“Neelira” – Trailer Launch Movie
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம், ஸ்பிரிட் மீடியா ராணா டக்குபட்டி இணைந்து வழங்கும் ‘நீளிரா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு
இந்திய சினிமாவின் முன்னணி ஆளுமைகளான கார்த்திக் சுப்புராஜ்-ராணா டக்குபட்டி தயாரிப்பில் ஆவணப்பட இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா, கபிலா வேணு நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
பொதுவாக ஒரு படம் பார்க்கும்போது நமக்கு அது தொடர்பான வேறு வேறு சிந்தனைகள் வந்து செல்லும். இந்தப் படத்தை பார்க்கும் போது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு தான் இருந்தது. குறிப்பாக அந்த வீட்டில் இருக்கும் கேரக்டர்ஸ் ஒரு இரவை எப்படி கடந்து செல்வார்கள் என்ற எண்ணங்கள் தான் என்னுள் ஓடிக் கொண்டிருந்தது.
படம் முடிந்த பிறகு இயக்குநரை சந்தித்து ஒரு காட்சியை குறிப்பிட்டு இயக்குநரை பாராட்டினேன். படத்தின் ஒளிப்பதிவு உண்மைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் வகையில் அமைந்திருந்தது, அழகாக இருந்தது, சில இருள் கூட வெளிச்சமாக இருந்தது,” என்றார்.
தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், ”இங்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் திரைத்துறையின் லெஜென்டுகள் அனைவருக்கும் நன்றி. நான் சின்ன வயதில் இருந்து பார்த்தவர்களும் இருக்கிறார்கள், நான் வளரும்போது பார்த்தவர்களும் இருக்கிறார்கள், நான் வளர்ந்த பிறகு பார்த்தவர்களும் இருக்கிறார்கள். அனைவரையும் ஒன்றாக இங்கு பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நான் எட்டு வயதில் இருந்தே மேடை ஏறி பேசி இருக்கிறேன் ஆனால் இந்த மேடையில் எனக்கு சற்று பதட்டம் இருக்கிறது. இந்தப் படத்தை எங்கள் நிறுவனம் தயாரித்திருக்கிறது என்பது எங்களுக்கு பெருமிதம் ஆக இருக்கிறது. இதில் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்திருப்பதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
நான் இங்கிலாந்திலிருந்து திரும்பிய பிறகு 2012ம் ஆண்டில் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் தொடங்கினோம். நான், கார்த்திக் சுப்புராஜ், பவன், கல்யாண் அனைவரும் இணைந்து தொடங்கினோம். முதல் படமாக ‘மேயாத மான்’ படத்தை தயாரித்தோம். ‘நீளிரா’ திரைப்படம் எங்களுடைய 18வது திரைப்படம்.
‘மேயாத மான்’ படத்தயாரிப்பிற்கு முன்பே இயக்குநர் சோமிதரனை எனக்குத் தெரியும். இன்றைக்கு சொல்ல வேண்டும் என்றால் சோமி எங்களுக்கு நண்பர் மட்டுமல்ல குல சாமி. அந்த அளவுக்கு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார். நிறைய படங்களை தயாரித்து இருந்தாலும் ஒரு சில படங்கள்தான் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும். அந்த வகையில் ‘நீளிரா’ எங்களுடைய மனதிற்கு நெருக்கமான படம். இதுவரைக்கும் இந்தத் திரைப்படத்தை பார்த்த அனைவரும் நல்ல திரைப்படத்தை தான் தயாரித்திருக்கிறீர்கள் என்று பாராட்டினர். ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்தப் படத்தை வெளியிட வேண்டும் என தீர்மானித்து யாருக்கெல்லாம் திரையிடலாம் என திட்டமிட்ட போது முதலில் நடிகர் ராணாவை தொடர்பு கொண்டு அவருக்கு திரையிட்டு காண்பித்தோம். பார்த்து முடித்தவுடன் என்னுடைய பங்களிப்பு உறுதி என்று சொன்னார். அதற்குப் பின் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு திரையிட்டு காண்பித்தோம். அவர்களும் உடனடியாக தமிழகம் முழுவதும் திரையிடுவதற்கு மகிழ்ச்சியுடன் முன் வந்தனர். அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இத்திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறது. எங்களால் முடிந்த அளவிற்கு