‘தசாவாதாரம் 2’ எப்போது? கூகுள் குட்டப்பா விழாவில் கே.எஸ். ரவிக்குமார் அளித்த அதிர்ச்சி பதில்
”ஓ.டி.டி. தளங்களால் சினிமாவுக்குப் பாதிப்பா இல்லையா என்பது குறித்தெல்லாம் விவாதிக்க வேண்டியதில்லை. தொலைக்காட்சி வந்தபோதும் இப்படித்தான் சினிமாவே அழிந்துவிடும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். சினிமாவை திரையரங்கில் பார்க்கும் அனுபவத்துக்கு எதுவும் ஈடாகாது. அதே சமயம் ஓ.டி.டி என்பது இன்னொரு விஞ்ஞான வளர்ச்சி என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்” என்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.
அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வேற லெவல் ஹிட்டப்பா என்று ஆகியிருக்கிற ‘கூகுள் குட்டப்பா’படத்தின் தயாரிப்பாளரும் அதன் முன்னணி கதாபத்திரத்தில் ஜொலித்தவருமான கே.எஸ்.ரவிக்குமார், அப்படத்தின் நாயகன் தர்ஷன் நாயகி லாஸ்லியா ஆகியோருடன் சென்னை, திருப்போரூரில் உள்ள எஸ்.எஸ்.என். கல்லூரியின் கலை நிகழ்ச்சி ஒன்றில் நேற்று காலை கலந்துகொண்டார். ‘கூகுள் குட்டப்பா’ மிக விரைவில் ஆஹா ஓ.டி.டி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ள நிலையில் கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து ஆஹா ஓ.டி.டி தளம் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் உற்சாகமாக விசிலடித்து ஆர்ப்பாட்டமாக இக்குழுவினரை வரவேற்ற நிலையில் அந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், “ உங்கள் ஆரவாரத்தைப் பார்க்கும்போது எனக்கு என் கல்லூரி காலங்கள்தான் நினைவுக்கு வருகின்றன.அப்போதெல்லாம் என் கல்லூரியின் அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு திரு.பாலையா உட்பட பல நடிகர்களின் குரலில் மிமிக்ரி செய்வேன். சிதம்பரம் ஜெயராமன் குரலில் பாடுவேன். ஆனால் உங்களைப் போல் இவ்வளவு சத்தமாக விசில் அடிக்க மற்றும் கற்றுக்கொள்ளவில்லை. எனக்கு விசில் அடிக்கும்போது வெறும் சத்தம் மட்டும்தான் வரும். ஆனால் நடிகை குஷ்பூ எங்களோடு இங்கு வந்திருந்தால் உங்களை விட சிறப்பாக விசில் அடிப்பார். படத்தில் நான் விசில் அடிக்கும்படியாக காட்சி வந்தால் நான் வெறுமனே வாயை மட்டும் அசைக்க எனக்காக அவர்தான் விசில் அடிப்பார்.
உங்களை இவ்வளவு உற்சாகமாகப் பார்க்கும்போது எனக்கும் புது எனர்ஜி தொற்றிக்கொண்டுவிட்ட வகையில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்த நேரத்தில் உங்களை அட்வைஸ் என்று எதுவும் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. அப்படி சொன்னா மட்டும் கேக்குற வயசா இது. ஆனால் இது வாழ்வின் முக்கியமான பருவம். வாழ்க்கையை நல்லா எஞ்சாய் பண்ணுங்க. ஆனா ஜஸ்ட் பாஸ் ஆகுற அளவுக்காவது படிக்கவேண்டியதும் ரொம்ப முக்கியம்”
அடுத்து மாணவ,மாணவியர் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்த அவர், கமலுடன் ‘தசாவதாரம்’ படத்தில் நடந்த சில அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். “ கமல் எப்போதும் கடினமான உழைப்பை நம்பக்கூடியவர். NO PAIN NO GAIN என்பது அவரது பாலிசி. தசாவதாரம் படத்துக்கும் அப்படித்தான் உழைத்தார். சில தினங்களுக்கு முன் தசாவாதாரம் ரிலீஸாகி 12 வருஷம் ஆச்சா? என்று ஆச்சரியத்துடன் 2 மணி நேரம் பேசினார். சில வருடங்களாகவே கமலையும் என்னையும் பார்த்து ‘தசாவதாரம் 2’ எப்போது என்று கேட்கிறார்கள். ஆனால் எங்கள் இருவருக்கும் எத்தனை கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் தசாவதாரம் போன்ற இன்னொரு படத்தை உருவாக்கவே முடியாது. எனவே தசாவதாரம் 2’க்கு வாய்ப்பே இல்லை.
