“கேங்கர்ஸ்” பட முன் வெளியீட்டு நிகழ்ச்சி !!
சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் “கேங்கர்ஸ்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி !!
Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி மற்றும் வைகைப்புயல் வடிவேலு கூட்டணியில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு, காமெடி சரவெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “கேங்கர்ஸ்”.
வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், A.C.S மருத்துவக் கல்லூரி விழாவில், படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..
தயாரிப்பாளர் ஏ சி சண்முகம் அவர்கள் பேசியதாவது…
அனைவருக்கும் வணக்கம். எம்ஜிஆர் பல்கலைகழகத்தில் கலைவிழா நடத்த வேண்டுமென்று முடிவெடுத்து, பிரசிடெண்டட் அருண்குமார் இந்த படக்குழுவை அழைத்துள்ளனர். மகிழ்விக்கும் மன்னர்கள் சுந்தர் சி மற்றும் வடிவேலு அவர்களை கெஸ்ட்டாக அழைத்துள்ளனர். பென்ஸ் மீடியாவிற்கு அடுத்தடுத்து, வெற்றிப்படங்களைத் தந்து வருகிறார் சுந்தர் சி. 12 வருடங்களாகக் கிடப்பிலிருந்த மதகஜராஜா படத்தை வெளியிட்டோம், அதையும் ஹிட்டாக்கி தந்தார். இவ்வளவு பெரிய ஆளுமைகள் இவ்விழாவிற்கு வந்ததற்கு நன்றி. வடிவேலு சார் பற்றிச் சொல்லத்தேவையில்லை, அவர் உலகப்புகழ் வாய்ந்தவர். பென்ஸ் மீடியா இவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்துள்ளது என்பதில் பெருமை. இந்தப்படம் கண்டிப்பாக அனைவரையும் மகிழ்விக்கும். இந்த கல்லூரியில் இந்த விழாவை நடத்துவது, மகிழ்ச்சி, அனைவருக்கும் நன்றி.
நடிகர் விச்சு விஸ்வநாத் பேசியதாவது…
இயக்குநர் சுந்தர் சி அவர்களுடன் இணைந்து 36 வருடமாகப் பயணித்து வருகிறேன். கேங்கர்ஸ் படத்தில் ஹெச் எம் ரோல் செய்துள்ளேன். வடிவேலு சாருடன் மீண்டும் நடித்தது மகிழ்ச்சி. வின்னர் படத்தில் பல ரீடேக் வாங்கினேன், அந்த பதட்டம் இந்தப்படத்திலும் இருந்தது. இப்படம் புதுமையாக இருக்கும். அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் மைம் கோபி பேசியதாவது…
விச்சு அண்ணா தான் என்னை சுந்தர் சி அண்ணனிடம் அறிமுகப்படுத்தி இப்படத்தில் நடிக்க வைத்தார். அவருக்கு நன்றி. சுந்தர் சி எப்படி இருப்பார்? எப்படி நடந்து கொள்வார்? எனத் தயக்கமாக இருந்தது. என்னைப் பார்த்ததும் கை கொடுத்தார், அவர் கை அவ்வளவு சாஃப்டாக இருந்தது. அவர் மனதும் அதே மாதிரி தான். மிக இனிமையானவர். அவருடன் 1000 படம் கூட வேண்டுமானாலும் நடிக்கலாம். இப்படத்தில் வடிவேலு அண்ணனுடன் நடித்தது மகிழ்ச்சி. அவர் நடிப்பைப் பார்க்க அத்தனை அற்புதமாக இருக்கும். அவ்வளவு எக்ஸ்பிரஷன் தருவார். இந்தப்படம் மிக நன்றாக வந்துள்ளது எல்லோரும் தியேட்டரில் போய்ப் படம் பாருங்கள் நன்றி.
நடிகர் முனீஷ்காந்த் பேசியதாவது..
சுந்தர் சி அண்ணனுடன் கலகலப்பு 2 செய்தேன் அடுத்த வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. நேரிடையாக அவரிடமே கேட்டேன், கேங்ஸ்டரில் நல்ல வாய்ப்பு தந்தார். வடிவேலு அண்ணனுடன் நாய் சேகருக்குப் பிறகு இணையும், இரண்டாவது படம். இரண்டு ஆளுமைகளுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. இப்படத்தில் பார் ஓனராக நடித்துள்ளேன் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன், நன்றி.