இந்த திரைப்படத்தை நல்லதொரு நிலையில் வெளியிடுகிறோம். இப்படம் நல்லதொரு அதிர்வலையை ஏற்படுத்தும் என நம்புகிறோம். இந்தப் படத்திற்காக நாங்கள் ஒரு பாடலை உருவாக்கினோம் அந்தப் பாடலை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்த திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது சாத்தியமாகி இருக்கிறது என்றால் இதன் பின்னணியில் உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் பேசுகையில், ”ஒரு வாரத்திற்கு முன் இப்படத்தை பார்த்தோம். இந்த படத்தை பார்க்கும் போது அதைப்பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் பார்க்கத் தொடங்கினோம். பார்த்துக் கொண்டிருக்கும் போது அடுத்து என்ன அடுத்து என்ன என்ற ஒரு கிரிப்பிங் இருந்தது. ஒரு திரில்லர் திரைப்படத்தை பார்த்த ஃபீலிங் இருந்தது. இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது அதில் நடித்திருக்கும் நடிகர்கள் தான். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தேர்வு செய்யப்பட்ட முகங்கள் இந்த கதைக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது. நடிகர்கள் தங்களின் கேரக்டர்களை உணர்ந்து நடிக்கும் போது நம்மையும் அறியாமல் அந்த கேரக்டர்களுக்குள் அழைத்துச் சென்று விடுகிறார்கள். இயக்குநர் சோமிதரனுக்கு வாழ்த்துகள். படத்தை தயாரித்து வெளியிடும் தயாரிப்பாளருக்கும் நன்றி,” என்றார்.
இயக்குநர் வினோத் ராஜ் பேசுகையில், “இந்த படத்தை பார்க்க அழைப்பு வந்த போது இலங்கை போரின் பின்னணியில் ஒரு கதையை சொல்ல இருக்கிறார்கள், அது எவ்வளவு கனமாக இருக்கப் போகிறது, அந்த கனத்தை நாம் எப்படி தாங்க போகிறோம் என்றவாறு மனநிலையை தயார்படுத்திக் கொண்டுதான் பார்க்க தொடங்கினோம். ஆனால் எங்களுக்கு ஒரு திரில்லர் படத்தை பார்த்த ஃபீலிங் தான் இருந்தது. படம் அவ்வளவு எங்கேஜிங்காக, கிரிப்பாக என்பதை சொல்லும் வகையில் இருந்தது.
இதில் நடித்த நடிகர்களை தேர்வு செய்தது குறித்து இயக்குநர் சோமிதரன் எங்களிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதுவே சுவாரஸ்யமானதாக இருந்தது, அவருக்கு வாழ்த்துகள்.
இந்த படத்தின் சிறப்பம்சம் என்று நான் சொல்ல வேண்டும் என்றால் அதனுடைய பிரசன்டேஷன், அதற்கான பிலிம் லாங்குவேஜ். இந்தப் படத்தின் போட்டோகிராபி, லொகேஷன், ஆர்டிஸ்ட், எடிட்டிங் என எல்லாம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக அந்த வீடு. படம் பார்த்துவிட்டு செல்பவர்களுக்கு அந்த வீடு நினைவில் இருக்கும்.
இலங்கை தமிழர்களை பற்றியும் அவர்களுடைய உணர்வுகளையும் கார்த்திக் சுப்புராஜ் தொடர்ந்து தன் படங்களில் இடம்பெறச் செய்து வருகிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளராக அவரது பெயரையும் இணைத்து கொண்டிருப்பது இலங்கை தமிழ் மக்கள் மீதான அவருடைய அன்பை பிரதிபலிக்கிறது. இந்த படத்தை தயாரித்ததற்காக உண்மையில் கார்த்திக் சுப்புராஜூம் கார்த்திகேயன் சந்தானமும் பெருமைபட்டுக் கொள்ளலாம்,” என்றார்.
இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ், கார்த்திகேயன் சந்தானம், ராணா டக்குபட்டி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இயக்குநர் சோமிதரன் கேட்டிருந்தால் பிரபலமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கலாம். ஆனால் திரைக்கதையை மட்டுமே நம்பி இப்படத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தை பார்க்கும் போது இயக்குநரின் ஆளுமையை கண்டு வியந்தேன்.
இந்தப் படத்தில் இதுதான் கிளைமாக்ஸ் என்று தெரிகிறது. அந்த இடத்திற்கு சென்ற பிறகு, அங்கிருந்து இயக்குநர் வேறு ஒரு விஷயத்தை சொல்கிறார். தயாரிப்பாளர்களே, தைரியமாக இருங்கள். நீங்கள் ஒரு வெற்றிகரமான படத்தை வழங்கியுள்ளீர்கள், வாழ்த்துகள்,” என்றார்.
