“என் வாழ்நாள் முழுவதும் விஜய் ஆண்டனிக்கு பக்கபலமாக இருப்பேன்” ; மார்க் ஆண்டனி சக்சஸ் மீட்டில் நெகிழ்ந்த விஷால்

“ஆதிக்கிடமிருந்து தான் நான் காப்பியடித்தேன்” ; வெளிப்படையாக ஒப்புக்கொண்ட எஸ்.ஜேசூர்யா

“90 மற்றும் 2k கிட்ஸ் மேல் விழுந்த பாம் தான் எஸ்.ஜே சூர்யா” ; மார்க் ஆண்டனி படத்தொகுப்பாளர் பாராட்டு

“தடை விழும்போதெல்லாம் அதை உடைத்தெறிந்து முன்னேறுவேன்” ; மார்க் ஆண்டனி சக்சஸ் மீட்டில் விஷால் சூளுரை

“ஆதிக் என்னுடைய ஜூனியர் வெர்ஷன் தான்” ; எஸ்.ஜே சூர்யா

“விஷாலின் பரந்த மனதில் எனக்கு ஒரு இடம் வேண்டும்” ; மார்க் ஆண்டனி சக்சஸ் மீட்டில் எஸ்.ஜே சூர்யா கோரிக்கை

“நான் கோட்டை விட்ட இடத்தை எனக்கு மீட்டுக் கொடுத்து விட்டது மார்க் ஆண்டனி” ; எஸ்.ஜே சூர்யா நெகிழ்ச்சி

மினி ஸ்டுடியோ சார்பில் வினோத் குமார் தயாரிப்பில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வெளியானது. விஷால் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை ஆதித் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார்.. எஸ்.ஜே சூர்யா, சுனில், செல்வராகவன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ரித்து வர்மா, அபிநயா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

டைம் ட்ராவலை மையப்படுத்தி உருவான இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று உலகெங்கிலும் இப்போதுவரை 100 கோடி வசூலித்து மிகப்பெரிய சாதனை செய்துள்ளது.

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களுடன் வெற்றிச் சந்திப்பை மார்க் ஆண்டனி குழுவினர் நடத்தினார்கள்.

இந்த நிகழ்வில் படத்தின் வெற்றி குறித்து தங்களது உணர்வுகளை படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.

பப்ளிசிட்டி சிவா பேசும்போது, “விண்டேஜ் போஸ்டர்களை இந்த காலத்தில் உருவாக்கி அதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியுமா என ஆர்வமாக இருந்தேன்.. அப்போதெல்லாம் கைகளில் வரைந்த டிசைனை போஸ்டராக ஆக்கினார்கள். இப்போது அதே டிசைன்களை டிஜிட்டலில் மார்க் ஆண்டனி படத்திற்காக உருவாக்கினேன். படத்திற்காக வெளியிட்ட ஒவ்வொரு போஸ்டருக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது மகிழ்ச்சி” என்று கூறினார்.

படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி பேசும்போது, “நான் உருவாக்கிய ஜாக்பாட் பட டிரைலரை பார்த்துவிட்டு தான் என்னை ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தில் பணியாற்ற அழைத்தார். இந்த படத்தில் ரொம்பவே சுதந்திரம் கொடுத்தார். அதேசமயம் தனது ஐடியாக்களையும் கொடுத்தார். இந்த படத்தின் டிரைலர் இந்த அளவுக்கு வரவேற்பு பெற்றது என்றால், அதில் அவரது ஐடியாவும் அதிகம் இருக்கிறது. நான் ஃபிலிம் மேக்கர் இல்லை, டைரக்டர் தான் என ஆதிக் அடிக்கடி சொல்வார்.. ஆனால் இந்த படத்தின் வெற்றி மூலம் இப்படி ஒரு தனித்தன்மை வாய்ந்த கதையை படமாக்கியதற்காக இனிமேல் அவர் ஃபிலிம் மேக்கர் என பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். எடிட்டிங்கின்போது கூட அஜித் பற்றி பேசிக்கொண்டே இருப்பார். இதற்கு முன்னதாக அவன் இவன் படத்தில் நான் உதவி எடிட்டராக பணியாற்றினேன். கிட்டத்தட்ட 200 நாட்கள் எடுக்கப்பட்ட காட்சிகளை பார்த்தபோது, விஷால் நடித்திருந்த பல காட்சிகளில் பல நாட்கள் அவர் அந்த படத்திற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டதை பார்த்தேன். எஸ்.ஜே சூர்யாவை பொருத்தவரை அவர் 90 மற்றும் 2k கிட்ஸ் மேல் விழுந்த பாம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆதிக்கின் நெருக்கமான நண்பர் என்பதால் பலமுறை அடுத்தடுத்து எடிட் செய்யப்பட்ட காட்சிகளை கொடுத்தாலும் சலிக்காமல் இசையமைத்து கொடுத்தார்” என்றார்.

ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் பேசும்போது, “இந்த படத்தில் பணியாற்ற ஒப்பந்தமானபோது ஏன் ஆதிக் ரவிச்சந்திரனுடன் பணியாற்றுகிறீர்கள் என சிலர் கேட்டனர். அவருடன் ஏற்கனவே மூன்று படத்தில் பணியாற்றி இருக்கிறேன். இந்த படம் வெளியாகும்போது அது ஏன் என்று புரியும் என கூறினேன். ஆதிக் அதை இப்போது நிரூபித்துள்ளார்” என்று கூறினார்.

நடிகர் நிழல்கள் ரவி பேசும்போது, “இந்த படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு துவங்கியபோது விஷாலின் கெட்டப்பை பார்த்ததுமே நிச்சயம் இந்த படம் வெற்றி என அப்போதே சொன்னேன். அதிர்ஷ்டவசமாக விஷாலுடன் நான் நடிக்கும் படங்கள் எல்லாமே ஹிட்டாகி விடுகின்றன. எஸ்.ஜே சூர்யா டைரக்ஷனில் நான் ஏற்கனவே நடித்தும் உள்ளேன். அப்போதே நடிகர்களுக்கு அழகாக நடித்துக் காட்டுவார். இந்த படத்தில் இன்னும் சூப்பராக நடித்திருக்கிறார். இப்படிப்பட்ட படத்தில் நானும் பங்கு பெற்றுள்ளேன் என்பதில் மகிழ்ச்சி” என கூறினார்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசும்போது, “வெற்றிப்பட இயக்குநர்கள் ஹீரோக்களை அணுகினால் உடனே கதை கேட்பார்கள்.. ஆனால் என்னைப் போன்ற ஒரு வரலாறு கொண்ட ஒருவனுக்கு இன்னொரு படம் கிடைத்தது பெரிய விஷயம். விஷாலுடன் அண்ணன் தம்பியாக 7 வருடமாக பழகி வந்தாலும் அடுத்த பட வாய்ப்பு பெறுவதற்கான நேரம் கொஞ்சம் தாமதமானாலும் ஒருநாள் தேடி வந்தது. என்னைப் போல ஒரு இயக்குநரை நம்பி விஷால் சொன்னதற்காக 50 கோடி செலவில் படம் எடுத்த தயாரிப்பாளர் வினோத்துக்கு மிகவும் நன்றி.

எனது இரண்டாவது பட சறுக்கலில் இருந்து எழுந்து வர உந்து சக்தியாக விஷால் இருந்தார். படப்பிடிப்பில் எஸ்.ஜே சூர்யா எப்போதுமே உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். இந்த படத்தின் கதையை விஷாலுக்கு இரண்டரை மணி நேரம் சொன்னேன் என்றால் எஸ்.ஜே சூர்யாவிற்கு எட்டரை மணி நேரம் கதை சொன்னேன். அந்த அளவிற்கு அனைத்து டீட்டைல்களையும் கிளியராக கேட்டு தெரிந்து கொண்டார்.

நேர் கோண்ட பார்வை படத்தில் அஜித்தை நான் சந்திக்கும் முன்பாக இருந்த மைண்ட் செட் வேறு.. அதை முடித்துவிட்டு வெளியே வரும்போது மிகப்பெரிய அளவில் எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தது அஜித் சார் தான். என்னைப் போலவே ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜமும் ஒரு நல்ல இடத்திற்கு வர போராடிக் கொண்டிருந்தார். மார்க் ஆண்டனி அவருக்கும் அந்த பெயரை பெற்று கொடுத்துள்ளது.

கலை இயக்குநர் விஜயகுமாரின் பங்களிப்பு மிகப்பெரியது. குறிப்பாக அந்த டைம் ட்ராவல் டெலிபோனை சூப்பராக வடிவமைத்து கொடுத்தார். இந்த படத்தில் சில்க் ஸ்மிதா இடம்பெறுகிறார் என அவர் குறித்த காட்சிகளை சொன்னபோது எல்லோருமே உற்சாகம் ஆனாலும் அதை திரையில் எப்படி கொண்டுவரப் போகிறோம் என்பதில் நிறையவே சிரமப்பட்டோம். அதை ஓரளவுக்கு எளிதாக்கியவர்கள் சில்க் கதாபாத்திரத்தில் நடித்த விஷ்ணுபிரியாவும் அந்த கதாபாத்திரத்திற்காக கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்ட பிரசாத் லேப் டீமும் தான்.

