பத்திரிகையாளர்களுடன் “புத்தாண்டு” கொண்டாடிய இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர்
தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அதேபோல் இந்த வருடத்தின் முதல் நாளான இன்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் தலைவி கவிதா நிகழ்சியில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குனரும், தயாரிப்பாளருமான எஸ்.ஏ. சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
முன்னதாக எஸ்.ஏ. சந்திரசேகர் பேசுகையில்…. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள் அனைவரும் நலமோடும், வளமோடும், மகிழ்ச்சியோடு நிறைவாக வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். முன்பெல்லாம் இந்நன்னாளில் அடிக்கடி சந்திப்பது வழக்கம். இன்றைய இளைய தலைமுறையினருக்கு என்னை யார் என்றே தெரியாது. விஜய்யின் தந்தை என்றுதான் தெரியும். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் எப்போது அழைத்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என மகிழ்ச்சியாக தெரிவித்தார்.
அப்போது மூத்த பத்திரிகையாளர் ஒருவர் உங்கள் இளமையின் ரகசியம் என்ன என கேட்டதும், சற்றும் தயங்காமல் என்னைப் பொறுத்தவரை எனது வயதைக் கூறுவதில் நான் தயக்கம் காட்டியதே கிடையாது. எனக்கு 82 வயதுதான் ஆகிறது. என்னுடைய 36 வது வயதிலிருந்து அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து ஜந்து நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு கடவுளை நினைத்து தியானம் செய்து வருகிறேன். அந்த எனர்ஜி தான் நான் உற்சாகமாக இருப்பதற்கு காரணம். நீங்கள் அனைவரும் செய்து பாருங்கள் நீங்களே உணர்வீர்கள். அதுவே பத்து, பதினைந்து நாட்கள் ஆனதும் பிரச்சினைகளை மறந்து ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள்.
நம்மை சந்தோஷப்படுத்தக் கூடிய கருவி நமது மூச்சுக்காற்று, அந்த மூச்சுக் காற்று உள்ளே செல்வதை நீங்கள் உணரும் போது சந்தோஷம் தானக வரும். இதை அனைவரும் செய்து பாருங்கள் என்றார்.
மேலும் பேசுகையில்… நான் பண்டிகைகள் கொண்டாடுவதில்லை. கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கி, அவர்களுடன் பிரியாணி சாப்பிட்டேன். அவர்களுடன் இருந்த தருனம் ஒரு இறை சக்தியை உணர்ந்த அனுபவம் ஏற்பட்டது. நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். அதுதான் பண்டிகை. நாம் மட்டும் புத்தாடைகள் உடுத்தி பண்டிகை கொண்டாடுவதில் சந்தோஷம் கிடையாது. மற்றவர்களை சந்தோஷப்படுத்திப் பார்க்க வேண்டும். அதுபோல்தான் நான் ஒவ்வொரு பண்டிகைகளையும் கொண்டாடி வருகிறேன்.
இன்று வருடத்தின் முதல் நாளில் நண்பர்களாகிய உங்கள் அனைவரையும் பார்த்து உங்களுடன் புத்தாண்டு கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் பத்திரிகைகளில் எழுதும் போது பெரிய நடிகர்களின் படங்களுக்கு கதாநாயகிகளின் ரகசியங்களை எழுதி நீங்களே விளம்பரங்கள் தேடித் தருகிறீர்கள். சிறு பட்ஜெட் படங்களை நீங்கள் கண்டுகொள்வதில்லை. நான் பல கதாநாயகன், கதாநாயகிகளை உருவாக்கி இருக்கிறேன். ஆனால் நான் இயக்கும் படங்கள் எல்லாம் சிறு பட்ஜெட் படங்கள் தான். இதுபோன்ற படங்கள் தோல்வியானால் மனது மிகவும் பாதிக்கும்.
பட விழாக்களில் கதாநாயகிகளை பேட்டி எடுக்கிறீர்கள். அதை செய்தியாக வெளியிடும் போது அந்தப் படத்தின் பெயர்களையும் எழுதுங்கள், இதை நீங்கள் எழுதினால் சிறு பட்ஜெட் பட தாயாரிப்பாளர்கள் சந்தோஷப் படுவார்கள் என வேண்டுகோள் விடுத்தார்.
அதன்பிறகு தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் கவிதா “சங்க நலன் குழு” என எட்டுப் பேர் அடங்கிய பட்டியலை வாசிக்க, அவர்களை எஸ்.ஏ. சந்திரசேகர் கொளரவித்து வாழ்த்தினார். பின்னர் வருகிற பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவிருக்கும் “வாரிசு”, “துணிவு” ஆகிய படங்கள் வெற்றிபெற படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் எஸ்.ஏ. சந்திரசேகர்.
இறுதியாக விழாவில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எஸ்.ஏ. சந்திரசேகர் பத்து கிலோ அரிசி வழங்கினார். நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் சங்கத்தின் தலைவி கவிதா நன்றி தெரிவித்தார். உறுப்பினர்கள் அனைவரும் சந்தோஷத்துடன் சென்றனர்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்