நடிகை கபிலா வேணு பேசுகையில், ”நான் திரைப்பட நடிகை அல்ல. பாரம்பரிய கலை வடிவம் சார்ந்த மேடை கலைஞர் மற்றும் பரதநாட்டிய கலைஞர். இயக்குநர் சோமிதரன் அவருடைய தாயாரின் சாயலில் இருப்பதாக சொல்லி என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தார். இதற்காக நான் அவருக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் என்னுடைய பங்களிப்பும் இருந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி.
நடிகர் நவீன் சந்திரா உள்ளிட்ட என்னுடன் நடித்த சக கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் சோமிதரன் நல்லதொரு கதைசொல்லி. படப்பிடிப்பிற்கு செல்லும் முன் பத்து நாட்கள் ஒர்க் ஷாப் வைத்து அனைவரிடமும் கதையை சொன்னார். இந்த படத்தில் இடம்பெற்ற வீட்டில் எந்தெந்த அறைகளில் எந்தெந்த பொருட்கள் இருக்கும் என்பது கூட எனக்கு நன்றாக தெரியும். இந்தப் படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்,” என்றார்.
இயக்குநர் ரத்ன குமார் பேசுகையில், ”ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் முதல் படமான ‘மேயாத மான்’ படத்தின் இயக்குநர் என்பதை இந்த மேடையில் சொல்லிக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன். என்னுடைய முதல் படத்தின் ஹீரோ சனந்த், இப்போது நான் இயக்கிக் கொண்டிருக்கும் படத்தில் நடித்து வரும் விது ஆகிய இருவரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இதுவும் எனக்கு சந்தோஷத்தை தருகிறது.
நான் ஒரு படத்தை இயக்கும்போது அதில் இடம்பெறும் இலங்கை கதாபாத்திரங்களுக்கான பின்னணி மொழிநடைக்காக இயக்குநர் சோமிதரன் என்னுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அப்போதே உச்சரிப்பு இப்படி இருக்க வேண்டும் என உறுதியாக சொல்வார். அப்போதே அவர் ஒரு படைப்பாளராக எப்படி இருப்பார், அவருடைய படைப்புகள் எவ்வளவு வீரியமானதாக இருக்கும் என்று எனக்கு தெரிந்து விட்டது.
இலங்கை பிரச்சனை பற்றிய பார்வையை இந்த திரைப்படம் மாற்றி அமைக்கும். போருக்கும் நமக்கும் தூரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கோ ஒரு நாடு ஏதோ ஒரு நாடு மீது குண்டு வீசும் போது, கேஸ் சிலிண்டர் இல்லை என்று எங்கள் தெருவின் முனை கடையில் முட்டை போண்டா கிடைக்கவில்லை. எனவே அது நம்மை பாதிக்கவே செய்யும்.
நம்முடைய பக்கத்து நாட்டில் நம்முடைய சகோதரர்கள் பட்ட அவஸ்தைகளையும் பாதிப்புகளையும் இப்போது இந்த படத்தின் மூலம் நிறைய புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். கொஞ்ச நாள் நாம் அனைவரும் லாக் டவுனில் இருந்தபோது கஷ்டப்பட்டோம். ஆனால் ஈழத் தமிழர்கள் பல தசாப்தங்களாக அங்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்,” என்றார்.
இயக்குநர் பொன்ராம் பேசுகையில், ”இலங்கை பிரச்சனையை பற்றியும் இலங்கை மக்களை பற்றியும் இதற்கு முன் நிறைய படங்கள் வெளியாகி இருக்கிறது. நானும் இந்த படத்தை பார்க்கும் போது, எப்படி இருக்கும் என்று தெரியாமல் தான் பார்க்கத் தொடங்கினேன். இயக்குநர் சோமிதரன் எனக்கு மூன்றாண்டுகளாக தெரியும்.
நீளிரா என்றால் என்ன என்று எனக்கு முதலில் புரியவில்லை. அதன் பிறகு அவரிடம் கேட்டபோது, ‘நீண்ட இரவு ‘ என்று சோமிதரன் விளக்கம் அளித்தார். தமிழுக்கு இங்கிலீஷில் சப்டைட்டில் போட வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது, இது எப்படி எங்களை என்டர்டெய்ன் பண்ணும் என்று எதிர்பார்த்தேன். நான் பொதுவாக காமெடி கமர்ஷியல் என்ற படம் எடுப்பவன். ஆனால் படம் பார்க்க தொடங்கியதும் ஒரு ஸ்டேஜுக்குப் பிறகு வேகம் எடுக்கத் தொடங்கியது. செம திரில்லர். எல்லாவற்றையும் இயக்குநர் சமமாக பேலன்ஸ் செய்திருக்கிறார். அதுதான் இப்படத்தின் ஹை லைட். எல்லாவற்றையும் கடந்து ஒரு திரில்லருக்குள் ஒரு எளிய மக்களின் வாழ்வியலை சொல்வதுதான் இப்படத்தின் ஹைலைட்,” என்றார்.
