கண்மணிகளின் பாதுகாப்பை, தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்!
‘கோவையில் உள்ள பள்ளியில் படித்துவந்த மாணவி பொன்தாரணியின் தற்கொலைக்குக் காரணம், பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லைதான்’ என்று வெளியான செய்தி, அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இதுபோன்ற ஒரு கொடுமை இனி எவருக்கும் நடக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட மாணவி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார் என்பது, அவருடைய தற்கொலைக் குறிப்பிலிருந்தே தெரியவருகிறது.
பாலியல் அத்துமீறலுக்கு ஆளான மாணவி அளித்திருந்த புகாரின் அடிப்படையில், அவருக்கு உடனடியாக நீதி கிடைத்திருக்க வேண்டும். உரிய உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அன்பு கலந்த ஆறுதலுடன் ஆதரவும் அளித்திருக்க வேண்டும். ஆனால், இவை ஏதுமே இல்லாமல்போனது துரதிர்ஷ்டவசமானது.
இந்தச் சம்பவத்தை நாம் சாதாரணமாகக் கடந்துவிடக்கூடாது. ஏற்கெனவே, பள்ளி மாணவிகளிடம் ஆசிரியரின் பாலியல் அத்துமீறல் விவகாரங்கள் வெடித்தபோதே, தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களில் பயிலும் மாணவிகளிடமும் தனித்தனியாக விசாரித்து, அவர்களுக்கு இதுபோன்ற கொடுமைகள் நிகழ்கின்றனவா என சரிபார்த்திருந்தால், இத்தகைய சூழல் ஏற்பட்டிருக்காது.
ஆகவே, இந்தச் சம்பவத்தை சமூகத்திற்கு கிடைத்த கடைசி எச்சரிக்கையாகக் கருதி, தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோர் கொண்ட குழுவை அமைத்து, ஆசிரியர்களால் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா, நிகழ்கிறதா எனக் கேட்டறிய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை உடனடியாகக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகள் வழங்கிடவும், நீதி கிடைத்திடவும் வழிவகை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகத்தினர், இதுபோன்ற பாலியல் அத்துமீறல்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்கும் வகையில், தங்களது ஊழியர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும். முக்கியமாக, குற்றவாளியைவிட அதை மறைக்க முயன்ற மற்றும் வரும் புகார்களை அலட்சியம்செய்யும் நிர்வாகிகள் கடுமையாகத் தாண்டிக்கப்பட வேண்டும்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் நலன் கருதி அவர்களுக்கு பள்ளியிலோ, வெளியிலோ, வீட்டிலோ ஏதேனும் பிரச்சனைகள் இருக்கின்றனவா என்பதுகுறித்து அவ்வப்போது கேட்டறிய வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் மனம்விட்டுப் பேச வேண்டும். அவர்கள், ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கும்பட்சத்தில் அதிலிருந்து விடுபட உதவவும் வேண்டும்.
‘பெண் குழந்தைகள் நமது நாட்டின் கண்மணிகள்; அவர்களைக் காக்க வேண்டும்’ என்று எங்கள் தலைவர் அடிக்கடிச் சொல்வார். அவர்களுடைய பாதுகாப்பிற்கு கடுமையான, கறாரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இனி ஒரு பொன்தாரணி இந்த மண்ணில் இன்னுயிரை இழந்துவிடக்கூடாது.
– திருமதி.மூகாம்பிகா ரத்தினம்,
மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணிச் செயலாளர்,
மக்கள் நீதி மய்யம்.