இந்த படத்தில் என்னுடைய அப்பா ரவிச்சந்திரன் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். எப்போதும் திரையில் அவர் பெயர் வரவேண்டும் என்பதற்காகவே என் பெயருடன் அவரை இணைத்து கொண்டேன். ஒரு மகனாக அல்ல, ஒரு இயக்குனராக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் வினோத்குமார் பேசும்போது, “எல்லா விமர்சகர்களும் எனக்கு நண்பர்கள் தான். படத்தை தவறாக பேசுபவர்கள் பற்றி தான் அன்று நான் குறிப்பிட்டேன். இந்த படத்தின் கதையை கேட்டதும் நிச்சயம் ஹிட் என தோன்றியது. ஆனால் இந்த அளவிற்கு பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கவே இல்லை” என்று கூறினார்.

நடிகர் எஸ்.ஜே சூர்யா பேசும்போது, “இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் என்னிடம் இந்த கதையை சொன்னபிறகு மீண்டும் 20 நாட்கள் கழித்து நன்றாக டெவலப் வந்து இதை முழுமையாக கூறினார். அப்போதே அதில் எந்த அளவிற்கு அவர் ஈடுபட்டுள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. எதிர்காலத்தில் இன்னும் பிரமாதமான இயக்குநராக இவர் வருவார். இந்த படத்தில் என்னுடைய காட்சிகளை நடித்துக்காட்ட அவர் தயங்கினாலும், அவரை வற்புறுத்தி நடித்துக் காட்டச் சொன்னேன். அற்புதமாக நடித்துக் காட்டக் கூடியவர் ஆதிக். இந்த படத்தில் நான் பேசும் “என்னது ? பொம்பள சோக்கு கேக்குதா ?” உள்ளிட்ட மாடுலேஷன் வசனங்கள் எல்லாமே ஆதிக்கிடமிருந்து தான் நான் காப்பியடித்தேன். என்னுடைய அக்கா பிள்ளைகள் இந்த படத்தை பார்த்துவிட்டு, ஆதிக் உங்களுடைய ஜூனியர் வெர்ஷன் என்று சொன்னார்கள்.

ஒரு கார்ப்பரேட் நிறுவனம் எளிதாக படம் எடுத்து ரிலீஸ் செய்ய முடியும்.. ஆனால் ஒரு தனி மனிதராக, ஒன் மேன் ஆர்மியாக இந்த படத்தை இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளார் தயாரிப்பாளர் வினோத். இவரைப் போன்ற தயாரிப்பாளர்கள் தான் நம் திரையுலகுக்கு அதிகம் தேவை. விஷாலுடன் இனி எத்தனை படங்கள் சேர்ந்து நடிப்போம் என தெரியாது. ஆனால் அவரின் பரந்த மனதில் எனக்கு ஒரு இடம் வேண்டும். இந்த படம் பார்த்த பலரும் மன அழுத்தம் குறைந்து மக்களை சிரிக்க வைத்துள்ளீர்கள் என்று கூறுவதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனது வாழ்க்கையில் நியூ, அன்பே ஆருயிரே படங்கள் வந்த சமயத்திலேயே அன்றைய முன்னணி நடிகர்களின் படத்திற்கு இணையாக எனது படங்களின் விநியோக உரிமையும் விலை போனது. இடையில் என் வாழ்க்கை எப்படியோ திசைமாறி சரிவுக்கு போய், பின்னர் கார்த்திக் சுப்புராஜின் இறைவி படம் மூலமாக மீண்டும் திசைதிரும்பி மாநாடு படத்தின் மூலம் ஒரு திருப்புமுனை ஏற்பட்டு, இப்போது இந்த மார்க் ஆண்டனியின் மூலமாக அதே அன்பே ஆருயிரே சமயத்தில் எனக்கு இருந்த இடத்தை 75% மீட்டுக் கொடுத்துள்ளது. ரசிகர்களுக்காக இன்னும் அதிகமாக உழைப்பேன்” என்று கூறினார்.

