விஜய்யை வைத்து படம் இயக்க மறுத்து விட்டார் பாரதிராஜா!

விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் மலரும் நினைவுகள்!!

வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம் , தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன”. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல் பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது.
புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது,

சினிமாவை நேசித்ததால் ஏதோ ஒரு வகையில் நம்மை அது நேசித்துக் கொண்டிருக்கும். அதற்கு உதாரணம், முதலில் இயக்கினேன், தயாரித்தேன், விநியோகித்தேன், இப்போது இந்த வயதில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன். அதில், நிறைய பணம் சம்பாதித்திருக்கிறேன். ஆனால், தங்கர் பச்சான் மாதிரி பெயரை சம்பாதிக்கவில்லை. அவர் விவசாயத்தில் மட்டுமல்ல, படத்திலும் கலப்படமில்லாமல் ஆர்கானிக்காகத் தான் படம் எடுப்பேன், நீங்கள் அதை பார்க்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். அவரின் இயக்கத்தில் இந்த வயதில் நடித்திருப்பதில் மகிழ்ச்சி. ஒரே காலகட்டத்தில் ஒரே ஊரில் இருந்து சினிமாவிற்கு நானும் பாரதிராஜாவும் வந்தோம். ஆனால், அவர் முதலில் இயக்குநராகிவிட்டார். அவரிடம் உதவி இயக்குநராக வாய்ப்பு கேட்டேன். முடியாது என்று மறுத்துவிட்டார். விஜயை நடிகராக்க வேண்டும் என்று ஒரு ஆல்பம் தயாரித்துக் கொண்டு சென்றேன். என்னிடம் ஏன் கொண்டு வந்தாய்? நீயே பெரிய இயக்குநர் தானே, நீயே இயக்கிக் கொள் என்று மறைமுகமாக மறுத்துவிட்டார். அவரிடம் உதவி இயக்குநராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன், நடக்கவில்லை. என் பையனை அவர் இயக்கத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன், அதுவும் நடக்கவில்லை. ஆனால், தங்கர் பச்சான் ஒரே படத்தில் எங்கள் இருவரையும் நண்பர்களாக நடிக்க வைத்துவிட்டார். இவரைப் போலவே கௌதம் மேனனிடமும் ஆல்பத்தை கொண்டு சென்றேன். அவரும் மறுத்துவிட்டார். அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான், இல்லையென்றால் விஜய் கமர்ஷியல் நாயகனாக ஆகியிருக்கமாட்டார். அதற்காக கடவுளுக்கும் நன்றி என்றார்.

கருமேகங்கள் கலைகின்றன பட வெற்றிக்கு ‘அப்பா’ பாடல் ஒன்றே போதும் ..
இயக்குநர் பேரரசு!

இயக்குனர் பேரரசு..

எனக்கு பிடித்த இயக்குநர் தங்கர் பச்சான் அண்ணன் தான். நமக்கு பிடித்த மாதிரி படம் எடுத்து அதை வெற்றிப் படமாக தருவது தான் தங்கர் பச்சானின் சிறப்பு. அதிலும் அவர், கலச்சாரம், பண்பாடு, வாழ்வியல் போன்ற விஷயங்களை எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். அதற்கு மிகப் பெரிய தைரியம் வேண்டும். நான் எப்போதும் தமிழை நேசிப்பேன் என்று பிடிவாதமாக இருப்பார். தமிழ் மொழி மீது பற்றுக் கொண்டவர். பொது மக்களுக்கும் குரல் கொடுப்பார், பொதுவெளியிலும் ஆக்ஷனோடு இருப்பவர் தங்கர் பச்சான். சினிமாவிற்கு வந்தோம், இயக்கினோம், சம்பாதித்தோம் என்பது முக்கியமல்ல, முத்திரை பதிக்க வேண்டும். அதற்கு அழகி என்ற ஒரு படமே போதும், தங்கர் பச்சானைப் பற்றி கூறும்.