நடிகர் பக்ஸ் எனும் பகவதி பெருமாள் பேசியதாவது…
சுந்தர் சி சார் ஒரு ஜென்டில்மேன் டைரக்டர், இத்தனை வெற்றி தந்தவர் ஆனால் எந்த ஒரு கீரிடமும் அவரிடம் இருக்காது, மிக இயல்பாகப் பழகுவார். 35 நாட்களில் அவர் என்னிடம், படத்தில் இத்தனை லைட் மேன் ஊழியர்கள் பணியாற்றுவதைத் தான் பெருமையாகச் சொன்னார். அவரின் நல்ல மனதுக்கு நன்றி. வடிவேலு சார் கூட ஒரு போட்டோ எடுக்க வேண்டுமென ஆசைப்பட்டவன். ஆனால் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
கதை மற்றும் வசனகர்த்தா வெங்கட் ராகவன் பேசியதாவது…
இந்த நிகழ்ச்சிக்கு, இவ்வளவு கூட்டத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இது நம்ம படம், கேங்கர்ஸ் ஆசிர்வதிக்கப்பட்ட படம், அரண்மனை வெற்றிக்குப் பிறகு என்ன பண்ணலாம் எனப் பேசும் போது, வடிவேலு அண்ணனுடன் பண்ணலாம் என பேசினோம். அடுத்த நாளே சுந்தர் சி சார், வடிவேலு அண்ணனைச் சந்தித்து ஐடியாவை பேசி ஓகே பண்ணினார். அடுத்த முன்றாவது வாரத்தில், படம் ஷூட்டிங் போய் விட்டோம். நாங்கள் நினைத்த அனைத்தும் கிடைத்தது. இந்தப்படத்திற்கு எல்லாமே தானாக அமைந்தது. நாங்கள் நினைத்த நடிகர்கள் கிடைத்தார்கள். தலைநகரம் படத்தில் வடிவேலு அண்ணனுடன் வேலை பார்த்துள்ளேன். இப்படத்தில் மீண்டும் வேலை பார்த்தேன், அவரிடம் அதே எனர்ஜி பல மடங்கு வளர்ந்துள்ளது, சுந்தர் சி அண்ணனுடன் வடிவேலு அண்ணன் கெமிஸ்ட்ரி அப்படி இருக்கும். அவர்களை ஃபேனாக பார்த்து ரசித்துள்ளேன். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஏசிஎஸ் சாருக்கு நன்றி. இந்தப்படம் மிக நன்றாக வந்துள்ளது, அனைவரும் தியேட்டருக்கு சென்று படம் பாருங்கள். அனைவருக்கும் நன்றி.
ஒளிப்பதிவாளர் எசக்கி கிருஷ்ணசாமி பேசியதாவது…
படத்தில் வாய்ப்பு தந்த சுந்தர் சி அண்ணாவுக்கு நன்றி. அவருடன் எனக்கு இது 3 வது படம், என் கடைசி 7 படத்தில் அவர் ஏதாவது ஒரு வழியில் இருந்துள்ளார். அவருக்கு நன்றி. அவர் படம் எப்படி இருக்க வேண்டும், என்பதை முதலிலேயே சொல்லி விடுவார். முழு சுதந்திரம் தருவார். இப்படம் மிக அருமையாக வந்துள்ளது. கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்.
எடிட்டர் பிரவீன் ஆண்டனி பேசியதாவது…
மக்களைச் சிரிக்க வைக்கும் அருமையான படங்களைத் தருபவர் எங்கள் சுந்தர் சி சார். கோடிக்கணக்கான மக்களைச் சிரிக்க வைக்கிறார். இப்படமும் அனைவரையும் சிரிக்க வைக்கும் நன்றி.
இசையமைப்பாளர் சத்யா பேசியதாவது…
எனக்கு இந்த வாய்ப்பை தந்ததற்கு சுந்தர் சி சாருக்கு நன்றி. இசையில் எனக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் தந்துள்ளார். பாடல்களுக்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் தந்துள்ளார். சுந்தர் சி சார், வடிவேலு சார் கூட்டணியில் நானும் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி அனைவருக்கும் நன்றி.
நடிகை கேத்தரின் தெரேசா பேசியதாவது…
உங்கள் முன்னிலையில் எங்கள் படத்தைப் பற்றிச் சொல்வதில் மகிழ்ச்சி. ஒரு சிறு கிராமத்தில் உள்ள பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளேன். நான் வடிவேல் சாரின் ரசிகை, அவர் கதாபாத்திரத்திற்குள் மாறுவதை அருகிலிருந்து பார்த்தது அற்புதமான அனுபவமாக இருந்தது. அவருடன் நடித்தது பெருமை. இப்படத்தில் என்னுடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் என் நன்றிகள். Avni Cinemax (P) Ltd மற்றும் Benz Media PVT LTD நிறுவனங்களுக்கு நன்றி. சுந்தர் சி சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுகிறேன். ஆனால் அவருடன் நடிப்பது முதல் முறை, அவர் படத்தை மிக இயல்பாக, எந்தவித கஷ்டமும் இல்லாமல் மிகச்சிறப்பாகக் கொண்டு வந்துவிடுகிறார். இந்தப்படம் கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் சிரிக்க வைக்கும். அனைவரும் கொண்டாடுங்கள் நன்றி.
