ஸ்ரீ ராமரின் ஆன்மீக சாரத்தை ஆராய்ந்தறிதல்

–    தாஜி  ஸ்ரீ ராம் சந்த்ர மிஷனின் வழிகாட்டி மற்றும் தலைவர்

ஸ்ரீ ராம நவமியானது நீதி, கருணை மற்றும் பக்தியை வெளிப்படுத்தும் பகவான் ராமரின் பிறப்பைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ராம நவமியானது பயபக்தி, கொண்டாட்டங்கள் மற்றும் கலாச்சார முக்கியத்துவங்களையும் தாண்டி ஆழ்ந்த ஆன்மீக சாரத்தைக் கொண்டுள்ளது, ஸ்ரீ ராமரின் காலத்தால் அழியாத போதனைகளை ஆராய்வதற்கும், ஆன்மீக பயணத்திற்கான உத்வேகத்தைப் பெறுவதற்கும் பக்தர்களை அழைக்கிறது.

அயோத்தி மன்னர் தசரதருக்கும் ராணி கௌசல்யாவிற்கும் பிறந்த ஶ்ரீ ராமரின் பிறப்பு பற்றிய புராணமானது தெய்வீக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஶ்ரீ ராமர் பூமிக்கு வந்ததன் நோக்கம், தர்மத்தை நிலைநிறுத்துவதும், அதர்மத்தை முறியடிப்பதும் ஆகும். இராமாயண காவியத்தில் விவரிக்கப்பட்டுள்ள அவரது வாழ்க்கைப் பயணம், அனைத்து மனிதகுலத்தின் நன்மைக்காக ஒளிவீசும் கலங்கரை விளக்கமாக செயல்படுகிறது.

ஸ்ரீ ராம நவமி என்பது வரலாறு, மதம், கலாச்சார அல்லது புராண முக்கியத்துவத்தை கடந்தது. இது தீமையின் மீது அறத்தையும், இருளின் மீது ஒளியையும், வெறுப்பின் மீது அன்பையும், இவைகளின் வெற்றியையும் குறிக்கிறது. என் ஆன்மீக குரு பூஜ்ய பாபூஜி மகராஜ் அவர்கள் தனது “சத்யோதயம்” எனும் புத்தகத்தில் ஆன்மீகமும் அன்பும் இல்லாமல் எந்த சமூகமும் வாழ முடியாது என்று கூறியுள்ளார். ஶ்ரீ ராமர் நம்பிக்கை, தைரியம், புத்திசாலித்தனம், இரக்கம் மற்றும் மன்னித்தல் ஆகியவற்றின் நித்திய உதாரண புருஷர் ஆவார். மகா காவியமான இராமாயணம் இந்த நன்னெறிகளை விவரிக்கிறது.

ஸ்ரீ ராமரின் வாழ்க்கையானது, தலைமுறை தலைமுறையாக ஆன்மீக ஆர்வலர்களின் வாழ்வில் எதிரொலிக்கும் ஆழமான படிப்பினைகளால் நிரம்பியுள்ளது. துயர்நிறைந்த காலத்தில் அவரது நேர்மை மற்றும் சத்தியத்தின்மீது அசைக்க முடியாத அற்பணிப்பு, கடமை மற்றும் நீதி ஆகியவை ஆன்மீக முன்னேற்றத்தை நாடுபவர்களுக்கு சிறந்த நடத்தைக்கான எடுத்துக்காட்டாக உள்ளது; அதனால் அவர் ‘மரியதா புருஷோத்தம்’ என்று அழைக்கப்பட்டார். ஶ்ரீ ராமர், எல்லா உயிரினங்களின் மீதும் அவற்றின் தராதரம் அல்லது பின்னணியைப் பார்க்காமல், இரக்கம் செலுத்தியதற்காகவும், மேலும் பிறருடனான நமது தொடர்புகளில் பரிவுணர்வையும், கருணையையும் வளர்த்துக்கொள்ள நம்மைத் தூண்டியதற்காகவும் அறியப்படுகிறார். குறிப்பாக பெரியவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர் அளித்த மரியாதை இன்று வரை குழந்தைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக எடுத்துச் சொல்லப்படுகிறது. அவர் தன் சகோதரர்கள் மற்றும் மனைவியிடம் கொண்டிருந்த அன்பும் கடமை உணர்ச்சியும், சிறுவயதிலேயே அவர் கொண்டிருந்த பொறுப்புணர்ச்சியும், மற்றும் ஜாதி, மதம், பிறப்பிடம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் எவரையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை ஆகியவை மனித நேயத்தின் சிறந்த எடுத்துக்காட்டுகளாக பிரகாசிக்கின்றன. ராவணனின் சகோதரன் விபீஷணனை ஏற்க வேண்டாம் என்று பலரும் ராமருக்கு அறிவுரை கூறியபோது, “என் முன்னிலையில் அடைக்கலம் தேடி வரும் எவருக்கும் அச்சமின்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது எனது தனிப்பட்ட நெறிமுறையாகும்” என்று ராமர் கூறினார். பிரிவினைவாதத்திலிருந்து ஒற்றுமைக்கும், வெறுப்பிலிருந்து அன்பிற்கும், நிராகரிப்பிலிருந்து ஏற்றுக் கொள்வதற்கும், பழிவாங்குவதில் இருந்து மன்னிப்பதற்கும் ராமர் நமக்கு ஒரு உதாரணமாக உள்ளார்.

