“Kalan” Movie Review
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வெட்டுடையார் காளி, தனது கணவனை இழந்தபின்பும், மிகுந்த உழைப்புடன் மகன் வேங்கையை படிக்க வைத்து உயர்வடையச் செய்கிறார். இவருக்கு தம்பி அப்புக்குட்டி பலமாய் நிற்கிறார். வேங்கையின் நண்பனின் தங்கைக்கு கஞ்சா விற்கும் கூட்டத்தால் பிரச்சனை ஏற்படுகிறது. அந்த கூட்டத்திடமிருந்து அவரை காப்பாற்றும் வேங்கை, அந்த கஞ்சா சாம்ராஜ்ஜியத்தை முறியடிக்க முடிவு செய்கிறார். ஆனால், இதனால் குழப்பமடைந்த மாபியா கூட்டம், வேங்கை நண்பனின் மூலம் கொலை செய்கிறது.
தன் மகனின் கொலைக்கு பழி தீர்க்கவும், போதைப்பொருளால் பாதிக்கப்படும் மக்களை மீட்கவும் வெட்டுடையார் காளி, தம்பி அப்புக்குட்டியுடன் போராட்டத்தைத் தொடங்குகிறார். இதன் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களே ‘கலன்’ திரைப்படத்தின் மையமாக அமைந்துள்ளது.
வெட்டுடையார் காளியாக தீபா அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது பாசம் நிறைந்த தாய்மையும், கோபமூட்டும் காளி அவதாரமும் சிறப்பு. அப்புக்குட்டியாக நடித்த அப்புக்குட்டி தனது எதார்த்தமான நடிப்பால் கதைதரத்தை உயர்த்தியுள்ளார். வில்லனாக சம்பத் ராமும் கஞ்சா வியாபாரியாக காயத்ரியும் தங்கள் கதாபாத்திரங்களில் உயிர்ப்பூட்டியுள்ளனர்.
இசையமைப்பாளர் ஜெர்சனின் பாடல்கள், குறிப்பாக “வெட்டுடையார் காளி” பாடல், பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜெயக்குமார் மற்றும் ஜேகேவின் ஒளிப்பதிவு தென் மாவட்ட வாழ்க்கையை சீரியமாகப் பதிவு செய்கிறது. இயக்குநர் வீரமுருகன், போதைப்பொருளின் சமூக விளைவுகளை மிகவும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்துள்ளார்.
‘கலன்’ சமூகப் பிரச்சினைகளை சுவாரஸ்யமாகத் தொடும் அசாதாரண திரைப்படம். இது கமர்ஷியலாகவும் சமுதாயத்துக்கான விழிப்புணர்வாகவும் மாறியுள்ளது. மொத்தத்தில், ‘கலன்’ நல் கருத்துக்களை ஊட்டும் ஒரு முக்கியமான படைப்பு.
Cast: அப்புகுட்டி, தீபா, சம்பத் ராம், சேரன் ராஜ், காயத்ரி and others.
Director: வீர முருகன்
Rating…3.2/5