எஸ்.ஏ.சந்திரசேகரிடம் நான் வாய்ப்பு தேடி இருக்கிறேன். ஆளுங்கட்சிக்கு எதிராக படம் இயக்கி புரட்சி செய்தவர் தான் புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சார். ஆனால், மிகவும் தன்னடக்கமாக இங்கே பேசியிருக்கிறார். இவரைப் போல இயக்குநர் மகேந்திரனும் முத்திரைப் பதித்திருக்கிறார்.

நான் பார்த்து வியந்த இயக்குநர்களை வைத்து படம் இயக்கியிருக்கிறார், தங்கர் பச்சான். அதிதி பாலன் சிறப்பாக நடித்திருக்கிறார். இப்பட வெற்றிக்கு அப்பா பாடல் ஒன்றே போதும் என்றார்.

ஒரு பார்வையிலேயே அசத்திய அதிதி பாலன்..!
நடிகர் டெல்லி கணேஷ்

நடிகர் டெல்லி கணேஷ்..

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அருமையாக பேசிவிட்டார். இதற்கு மேல் நான் என்ன பேசுவது என்று தெரியவில்லை. இந்த விழாவிற்கு தங்கர் பச்சான் என்னை அழைத்தார். இந்த படத்தில் என்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இயக்குநர்கள். இவ்வளவு பெரிய ஜாம்பாவான்களின் இடையில் இருப்பதை பெருமையாக நினைக்கிறேன். மிகவும் கோபக்காரர். தன்னுடைய கருத்தில் இருந்து சிறிதும் மாறமாட்டார். இப்படத்திற்காக பல சிறந்த இடங்களைத் தேடி பிடித்து எடுத்திருக்கிறார்.

அதிதி பாலனுக்கு அப்பாவாக நடித்திருக்கிறேன், இப்படத்தில் ஒரு காட்சியில் நான் தப்பு செய்துவிடுவேன், வசனமே இல்லாமல் அதிதி பார்வையிலேயே அர்த்தத்தோடு நடித்திருக்கிறார்.

உன்னை வைத்தே ஒரு படம் எடுக்க வேண்டும் என்று என்னிடம் இயக்குநர் தங்கர் பச்சான் கூறியிருக்கிறார். அது நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால், நான் ஒரு சிறிய பாத்திரம் கொடுத்தாலும் நடிப்பேன், நான் கேமராவை நேசிப்பேன் என்றார்.

தங்கர் பச்சான், எனக்கு மிகவும் பிடித்த வார்த்தையான பண்பாளர் என்று என்னை குறிப்பிட்டிருக்கிறார், நன்றி..  என்றார்.

காதலி மீது காதலனுக்கு ஆச்சர்யம் தீருகிற போது காதல் தீர்ந்து போகிறது..!
கவிபேரரசு வைரமுத்து..!

இதில் வைரமுத்து பேசிதாவது,

தங்கர் பச்சான் தோற்கக்கூடாத கலைஞன், தங்கர் பச்சானை இயக்குநராக மட்டும் அறிவீர்கள். ஆனால், சினிமாவை டிஜிட்டலில் கொண்டு வருவதற்கு முன்பு “காகிதம்” பத்திரிகையில் சிறந்த படைப்புகளை கொடுத்திருக்கிறார். எனது அருமை நண்பர் வீரசக்தி, தயாரிப்பாளர் ஆவதற்கு முன்பு திருச்சியிலிருந்து எனக்கு தோழமை கொண்டவர் வீரசக்தி.