இயக்குநர் ராஜு முருகன் பேசுகையில், ”நாம் இப்போது முக்கியமான போர் சூழலில் இருக்கிறோம். போர் எப்படி நடைபெறுகிறது என்றால் நாம் பார்க்கும் ஏவுகணைகள், ஆயுதங்கள், குண்டுவெடிப்புகள்… இது ஒரு பக்கம். மற்றொரு பக்கம் சத்தமில்லாமல் ஒரு கருத்தியல் போர் நடைபெறுகிறது. அதுதான் மிக முக்கியமான விஷயமாக நான் பார்க்கிறேன். முதலில் கருத்தியல் போர். அதன் பிறகு தான் ஆயுதப் போர்.
எழுத்தாளர் பவா செல்லத்துரை பேசுகையில், ”இப்படத்தின் இயக்குநர் சோமிதரனுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகால நட்பு இருக்கிறது.
எழுத்தாளர் பிரபஞ்சன் ”இவ்வளவுக்கு பிறகும் ஒரு பூ பூக்க தானே செய்கிறது” என்றொரு வரி எழுதி இருப்பார். இந்த வரியை ஈழத்துடன் பொருத்தி பார்த்துக் கொள்ளலாம். அவ்வளவுக்கு பிறகும் ஈழத்தில் ஒரு பூ பூக்கத் தான் செய்கிறது. எல்லோரும் அந்த பூவை ரசிக்கத்தான் செய்கிறார்கள்.
இந்தப் படத்தில் இடம் பெறுகிற பல இடங்களை நான் நேரில் பார்த்த அனுபவம் உண்டு. உண்மையில் சோமிதரன் என்றொரு மகத்தான கலைஞனை முதன் முதலில் கண்டுபிடித்தது பாலுமகேந்திரா தான்.
நானும், பாலுமகேந்திராவும் சேர்ந்து தான் காஞ்சிபுரத்தின் அருகில் உள்ள ஒரு ஊரில் சோமிதரனுக்கு திருமணத்தை நடத்தி வைத்தோம். சோமிதரனுடைய வெற்றியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிற லட்சோப லட்சம் ரசிகர்களில் நானும் ஒருவன்,” என்றார்.
இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், ”கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ எனக்கு மிகவும் பிடிக்கும், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மிகவும் பிடிக்கும். அவர் ஒரு அரசியலை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார். அன்பு அறமென எழுக என சொல்லும் படமாகத் தான் நான் நீளிராவை பார்க்கிறேன்.
ஒரு போர் படத்தை கத்தி இல்லாமல், துப்பாக்கி சத்தம் இல்லாமல், ரத்தம் இல்லாமல், ஒரு மரணம் கூட நிகழாமல் சோமிதரன் விவரித்திருப்பது கலையின் தீவிரம்.
இந்தப் படத்தை நான் ஏன் நேசிக்கிறேன் என்றால் எதுவும் இல்லாமல் ஒரு கலையை முன் வைக்க முடியும் என்பதை சோமிதரன் மிக அழகாக சொல்லி இருக்கிறார். உலகம் முழுவதும் வெறுப்பின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. எல்லா இடங்களிலும் வெறுப்பு கொப்பளித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு எதிராக ஒரு படத்தை அழகாக முன் வைத்திருக்கிறார். இந்த படம் ஓர் இரவில் ஒரு வீட்டில் இரண்டு ராணுவத்திற்கு இடையே நடக்கும் ஒரு படம்,” என்றார்.
இயக்குநர் லிங்குசாமி பேசுகையில், ”கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் நானும் இயக்குநர் ஆர்கே செல்வமணியும் தான் இப்படத்தை பார்த்தோம். அதற்குப் பிறகு இந்தப் படத்தை எப்படி கொண்டு மக்களிடம் சேர்ப்பிப்பது என்பதை பற்றி தான் கார்த்திக் + கார்த்திகேயன் சந்தானம் பேசிக் கொண்டிருந்தனர். அந்த வேலையை தற்போது அவர்கள் மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடன் ராணா இணைந்திருப்பது கூடுதல் சிறப்பு.