ஓ.டி.டி. தளங்களால் சினிமாவுக்குப் பாதிப்பா இல்லையா என்பது குறித்தெல்லாம் விவாதிக்கவேண்டியதில்லை. தொலைக்காட்சி வந்தபோதும் இப்படித்தான் சினிமாவே அழிந்துவிடும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். சினிமாவை திரையரங்கில் பார்க்கும் அனுபவத்துக்கு எதுவும் ஈடாகாது. அதே சமயம் ஓ.டி.டி என்பது இன்னொரு விஞ்ஞான வளர்ச்சி என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அண்மையில் வெளியான எங்கள் ‘கூகுள் குட்டப்பா’வை திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள். அப்படிப் பார்க்காதவர்கள் விரைவில் வெளியிடப்படவிருக்கும் ஆஹா ஓ.டி.டி. தளத்தில் பாருங்கள்’ என்றார்.
அடுத்து பேசிய நடிகர் தர்ஷன், ‘நான் ஒரு நடிகனா உங்க முன்னாடி நிக்குறதுக்கு 7 வருஷ கடுமையான உழைப்பு தேவைப்பட்டிருக்கு. 300க்கும் மேற்பட்ட ஆடிஷன்கள் அட்டெண்ட் பண்ணியிருக்கேன். அதுல பல சமயங்கள் இவ்வளவு கேவலமா நடிச்சிருக்கோம் நாம எப்படி செலக்ட் ஆவோம்னு எனக்கே தோணியிருக்கு.
கல்லூரி காலத்துல நாம முக்கியமா சம்பாதிக்கவேண்டியது நல்ல நண்பர்களை. படிப்பு கூட அடுத்ததுதான். ஏன்னா இங்க கிடைக்கிறது மட்டும் தான் நம்ம தகுதி என்னன்னு பாக்காம கிடைக்கிற தூய்மையான நட்பு. அடுத்து கிடைக்கிறதெல்லாம் நம்ம அந்தஸ்தைப் பாத்து கிடைக்குற நட்புதான்.
நான் நடிகனாக ஆசைப்பட்டப்ப எங்க அம்மாவும் அப்பாவும் கூட கிண்டலடிச்சாங்க. தமிழ்நாட்டுல கோடிக்கணக்கான ஆட்கள் இருக்குறப்போ இங்கைக்காரனான உனக்குத்தான் சான்ஸை அப்படியே தூக்கித் தரப்போறாங்களான்னு கேட்டாங்க. ஆனா என்னோட நண்பர்கள் தான் என்னை மோடிவேட் பண்னிக்கிட்டேயிருந்தாங்க. அவங்க கொடுத்த உற்சாகத்தாலதான் ‘கூகுள் குட்டப்பா’ படம் மூலமா உங்க முன்னாடி நிக்குறேன். அதனாலதான் சொல்றேன் கல்லூரி காலத்துல நல்ல நண்பர்களை சம்பாதிச்சுக்கோங்க” என்றார்.
அடுத்து பேசிய நடிகை லாஸ்லியா கையாலேயே ஹார்ட்டின் சிம்பள் காட்டி மாணவர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார், “ நானும் உங்களை மாதிரியே கல்லூரி காலங்கள்ல இப்படி விசிலடிச்சிக் கொண்டாடினவதான். உங்களை இவ்வளவு எனர்ஜியோட பாக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழ்க்கையில நீங்க என்னவா ஆக நனைக்கிறோங்களோ அதை விடா முயற்சியால சாதிக்க முடியும்/ நாங்க நடிச்ச ‘கூகுள் குட்டப்பா’ படத்தை தியேட்டர்ல பாக்காதவங்க ஆஹா ஓ.டி.டி தளத்துல பாருங்க” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
தமிழ் பார்வையாளர்களை புத்தம் புது நிகழ்ச்சிகளால் அசத்தி வரும் ஆஹா டிஜிட்டல் தளத்தில், ‘செல்ஃபி’, ‘மன்மத லீலை’ போன்ற திரைப்படங்கள் வெளியானது. ஆஹா ஒரிஜினல் படைப்பான‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற திரைப்படமும் வெளியானது. இதற்கு பார்வையாளர்களிடையே பெருகி வரும் பேராதரவால் விரைவில் திரையரங்கில் வெளியாகியிருக்கிற ஜீ வி பிரகாஷ்குமாரின் ‘ஐங்கரன்’ திரைப்படத்தையும் ‘ஆஹா டிஜிட்டல் தளம் விரைவில் வெளியிடயிருக்கிறது.