ஒரு படம் தயாரிப்பது துயரமான சம்பவம்.
ஒரு முட்டையின் மீது பாறாங்கல்லை தூக்கி வைப்பது போல தான் இப்போது சினிமா இருக்கிறது.
அருமை நண்பர் ஜி.வி.பிரகாஷ், இளமைக்கு இளமையானவர், முதிர்ச்சிக்கு முதிர்ச்சியானவர், நடிகருக்கு நடிகர், இசையமைப்பாளருக்கு இசையமைப்பாளர்.
இவர் இத்தனையிலும் இந்த போடு போடுகிறாரே.. இசையில் மட்டுமே இருந்தால் இன்னும் எவ்வளவு சிறப்பாக இசையமைப்பார்.

இன்று இசை மாறியிருக்கிறது என்று சொல்லுகிறார்கள், மாறியிருப்பது வெறும் ஓசைகளாக, வெறும் அதிர்வலைகளாக, வாத்திய கூத்துகளாக இருந்துவிடக் கூடாது. அவை மனதில் மீட்டப்படுகிற மெல்லிய வீணை என்பதை இப்படத்தின் அத்தனை பாடல்களும் உணர்த்துகின்றன.

எல்லா தலைமுறையிலும் 5 படிகள் இருக்கின்றன. அந்த 5 படிகளுக்கும் ஆட்கள் இருக்கின்றார்கள். வல்லிசைக்கு சிலர், துள்ளிசைக்கு சிலர், மெல்லிசைக்கு சிலர், என்று சமூகம் பிரிந்து கிடக்கின்றது. ஆனால், 3 தலைமுறைக்கும் பாடலாக இப்படத்தின் பாடல்கள் அமைந்துள்ளது.

ஒருவன் பெண் பிள்ளையை தத்தெடுக்கிறார், உறவுகளற்ற உலகத்தில் நீ ஒருத்தி தான் உறவு என்று கொஞ்சுகிறான். அந்த பிள்ளையை பிரிந்துவிட்டால் வாழ்வே அறுந்துவிடும் என்று அஞ்சுகிறான். அப்போது அவர்களுக்கான பாடல், “என்னை விட்டு போய்விடாதே” என்ற பாடல். நான் தங்கர் பச்சனிடம் யார் இந்த பாடலுக்கான நடிகர் என்று கேட்டேன். அந்த தந்தை யார் என்றேன், யோகி பாபு என்றார்கள். அவர் சிகையை மாற்றுவாரா என்றேன். இல்லை என்றார்கள். அதை வைத்து பாடல் வரிகளை இப்படி அமைத்தேன்…

என் பறட்டைத் தலையிலே, சுருட்டைத் முடியிலே கூடு கட்டு குயிலே… காட்டு விட்டு தந்த மயிலே… என் கண்ணனுக்கு ஒளி தந்த வெயிலே. என்று எழுதினினேன் தங்கர் பச்சான் மகிழ்ந்துவிட்டார்.

தங்கர் பச்சானிடம் பிடித்த விஷயம், எதைக் கண்டாலும் ஆச்சரியப்படுவார். ஒரு பூவைப் பார்த்தால் ஆச்சர்யப்படுவார், பறவை பறந்தால் ஆச்சர்யப்படுவார், நீரை டம்ளரில் ஊற்றும் போது நுரை வந்தால், அடடே! நுரை என்று ஆச்சர்யம். காபி ருசியாக இருந்தால் ஒரு ஆச்சர்யம், என்னைப் பார்த்தால் ஆச்சர்யம். எனக்கு அவரைப் பார்த்தால் ஆச்சர்யம்.

ஆச்சர்யம் தீர்ந்துபோகும் போது வாழ்க்கைத் தீர்ந்து போகிறது. எப்போது வாழ்க்கை சலிப்படைக்கிறது தெரியுமா? வாழ்க்கையில் மனைவியின் மீதான ஆச்சர்யம் தீர்ந்துபோகிற போது கணவனுக்கு வாழ்க்கை முடிந்து போகிறது, காதலி மீது காதலனுக்கு ஆச்சர்யம் தீருகிற போது காதல் தீர்ந்து போகிறது, ஒரு தலைவன் மீது தொண்டன் கொண்ட ஆச்சர்யம் தீருகின்ற போது அரசியல் அஸ்தமித்து போகிறது, குழந்தையின் மீது தகப்பனுக்கு ஆச்சர்யம் தீர்ந்துபோனால் குழந்தை வளர்ந்துவிட்டது என்று அர்த்தம்.

