‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிக்கும் ‘தலைவன் தலைவி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்கசெந்தில் தியாகராஜன் – அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்‘ விஜய் சேதுபதி – நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தலைவன் தலைவி‘ திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

இந்நிலையில் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் டி. ஜி. தியாகராஜன், தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் ரோஹன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன் பேசுகையில், ”மூன்றாவது தலைமுறையாக திரைப்படங்களை தயாரித்து தயாரிப்பாளராக பணியாற்றி வருகிறோம். தொடர்ந்து ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘தலைவன் தலைவி’ அற்புதமான குடும்பத் திரைப்படம். இயக்குநர் பாண்டிராஜ் ஒரு சுயம்பு. அவருடைய தனிப்பட்ட முயற்சியில் மிகப் பெரும் இயக்குநராக உருவாகி இருக்கிறார். அவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் தான். அவர் கதை சொன்னபோது அப்பாவுக்கு பிடித்திருந்தது. எங்களுக்கும் பிடித்திருந்தது.

விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. அவருடைய புகழ் இன்று சீனா வரை பரவி இருக்கிறது. அவர் நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் அங்கு இந்திய மதிப்பில் எண்பது கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. ஹாங்காங்கில் அவர் ஹாலிவுட் நடிகர் டென்செல் வாஷிங்டனுக்கு இணையாக புகழ் பெற்றிருக்கிறார்‌. அந்த அளவிற்கு அவர் ரசிகர்களிடம் சென்றடைந்திருக்கிறார். கொல்கத்தாவிலும் அவரைப் பற்றி பேசுகிறார்கள். அவர்கள் ‘தமிழ் சினிமா என்றால் விஜய் சேதுபதி தான்’ என சொல்கிறார்கள். அவருடைய புகழ் எங்களுக்கு மிகவும் பொக்கிஷமாக இருந்ததுடன், அவருடன் இணைந்து பணியாற்றுவதும் பெருமிதமாக இருக்கிறது.

நித்யா மேனனை பற்றி குறிப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும், அவருடன் மிகப்பெரிய நட்சத்திர நடிகர் நடித்தாலும், அவருடைய தனி திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடிப்பவர். அவருடன் இணைந்து பணியாற்றுவதும் எங்களுக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறோம்.

இந்தப் படத்தில் பாடல்களை அனைத்தும் அற்புதமாக வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். புதிய புதிய ஓசைகளையும் கொடுத்திருக்கிறார். ஆதி கால தமிழர்களின் இசையை உலகத் தரத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறார்.

‘தலைவன் தலைவி’ மிகப்பெரிய கேளிக்கை படமாக அமையும். ரசிகர்களும், ஊடகங்களும் இந்த படத்திற்கு பேராதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நாயகன் விஜய் சேதுபதி பேசுகையில், ”எங்கிருந்து தொடங்குவது என தெரியவில்லை. இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது ஏராளமான சண்டை, சச்சரவுகள் இருந்தன. அதற்கு இடையில் தான் இப்படத்தின் பணி தொடங்கியது. படத்தின் இயக்குநரும், நாயகனும் ஒன்று சேர்ந்த தருணம் இருக்கிறதே, அதை நாங்களே எதிர்பார்க்கவில்லை. இவருடன் இணைந்து பணியாற்றக்கூடாது என்று அவரும், இவரது இயக்கத்தில் பணியாற்றக் கூடாது என்று நானும் இருந்த காலகட்டம் அது. இரண்டு பேருக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் இல்லை. அதனால் அழகான தருணத்தில் ஒரு சிறிய பூ எப்படி இயல்பாக மலருமோ, அதேபோல் எங்களுக்கு இடையேயான கோபம் மறைந்து, அன்பு மலர்ந்தது. அதன் பிறகு எல்லா விஷயங்களும் படபடவென நடந்தன.

கிட்டத்தட்ட இயக்குநரை எனக்கு 2009ம் ஆண்டிலிருந்து தெரியும். ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திற்காக தேசிய விருதினை வென்ற போது நாங்கள் இருவரும் சந்தித்து உரையாடி இருக்கின்றோம். இப்போது இணைந்திருப்பது எப்படி இருக்கிறது என்றால்.ஒரு மிகப்பெரிய வட்டம் நிறைவடைந்தது போல் இருந்தது.

இந்த படத்தின் பணிகள் தொடங்கியது ஒரு அற்புதமான அனுபவம்.

சத்யஜோதி நிறுவனத்தை பற்றி தெரியும். ‘மூன்றாம் பிறை’ படத்தின் மூலம் தான் இவர்கள் தங்களுடைய தயாரிப்பை தொடங்கி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டபோது ஆச்சரியமாக இருந்தது. இவர்களின் தயாரிப்பு நிறுவனத்தில் நான் நடித்ததும், இணைந்து பணியாற்றியதும் எனக்கு மிகவும் சந்தோஷம் . இந்த நிறுவனத்துடன் முதன் முதலாக நான் இணைந்து பணியாற்றியதை பெருமிதமாக கருதுகிறேன்.

நித்யா மேனனுடன் 2020ம் ஆண்டில் ’19 (1) (ஏ) ‘ என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன். அது கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படம். இயக்குநர் இந்துவின் வேண்டுகோளை ஏற்று, அவர் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்ததால் அந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தேன். அப்போது நித்யா மேனன் தான் கதாநாயகி என எனக்கு தெரியாது. படப்பிடிப்பு தளத்தில் இணைந்து பணியாற்றிய போது.’வாய்ப்பு கிடைத்தால் நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவோம்’ என பேசிக்கொண்டோம். ஆனால் அந்த வாய்ப்பு ‘தலைவன் தலைவி’ படத்தில் இப்படி அமையும் என்று எதிர்பார்க்கவில்லை.

நித்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் இப்படி ஒரு வேடத்தில் அவர்களுடன் இணைந்து நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. இது படம் பார்த்த பிறகு உங்கள் அனைவருக்கும் புரியும். அவருடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அந்த கதாபாத்திரத்தில் நித்யாவை தவிர வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க இயலாது. கிட்டத்தட்ட அவர் நடித்த எல்லா கதாபாத்திரமும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். நித்யா ஒரு படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கிறார் என்றால் அந்த கேரக்டரில் வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க முடியாது. அப்படியொரு அற்புதமான நடிப்பை வழங்குபவர்.

படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தோம், இதுதான் காட்சி, இதுதான் வசனம், இதுதான் நடிப்பு, இதுதான் நடனம் என்று இயல்பாக கடந்து செல்ல மாட்டார். அதை முழுமையாக உணர்ந்து அந்த கதாபாத்திரத்திற்காக என்ன செய்யலாமோ அல்லது அதனை எப்படி எல்லாம் திரையில் காண்பிக்கலாமோ அல்லது இயக்குநர் என்ன எதிர்பார்க்கிறாரோ இவை அனைத்தையும் சரியாக புரிந்து கொண்டு அதை சரியாக வழங்கிட வேண்டும் என்று மெனக்கெடும் அற்புதமான நடிகை தான் நித்யா. அவருடன் இணைந்து பணியாற்றியதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பாண்டிராஜ்.