த முதல் பார்வை போஸ்டரில் பிரித்விராஜ் உள்ளார்.
முதல் பார்வை குறித்தும் படம் பற்றியும் பிரித்விராஜ் சுகுமாரன் பகிர்ந்து கொண்டதாவது, “எனது நண்பரும், இந்திய திரை உலகின் ஒரு இன்றியமையாத சக்தியாக இருக்கும் பிரபாஸ் அவர்கள், என் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவது எனக்கு மிகப்பெரிய பெருமை. ’தி கோட் லைஃப்’ திரைப்படம் உருவாக்குவதில் நிறைய சவால்கள் இருக்கும் என்பது எனக்கு முன்பே தெரியும். இருந்தாலும் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் என் எல்லைகளைத் உடைத்து இதில் நடித்துள்ளேன். என் வாழ்நாளில் ஐந்து வருடங்களை இந்தப் படத்தின் நஜீப் கதாபாத்திரத்திற்காக அர்ப்பணித்துள்ளேன். உடல்ரீதியாக பல மாற்றங்களை சந்திக்க வேண்டி இருந்ததாலும் இந்தக் கதாபாத்திரத்தின் தோற்றத்தையும் உணர்வையும் முழுமையாக்குவது மட்டுமே என் இலக்காக இருந்தது. ‘பாகுபலி’, ‘கேஜிஎஃப்’ போன்ற படங்களுக்கு இணையாக இந்த படம் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்ப மிக பிரம்மாண்டமான காட்சி அமைப்பை இருக்க வேண்டும் என்பதற்காகவே சிரமப்பட்டு வெவ்வேறு சவாலான லொகேஷனை தேர்ந்தெடுத்து படமாக்கினோம். வெளிச்சத்துக்கு வராத சரித்திர நாயகர்களின் பெருமையை உலகெங்கும் கொண்டு செல்லும் படமாக இது இருக்கும் என்பதில் உறுதி. படத்தின் முதல் பார்வை போஸ்டரை இன்று வெளியாகிய நிலையில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாக இருக்கிறது. நாங்கள் இந்தப் படத்தை உருவாக்கி ரசித்த அளவுக்கு பார்வையாளர்களும் ரசிப்பார்கள் என நம்புகிறோம்” என்றார்.
விஷுவல் ரொமான்ஸ் தயாரித்துள்ள ’தி கோட் லைஃப்’ படத்தில், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், இந்திய நடிகர்களான அமலா பால் மற்றும் கே.ஆர். கோகுல், பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக் அபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரவிருக்கும் படத்தின் இசை இயக்கம் மற்றும் ஒலி வடிவமைப்பை அகாடமி விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் செய்துள்ளனர். படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை சுனில் கே.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ. ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய முயற்சியாகும். இதன் தயாரிப்பு தரம், கதைசொல்லல் மற்றும் நடிப்புத் திறன் ஆகியவற்றில் புதிய வரையறைகளை அமைத்துள்ளது. சிறந்த திரையரங்க அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும்.
இந்திய சினிமாவின் மிகப் பெரிய பாலைவனப் படமான ’தி கோட் லைஃப்’ திரையரங்குகளில் ஏப்ரல் 10, 2024 அன்று இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
விஷுவல் ரொமான்ஸ் பற்றி:
விஷுவல் ரொமான்ஸ் என்பது கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். 7 ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில், இந்த நிறுவனம் சிறந்த படைப்புகளைக் கொடுத்து முக்கியமான தயாரிப்பு நிறுவனமாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. ‘100 இயர்ஸ் ஆஃப் க்ரிசோஸ்டம்’ என்ற 48 மணிநேரம் நீடித்த ஒரு ஆவணப்படத் தயாரிப்பின் மூலம் விஷுவல் ரொமான்ஸ் சினிமா உலகில் ஒரு மைல்கல்லை எட்டியது. இந்தப் படம் பரவலாகப் பாராட்டப்பட்டது மட்டுமல்லாது, கின்னஸ் புத்தகத்திலும் இது இடம்பெற்றுள்ளது. இது சினிமா மீது விஷுவல் ரொமான்ஸின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. இயக்குநர் பிளெஸி இந்தப் படத்தில் சிறப்பான கதையை சொல்லியுள்ளார். ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் ஆறு கேரள மாநில திரைப்பட விருதுகள் உட்பட, இந்திய சினிமாவின் தலைசிறந்த விருதுகளை பிளெஸி பெற்றுள்ளார். பிளெஸி ஐப் தாமஸின் திறமையான இயக்கத்தின் கீழ், விஷுவல் ரொமான்ஸ் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளது. நிச்சயம் பார்வையாளர்களுக்கு புதுவிதமான சினிமா அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும்.