ஒரு படம் எவ்வளவு தூரம் எங்கேஜிங்காக வைத்திருக்கிறது என்பதை மட்டும் தான் பார்ப்பேன். அந்த வகையில் இந்தப் படம் எங்கேஜிங்காக இருக்கும் . படம் முழுவதும் ஒரு உயிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும்.
சோமிதரன் அந்த வாழ்க்கையை அனுபவித்ததாலும், பார்த்ததாலும் அந்த அளவிற்கு படத்தை நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். இந்தப் படம் முடிந்த பிறகும் பார்ட் 2 எடுக்கலாம். அந்த அளவிற்கு ஒரு நீண்ட டிராவல் இருக்கிறது,” என்றார்.
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேசுகையில், ”இதுபோன்ற ஒரு படத்திற்கு பக்க பலமாக ஆதரவு அளித்து வரும் ராணாவிற்கு நன்றி. உங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் தமிழ் திரையுலகத்திற்கு தற்போது அவசியம்.
இங்கு பேசிய இயக்குநர்கள் யாரேனும் கதையின் அந்த முக்கியமான சம்பவத்தை சொல்லி விடுவார்களோ என என் அருகில் அமர்ந்திருந்த சோமிதரன் பதற்றத்துடன் இருந்தார்.
நமது பக்கத்து நாட்டில் நம்முடைய சகோதரர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை இந்த படத்தில் சொல்லி இருக்கிறார்கள். அதிலும் ஒரு போர் சூழலில் ஒரு வீட்டில் இருப்பவர்களுக்கு அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது. போர் வீரர்கள், போராளிகள், பொதுமக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி சோமிதரன் அருமையாக சொல்லி இருக்கிறார்.
அம்மு படத்தை இயக்கிய இயக்குநர் சாருகேஷ் தான் என்னை முதன் முதலாக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு அறிமுகப்படுத்தினார். அன்று முதல் இன்று வரை இந்த நிறுவனத்துடன் தொடர்பு தொடர்கிறது. அந்த படத்தை பார்த்து தான் இயக்குநர் சோமிதரன் இப்படத்தில் ஒரு கேப்டன் கதாபாத்திரத்தை கொடுத்தார். இதனால் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு நன்றி.
இந்தப் படம் சாதாரணமானதாக தொடங்கி ஒரு போர் சூழலை, யுத்தத்தையே காண்பிக்காமல், அதை பற்றிய பயத்தை கேரக்டர் மூலமாக ரசிகர்களுக்கு உண்டாக்குகிறார்கள்.
ஒவ்வொரு கதாபாத்திரமும் ஈழத் தமிழர்கள் அனுபவித்த வலியை தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு நான் யாழ்ப்பாணத்திற்கு சென்றேன். ஒரு நாளில் திரும்பி விடுவதாக திட்டமிருந்தது. ஆனால் நான் அங்கு ஏழு நாட்கள் இருந்தேன்.
இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு சென்று பாருங்கள். அப்போதுதான் அந்த போர்ச் சூழலில் இருப்பது போன்ற உணர்வை இந்தப் படம் ஏற்படுத்தும்.
தமிழ் சினிமா உலக சினிமாவின் தரத்திற்கு நிகராக இருக்கிறது என்பதற்கான படமாகவும் இது இருக்கிறது என்பதால் இப்படத்தை நிச்சயமாக அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும்,” என்றார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், ”இந்த படத்தை பார்க்க அழைப்பு விடுத்த போது பார்க்க முடியவில்லை. ஆனால் இந்த படத்தை பற்றி நண்பர் ரத்னாவிடம் கேட்டேன் அவர் நிறைய இடங்களில் அழுதேன் என்றார். நானும் அனைவரையும் போல ரசிகர்களுடன் பார்க்க வேண்டும் என்பதற்காக ஏப்ரல் மூன்றாம் தேதி வரை காத்திருக்கிறேன்.
கார்த்திக் சுப்புராஜ் உடைய எல்லா படங்களிலும் இலங்கைத் தொடர்பாகவும் இலங்கை தமிழர் தொடர்பாகவும் விஷயங்கள் இடம்பெறுகின்றன. அவற்றை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக இந்த படத்தை தயாரித்திருக்கிறார் என நினைக்கிறேன். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.