ஒரு கலையைப் பார்த்து கலைஞனது ஆச்சர்யம் தீர்ந்து போனால் கலை நீர்த்துப் போய் விடுகிறது. ஆச்சர்யத்தால் உங்கள் வாழ்க்கை பரிணமிக்கும், ஆச்சர்யம் தீர்ந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் தங்கர் பச்சானைத் தொட்டு சொல்லுகிற செய்தி.

என்னுடைய ஆருயிர் சகோதரர் “இயக்குனர் இமயம்” பாரதிராஜா, சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த மேடைக்கு வந்து உங்களையெல்லாம் சந்தித்து மகிழும் வாய்ப்பை இழந்திருக்கிறார்.

ஒரு மனிதன் வாலிப பருவத்தில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்கிறான். அதை நினைத்து வாழ்நாள் எல்லாம் குற்றஉணர்வோடு இருப்பதைக் கூறும் படம் தான் “கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படம்.

“கருமேகங்கள் கலைகின்றன” என்ற தலைப்பே ஒரு கவிதை. இந்த தலைப்புக்கு அவர் செய்திருக்கிற நியாயம் அபாரம்.
 
இப்படத்தை நீங்கள் திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டும். திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறும் போது வருத்தமாக இருக்கிறது.

ஒரு திரைப்படத்தை, திரையரங்கிற்கு சென்று பார்க்கிற பொழுது தான் திரையரங்கம் பொது மக்களின் கலையாக இருக்கும். வீட்டிலிருந்து ஒரு படம் பார்த்தால் அது அவ்வளவு சுகப்படாது. உங்கள் தனிமையை உறுதி செய்யும் இடத்தில் தான் திரைப்படம் பார்க்கப்படுகிறது. உங்கள் தனிமையால் தான் கலை ரசிக்கப்படுகிறது. உங்கள் கைபேசிக்கு வேலை இல்லாமல் இருக்கும் இடத்தில் தான் கலை அதன் முழுமையான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறது.

வீரசக்தி, தங்கர் பச்சான் மற்றும் இந்த படம் அனைத்தும் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ன பாடலை அர்பணிப்பீர்கள் என்ற கேள்விக்கு, பூங்காற்று திரும்புமா? என்ற பாடல், தங்கர் பச்சானுக்கு ஒன்பது ரூபாய் நோட்டு மாதவனாக வாழ்ந்து பாரு என்ற பாடல், அவர் மாதவனாகத்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். தங்கமே தமிழுக்கு இல்லை பாடல் ஜி.வி.பிரகாஷுக்கு அளிப்பேன் என்று கூறினார்.

தங்கர் பச்சான், ‘என் உரிமை’ என்று என்னைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். (படக்குழுவினர் அனைவரும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பிறகு தங்கர் பச்சான் வைரமுத்துவை பற்றி பேடும் போது..

 மக்களுக்கு கவிதை என்பது திரைப்படங்கள் மூலமாகத்தான் சேர்கிறது. திரைப்படங்கள் இல்லாமல் இருந்திருந்தால் தமிழை விட்டு வெளியேறியிருப்பார்கள். திரைப்பட பாடல்கள் மூலமாகத்தான் தமிழ் நிலைத்துக் கொண்டு இருக்கிறது. கலைவாணர், கண்ணதாசன், வாலி இவர்களுக்குப் பிறகு வைரமுத்து தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்குப் பிறகு யார் என்ற கேள்வி வருகிறது. தமிழ்த்தாய் கொடுத்த மிகப்பெரிய செல்வம் அண்ணன் வைரமுத்து அவர்கள். தமிழ் மக்கள் எந்தளவிற்கு வாழ்ந்திருந்தால், திருக்குறள் உருவாகியிருக்கும். திருவள்ளுவனுக்கு முன்பே தமிழ் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்றார்.

