கோரிக்கை விடுத்த கமல்ஹாசன், பரிசீலிப்பதாகச் சொன்ன துணை முதல்வர்
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) நடத்திய சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்குத்துறை மாநாடு (MEBC – South Connect) சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய திரு. கமல்ஹாசன், தொழிற்துறையினரின் கோரிக்கைகளுக்குச் செவி மடுக்கிற, அவற்றைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்கிற அரசாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது என்பதால், இந்த மேடையைப் பயன்படுத்திக்கொண்டு நான் சார்ந்திருக்கிற திரையுலகு சார்பாக ஒரு கோரிக்கை விடுக்கிறேன். மத்திய அரசின் ஜிஎஸ்டி போன்ற வரிகளால் திரைத்துறை அல்லற்படுகிறது. இத்துடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் சேரும்போது இரட்டை வரிவிதிப்பாகி விடுகிறது. மாநில அரசின் கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டால், பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் தமிழ்த்திரையுலகிற்கு நிவாரணமாக அமையும் என்றார்.
தலைமையுரை ஆற்றிய மாண்புமிகு துணை முதல்வர், கலைஞானி அவர்களின் கோரிக்கையை தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பரிசீலனை செய்வதாக தனது உரையில் குறிப்பிட்டார். தவிர, பனையூரில் 90 ஏக்கர் நிலப்பரப்பில் திரைக்கலைஞர்களுக்கான குடியிருப்பு அமையவிருப்பதற்கான தமிழ்நாடு அரசின் அறிவிப்பையும் வெளியிட்டார்.
இந்த அறிவிப்புகளுக்காக தமிழ்த் திரையுலகம் சார்பாக தனது நன்றிகளை திரு. கமல்ஹாசன் மேடையிலேயே தெரிவித்தார்.