நடிகர் ராணா டக்குபட்டி பேசுகையில், ”சோமிதரனின் சொந்த வாழ்க்கை தான் இந்தத் திரைப்படம். அடுத்த தலைமுறைக்கான சிறந்த படம் இது.
இங்கு பேசிய இயக்குநர்கள் ஜெர்மனி, வியட்நாம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற போர்களை பற்றி ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன, ஆனால் இந்தியாவில் இந்திய மண்ணில் இது பற்றிய படங்கள் வெளியாகவில்லை என குறிப்பிட்டனர். இதனால் தான் எங்களின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் நம் மண்ணைச் சார்ந்த, நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படைப்புகளை தயாரிக்க வேண்டும் என ஐந்தாண்டுகளுக்கு முன் தீர்மானித்தோம். மலையாளம், மராத்தி தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கலாச்சாரம் சார்ந்த கதையை தயாரித்து வருகிறோம். இந்தப் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியதை பெருமிதமாக கருதுகிறேன்.
சோமிதரன் மிகவும் திறமைசாலி. யுத்தம் இல்லாமல், ஒரு துப்பாக்கி குண்டு இல்லாமல், ஒரு வீட்டிற்குள் பரபரவென்று செல்லும் கதையை சொல்லி இருக்கிறார். நான் இந்த படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன். தற்போதுள்ள உலகளாவிய போர் சூழலில் இந்த படத்தை சரியான தருணத்தில் வெளியிடுகிறோம் என நினைக்கிறேன்,” என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், ”இந்தப் படம் ஈழத்திலிருந்து வந்த ஒரு நண்பன். தன்னுடைய வலியை, தன்னுடைய நினைவுகளை, ஈழத்திலிருந்து வந்த மற்றொரு இளைஞனுடன் சேர்ந்து படமாக உருவாக்கி இருக்கிறார். இதற்காக கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி.
நம்முடைய சகோதரர்களுடைய வலியை நம்முடைய வலியாகவே பார்த்து வளர்ந்திருக்கிறோம். ஆனாலும் சினிமாவின் வாயிலாக இதனை சாத்தியப்படுத்திய சோமிதரனுக்கு வாழ்த்துக்கள். ஒரு ரைட்டர் ஆக சோமிதரனின் அச்சீவ்மென்ட் ஸோ ஹை. எதிர்பாராதது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், ”மறக்க முடியாத தருணம் இது. நான் பார்த்து வியந்த இயக்குநர்கள் இங்கு வந்து படத்தை வாழ்த்தி பேசியதற்கு நன்றி.
இந்த படத்தின் பணிகளை தொடங்கிய போது இதை நான் என்னுடைய மிகப்பெரிய பொறுப்பாக பார்த்தேன். நாங்கள் இதுவரை 18 படங்களை தயாரித்து இருக்கிறோம் .அதில் சில படங்கள் வெற்றி பெறும் என்று நாங்கள் எதிர்பார்ப்போம். ஆனால் வெற்றி இருக்காது. ஆனால் இந்தப்படம் அப்படி அல்ல. இந்தப் படத்தை தவறாக உருவாக்கி விட்டோம் என்றால் சோமிதரன் போன்ற ஏராளமான இயக்குநர்களின், படைப்பாளர்களின் கனவு தகர்ந்து விடும்.
இது போன்ற போர் சூழல் குறித்த கதைகளை செல்வதற்கு சினிமா தான் ஆகச்சிறந்த கலை வடிவம். ஆதனால் அதனை மிகவும் சரியாக செய்துவிட வேண்டும் என்று பதட்டம் இருந்து கொண்டே இருந்தது.
ஈழத் தமிழர்கள் மீது எனக்கு சின்ன வயதில் இருந்தே ஒரு அனுதாபம் இருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு சோமிதரன் போன்றவர்கள் இது போன்ற கதைகளை எடுத்து வந்தால் அதை தயாரிப்பதற்கு பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் முன் வருவார்கள். இதற்கான தைரியத்தை முழுதாக கொடுக்கிறதோ இல்லையோ ஆனால் அதற்கான தொடக்க புள்ளியாக இப்படம் இருக்கும் என நம்புகிறேன்.
படப்பிடிப்பு நடைபெறும் ஒவ்வொரு நாளிலும் படைப்பு சிறப்பானதாக வரவேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியுடன் சோமிதரன் பணியாற்றினார். நம்மால் உணர முடியாத ஒரு எமோஷன் அந்த எமோஷனை இயக்குநர் சோமிதரன் மிக துல்லியமாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார்,” என்றார்.