புனித நூலாகப் போற்றப்படும் இராமாயணம், வெறும் வரலாற்றுக் கதை மட்டுமல்ல, ஆன்மீக ஞானக் களஞ்சியமாகும். இது தர்மத்தின் (நீதிமிக்க கடமை) கருத்தை தெளிவுபடுத்துகிறது மற்றும் அதிலிருந்து விலகுவதால் ஏற்படும் விளைவுகளை விளக்குகிறது. வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வதில் ராமரின் பணிவு, வீரம் மற்றும் சமநிலை ஆகியவை ஆன்மீக மேம்பாட்டிற்காக பாடுபடுபவர்களுக்கு காலத்தை வென்ற பாடங்களாக விளங்குகின்றன.

ஸ்ரீ ராம நவமி ஒரு கொண்டாட்டமாகும். இப்போது ஒரு கொண்டாட்டத்தினால் பயன் என்ன? கொண்டாட்டம் என்பது, யாரை நாம் கொண்டாடி இதயம் மகிழ்கிறோமோ, குறிப்பாக அவர் குணங்களும் நமக்குள் எதிரொலிக்க வேண்டும். இல்லையெனில், அது மிகவும் செயற்கையாகவும், வெறும் சடங்குகளாகவும் மாறும்.

எனவே இது நம்மை சுயபரிசோதனை செய்ய நினைவூட்டுகிறது. தனிமனிதனின் பரிணாம வளர்ச்சிக்கும், நாம் அனைவரும் பரப்ப விரும்புகின்ற, பரவச் செய்வதில் ஆர்வமாக உள்ள, ‘விஸ்வ சாந்தி’ எனப்படும் உலகளாவிய உணர்வுறுநிலையின் பரிணாம வளர்ச்சிக்கும், நமது இதயங்களால் வழிகாட்ட முடியும். இதயத்தில் உள்ளார்ந்து சென்று, ஸ்ரீ ராமரின் இருப்பை உணரும், இந்த பரிணாம வளர்ச்சிக்கான வாய்ப்பை தியானம், நமக்கு வழங்குகிறது.

இந்த ஸ்ரீ ராம நவமியில், அது உள்ளடக்கிய ஆன்மீக சாரம்சத்தை கிரகிப்போம். நமது அன்றாட வாழ்வில் ஸ்ரீ ராமரின் நற்பண்புகளைப் பின்பற்றவும், நல்லிணக்கம், இரக்கம் மற்றும் நேர்மையை வளர்க்கவும் முயற்சிப்போம். ஸ்ரீ ராமர் தனது ராம ராஜ்ஜியத்தில், உறுதி செய்த நற்பண்புகள், நற்குணங்கள், சட்டங்கள் மற்றும், குடிமக்களுக்கிடையேயும், குடிமக்களுக்கும் அரசுக்கும் இடையேயும் அன்றாட வாழ்வின் தொடர்புகளில் முக்கிய இலட்சியங்களாக நல்லொழுக்கம் மற்றும் நீதி ஆகியவை இருந்த ஒரு சமூகம், போன்ற அதையும் உள்வாங்க முயற்சிப்போம்.

ஸ்ரீ ராம நவமி என்பது நாட்காட்டியில் ஒரு தேதி அல்லது நாள் என்பதை தாண்டி, அவரது குணங்களைப் பற்றி நாம் சிந்திக்கும் சுயபரிசோதனை நாளாக இருக்கட்டும். இந்த ஆண்டு அதற்கும் அப்பால் செல்ல முயற்சிப்போம். நமது சொந்த கதைகளையும், விவரிப்புகளையும் தைரியத்துடனும், இரக்கத்துடனும், அசைக்க முடியாத நேர்மையுடனும் மீண்டும் எழுதுவோம்.