தமிழ் திரையுலகின் ஜொலிக்கும் நட்சத்திரம்  பிரதீப் ரங்கநாதன் !!

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்

வாழ்த்து மழையில் நனையும் பிரதீப் ரங்கநாதன்

சினிமா கனவுகளோடு திரிந்த மிக எளிய இளைஞனான பிரதீப் ரங்கநாதன், இன்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இயக்குநராக, நட்சத்திர நடிகராக மாறியிருக்கிறார். இன்று பிறந்த நாள் கொண்டாடும், தமிழ் திரையுலகின் அடுத்த நட்சத்திரமாக ஜொலிக்கும் பிரதீப் ரங்கநாதனுக்கு பல பக்கங்களிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நடுத்தர வர்க்க குடும்பத்து இளைஞனாக சினிமா கனவுகளோடு வாழ்வைத் தொடங்கிய பிரதீப் ரங்கநாதனுக்கு, இயல்பிலேயே கதை சொல்லும் திறமை பளிச்சிட்டது. தான் பார்க்கும் இன்றைய இளைய சமூகத்தின் இயல்பை, கதையாக்கி அவர் இயக்கிய அப்பா லாக் குறும்படம் திரைத்துறையில் பெரும் கவனம் ஈர்த்தது. இந்த குறும்படம் மூலம் அவருக்கு கோமாளி பட வாய்ப்பு கிடைத்தது. வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில்,  ஜெயம் ரவி நடிப்பில் அவர் இயக்கிய “கோமாளி” திரைப்படம் பெரு வெற்றி பெற்று, 100 நாட்களை கடந்தது. பின்னர் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில்,  அவர் இயக்கிய அப்பா லாக் குறும்படத்தை திரைக்கதையாக்கி, தானே நடித்து இயக்கிய “லவ் டுடே” படம், தமிழ் திரையுலகில் புயலைக் கிளப்பி, பல  புதிய சாதனைகள் படைத்தது. தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பேசுபொருளான “லவ் டுடே” படம், தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு அறிமுக நாயகன் நடிப்பில் 100 கோடியை தாண்டிய படமாக சாதனை படைத்தது. பிரதீப் ரங்கநாதன் மக்களின் மனம் கவர்ந்த நாயகனாக மாறினார்.

தற்போது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், ஓ மை கடவுளே இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. மேலும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில்,  முன்னணி  இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். அவரது பிறந்த நாளையொட்டி, இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில்,  ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில்,  புதுமையான முறையில் ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதனின் தோற்றம் வடிவமைக்கப்பட்டிருப்பதால், இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத இளம் நட்டத்திரமாக ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.