நடிகை வாணி போஜன் பேசியதாவது…
இங்கு கல்லூரி மாணவர்கள் ஆடிய நடனம் மிக அற்புதமாக இருந்தது. சுந்தர் சி சாருக்கு பெரிய நன்றி சொல்ல வேண்டும். அவரும் வடிவேலு சாரும் இருக்கும் படத்தில் யார் கூப்பிட்டாலும் நடிப்பார்கள். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தந்ததற்கு நன்றி. சுந்தர் சி சார் மிக மிக எளிமையான இனிமையான மனிதர். அவருக்கு என் நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்களை மகிழ்விக்கும் அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது…
கல்லூரியில் உங்கள் எல்லோரையும் பார்க்க அத்தனை உற்சாகமாக உள்ளது. இனிமேல் நிறையக் கல்லூரி விழாவிற்கு வருகை தருவேன். நானும் வடிவேல் அண்ணனும் மீண்டும் இணைந்து, உங்களை மகிழ்விக்க, உழைத்துள்ளோம். என் மீது இப்படத்திற்காக நம்பிக்கை வைத்த, ஏ சி சண்முகம் அண்ணன், ஏசிஎஸ் அருண்குமார் ஆகியோருக்கு நன்றி. இந்தப்படம் ஆரம்பிக்க விதை போட்டது வடிவேல் அண்ணன் தான். தமிழில் மணிஹெய்ஸ்ட் மாதிரி ஒரு சின்ன ஊரில், ஆட்டோ ஓட்டுநர், டீச்சர் எல்லாம் வைத்து, பண்ணினால் எப்படி இருக்கும் என்பது தான் கதை. இந்தப்படத்திற்கு என்னடா தலைப்பு வைப்பது எனத் திணறியபோது, வடிவேல் அண்ணன் போற போக்கில் கேங்கர்ஸ் என்றார். அதையே தலைப்பாக வைத்து விட்டோம். கண்டிப்பாக இப்படம் உங்கள் எல்லோரையும் சந்தோசப்படுத்தும் நன்றி.
நடிகர் வடிவேலு பேசியதாவது…
முதலில் சுந்தர் அண்ணன் சார்பிலும் என் சார்பிலும் ஏ சி சண்முகம் அய்யா அவர்களுக்கு நன்றி. 10 ஆயிரம் மாணவர்கள் முன்னிலையில் இப்பட விழா நடப்பது மகிழ்ச்சி. நானும் சுந்தர் சி அண்ணனும் 15 வருஷமா சேர வில்லை, நம்மூரில் பிரிச்சி வைக்க ஆளா இல்லை, இடையில் நாங்கள் பிரிந்திருந்தது பெரிதாகத் தெரியவில்லை. இந்தப்படம் எதோ நேற்று செய்த வின்னர் படம் மாதிரி, அத்தனை புதிதாக இருக்கிறது. சுந்தர் சி அண்ணனுக்கு சொல்லவா வேண்டும். ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து உருவாக்கியிருக்கிறார். பேசி முடிச்சு 35 நாளில் இப்படத்தை முடித்து விட்டோம். உங்களுக்குத் தேவையான அத்தனை தீனியும் படத்தில் இருக்கிறது. இது தியேட்டரில் எல்லோரும் சேர்ந்து பார்த்து கொண்டாட வேண்டிய படம். சுந்தர் சி அண்ணன் அருமையாக எடுத்துள்ளார், என்னிடம் என்ன வாங்க வேண்டும் என, அவருக்கும் தெரியும் உங்கள் எல்லோருக்கும் கொண்டாட்டம் காத்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி.
வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் புகழ்பெற்ற, கைப்புள்ள, வீரபாகு கதாபாத்திரங்களைப் போலத் தனித்தன்மையுடன் கூடிய “சிங்காரம்” எனும் அசத்தலான கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். ஃபர்ஸ்ட் லுக்கில், அவரது தோற்றமே ரசிகர்களைக் குதூகலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இப்படத்தில் சுந்தர் சி, வடிவேலு ஆகியோருடன் கேத்தரின் தெரேசா, வாணி போஜன், முனீஷ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரீஷ் பேரடி, அருள் தாஸ், கருப்புசாமி, சந்தான பாரதி, S மதுசூதன ராவ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ள இப்படத்திற்கு, வசனங்களை வெங்கட் ராகவன் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் C .சத்யா இசையமைத்துள்ளார். எசக்கி கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் பணிகளை பிரவீன் ஆண்டனி செய்துள்ளார், கலைஇயக்கத்தினை பொன்ராஜ் கவனிக்க, சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் ராஜசேகர் K அமைத்துள்ளார்.
இப்படம் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளது.
Team AIM PRO