நாயகன் விஷால் பேசும்போது, “எனது நண்பர், கல்லூரி தோழர் விஜய் ஆண்டனியின் மகள் இப்படி திடீரென காலமானது மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது. என் வாழ்நாள் முழுவதும் விஜய் ஆண்டனிக்கு பக்கபலமாக இருப்பேன். பலவீனமாக உள்ளவர்களுக்கு இந்த சினிமாத்துறை செட்டாகாது. இயக்குநர்கள் லிங்குசாமி, பாலா, சுசீந்திரன், மித்ரன் என என்னை வித்தியாசமாக காட்டிய இயக்குநர்கள் போலவே ஆதிக் சொன்ன இந்த கதையும் வித்தியசமாக இருந்ததும் உடனே ஒப்புக்கொண்டேன். என்னிடம் ஏன் ஆதிக்கை தேர்ந்தெடுத்தீர்கள் என்று பலரும் கேட்டனர். இப்போது அவர்கள் எல்லாம் படம் பார்த்துவிட்டு என்னிடமே ஆதிக் பற்றி பாராட்டி வருகிறார்கள் அனேகமாக ஆதிக்கிடம் அடுத்ததாக தேதி கேட்டு வந்து நிற்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

எஸ்.ஜே சூர்யா, சுனில் என இரண்டு அண்ணன்கள் இந்த படத்தின் மூலம் எனக்கு கிடைத்துள்ளனர். ஒரு வசனத்தை இப்படி எல்லாம் கூட பேசலாமா என்கிற வித்தையை எஸ்.ஜே சூர்யாவிடம் இருந்து இலவசமாக கற்றுக் கொண்டேன். நடிகர் சுனிலைப் பொறுத்தவரை அவர் ஒரு டாக்டர் என்று சொல்லலாம். மன அழுத்தம் உள்ளவர்கள் கவுண்டமணி, வடிவேலு படத்தின் நகைச்சுவை காட்சிகளை பார்த்து ரிலாக்ஸ் ஆவது போல சுனிலின் காமெடிகளை பார்க்கும்போதும் அதே அளவுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுபடுவார்கள். என் கட்டை வேவதற்குள் எப்படியாவது சில்க்குடன் நடிக்க வேண்டும் என ஆவலாக இருந்தேன். அதை இந்த படத்தில் ஆதித் நிறைவேற்றி விட்டார்.

இதற்கு முன் ஒரு விநாயகர் சதுர்த்தி தினத்தில் ஆதிக்கின் டைரக்சனில் திரிஷா இல்லேன்னா நயன்தாரா படமும் என்னுடைய பாயும் புலி படமும் வெளியானது. எனது படத்தை ஆதிக்கின் படம் கீழே தள்ளிவிட்டது. அதேபோல இன்னொரு விநாயகர் சதுர்த்தி சமயத்தில் நான் நடித்த ‘மதகஜராஜா’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வேலைகளை பார்த்தோம். அனைத்து பிரச்சினைகளும் முடிந்து விட்டதாக நினைத்து சந்தோஷமாக இருந்தபோது துரதிர்ஷ்டவசமாக அந்தப்படம் வெளியாக முடியவில்லை. இப்போது மார்க் ஆண்டனி அதேபோன்று ஒரு விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருப்பதை பார்க்கும்போது கடவுள் என்னிடம் உனக்கான நேரம் 2012ல் அல்ல 2023 ல் தான் இருக்கிறது என்று சொன்னதைப் போல உணர்கிறேன்.

நான் செல்லும் பாதையில் பலமுறை ஒவ்வொரு தடையாக வந்து விழுகிறது. அது நேர்மையாக இருந்தால் ஓகே. ஆனால் தவறாக இருந்தால் அதை ஒவ்வொரு முறையும் உடைத்தெறிந்து முன்னேறுவேன். எல்லா மொழியிலும் இந்த படம் ஹிட் ஆகி உள்ளது என்றால் அதற்கு தயாரிப்பாளர் வினோத் தான் காரணம். ஒரு படத்திற்கு ஹீரோ-தயாரிப்பாளர் காம்பினேஷன் என்பது ரொம்பவே முக்கியம். மார்க் ஆண்டனி கொடுத்த வெற்றியால் இனி ஒருமாத காலத்திற்கு தயாரிப்பாளர் வினோத் வேறு எந்த வேலையும் பார்க்காமல் அவரது குடும்பத்துடன் சுவிட்சர்லாந்து கிளம்பிப் போய் ஜாலியாக சுற்றிவிட்டு வரட்டும். இந்தப் படம் 16 வருடம் கழித்து எனக்கு கிடைத்த வெற்றி . வரும் 28ஆம் தேதி ஹிந்தியில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது. வழக்கம்போல இந்தப் படத்திற்கு எந்த அளவிற்கு டிக்கெட்டுகள் விற்பனை ஆகி உள்ளதோ, அதில் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஒரு ரூபாயை விவசாயிகளுக்கு பயன்படுத்த போகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.