கில்ட் பிரச்சினைகள் குறித்து தலைவர் ஜாக்குவார் தங்கம் அறிக்கை!

கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் சங்கத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக சில பிரச்சினைகள் சென்றுகொண்டு இருக்கிறது. இதுகுறித்து சந்தா கட்டாத ஒரு சில உறுப்பினர்கள் என்னை பற்றி தவறாக சொல்லி வருகின்றனர். கடந்த 2015ல் நான் கில்ட் செயலாளராக பொறுப்பேற்றேன். அப்போது சங்கத்தில் சில ஆயிரங்கள்தான் இருந்தது. 2018ல் தலைவரான பின்பு இன்று ரூ.6.50 கோடி உள்ளது. கில்ட் மூலம் நிறைய உதவிகள் செய்து வந்தோம். கில்ட் தற்போது நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. இதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். மேலும் உறுப்பினர்கள் மற்றும் சில நிர்வாகிகள் உதவியுடன் இவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது.

கடந்த 2018ல் நடந்த தேர்தலில் நான் தலைவராக தேர்வு செய்யப்பட்டேன். எனது அணியில் சிலரும் எதிர் அணியில் சிலரும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் வந்ததும் சங்கத்தை பூட்ட வேண்டும் என்றனர். நான் ஏன் பூட்ட வேண்டும் என்றேன். இதில் சில விஷயங்கள் நடக்கிறது பூட்டிவிட்டு மீண்டும் திறக்கலாம் என்றனர்‌. நான் முடியாது என்றேன். அப்போது தனியாக மீட்டிங் நடத்தினர். வங்கியில் உள்ள பணத்தை எடுக்க தங்களுக்கு தான் உரிமை உள்ளது என்றனர்.‌ ஏனென்றால் அவர்களது நோக்கம் பணத்தை எடுப்பது தான். வங்கியில் போலியாக லெட்டர் பேட் தயாரித்து பணத்தை எடுக்க முயற்சித்தனர். மீண்டும் ஒரு மீட்டிங் நடத்தி என்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியதாக கூறினார்கள். நான் அவர்களை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினேன். இதனால் அவர்கள் நீதிமன்றம் சென்றனர். ஆனால் நீதிமன்றம் அவர்கள் உள்ளே வரக்கூடாது என்று உத்தரவிட்டது. அவர்கள் மீது பல புகார்கள் காவல்நிலையத்தில் உள்ளது. மேலும் வடபழனியில் ரூ.13கோடியில் சங்கத்திற்கு இடம் பார்த்தோம். இதன்‌ மூலம் கில்ட் உறுப்பினர்களுக்கு உதவி செய்ய நினைத்தோம். இது எதிரிகளுக்கும் சில சங்கங்களுக்கும் பிடிக்கவில்லை. இதனால் என் மீது பல குற்றச்சாட்டுக்கள் வைத்தனர். கில்ட் பணத்தை எடுத்து விட்டேன் என்றனர். தற்போது அவர்கள் மீது நான் வழக்கு தொடுத்து எப்ஐஆர் போடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட உள்ளது. சங்கத்திற்கு தேர்தல் வேண்டும் என்று நான்தான் நீதிமன்றத்தில் கேட்டேன். ஆனால் நான் தேர்தல் நடத்தமாட்டேன் என்கிறேன் என்று சொல்கின்றனர்.

சந்தா கட்டமுடியாத விரல்விட்டு எண்ணக்கூடிய சில உறுப்பினர்கள் தேர்தல் நடத்த விடமாட்டேன் என்கின்றனர். மேலும் கில்ட் சங்கம் போலவே இவர்களும் ஒரு சங்கத்தை தொடங்கி கோடிக்கணக்கில் வசூல் செய்தனர். இதையும் நீதிமன்றம் மூலம் தடுத்தோம். நான் இருக்கும் வரை பணத்தை எடுக்க முடியாததால் வேறு நபரை வைத்து எடுக்க பார்க்கிறார்கள். கொரோனாவுக்கு முன்பு என்னை அழைத்து பேரம் பேசினர். தற்போது எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் எல்லாம் தயாரிப்பாளர்கள் கிடையாது மீடியேட்டர்கள்தான்.

நான் 2023 வரை உள்ள உறுப்பினர்களை வைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்கிறேன். ஆனால் அவர்கள் 2013வரை உள்ள உறுப்பினர்களை வைத்து மட்டுமே தேர்தல் நடத்த வேண்டும் என்கின்றனர் இதுதான் தற்போது வரை பிரச்சினயாக உள்ளது. மூன்று வருடமாக தேர்தல் நடத்த முயற்சித்து வருகிறேன். துரைசாமி என்பவர் மற்றவர் மாதிரி அழகாக போலி கையெழுத்து போடக்கூடியவர் என்று தெரிவித்துள்ளார்.

–Priya.Pro