அதற்கு வைரமுத்து,
வாழையடி வாழையாக தமிழ் மொழி வளரும். அதற்கு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொருவர் வருவார். அப்படி ஒருவர் வரும்வரை இந்த வைரமுத்து இருப்பார் என்று பதிலளித்தார்).

மேலும், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு தங்கர் பச்சான் ‘தங்க பேனா’ பரிசளித்தார்.

ஜீ.வி.பிரகாஷ் உணர்வுபூர்வமான இசையை இப்படத்தில் கொடுத்திருக்கிறார்..
– இயக்குனர் சுசீந்திரன்!

அதில், இயக்குனர் சுசீந்திரன் பேசியது..

என்னுடைய வெண்ணிலா கபடி குழு படத்தின் முதல் நாளில் என்னிடம் அதிகமாக பேசிய நபர் தங்கர் பச்சான் சார், இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. அவர் எப்போதுமே தரமான படங்களைத் தான் இயக்கியிருக்கிறார். ஆனால், அவருக்கு இன்னும் சரியான தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை.

ஜீ.வி.பிரகாஷ் எப்போதுமே உணர்வுபூர்வமான இசையைக் கொடுப்பார். இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். யோகிபாபு நடிக்க வந்த புதிதில்,
யோகிபாபுவின் போட்டோ ஒன்றை பார்த்தேன்.. தனித்தன்மையாக இருந்தார். அவரை ராஜபாட்டை படத்தில் நடிக்க வைத்தேன். வில் அம்பு திரைப்படத்தில் முழு பாத்திரத்தை செய்தார். விளம்பர ரீதியாக சூரியைக் கேட்டோம், அவரும் ஒப்புக் கொண்டார். ஆனால், யோகிபாபு நன்றாக நடித்திருக்கிறார் என்றார்கள். இன்று இவரை வைத்து படம் எடுத்தால் வியாபார ரீதியாக வெற்றி பெறும் என்ற அளவிற்கு வளர்ந்திருக்கிறார். இரவு பகலாக பல படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதிதி பாலன் தமிழ் சினிமாவின் சொத்தாகவே மாறியிருக்கிறார்.
பாரதிராஜா சார் நமக்கு கிடைத்த பொக்கிஷம். அவர் இன்னும் 5 படங்கள் இயக்க வேண்டும், 50 திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.. என்றார்.

தங்கர் பச்சான் இயக்கதில் ஓர் ஓரத்தில் சிறிய கேரட்டரானாலும் நடிப்பேன்..
தயாரிப்பாளர், நடிகர்
பிரமிட் நடராஜன்!

இதில், தயாரிப்பாளர், நடிகர்
பிரமிட் நடராஜன் பேசியது..

ஒரு நாள் தங்கர் பச்சான் சார் பேசினார், அழகி என்று ஒரு படம் எடுக்கிறோம். அந்த படத்தில் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது, அதில் உங்கள் பாத்திரத்தின் பெயர் நடராஜன். அதில் நடித்த எனக்கு மிகப் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது.
அதேபோல், சொல்ல மறந்த கதை படத்தில் நடித்தேன்.

இப் படத்தை பார்த்து விட்டு குறைந்தது 100 பேராவது, நாங்களும் மாமனார் வீட்டில் அவமானப்பட்டிருக்கிறோம் என்று எனக்கு போன் செய்து  இன்று வரை கூறுகிறார்கள். அதேபோல், அப்பா சாமி படத்திலும் நல்ல கேரக்டர் .  

மணி ரத்னம், ரவிக்குமார் அடுத்து தங்கர் பச்சான் மூவரும் எனக்கு மிகப்பெரிய புகழை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இன்று பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லையென்றாலும் என்னை பார்ப்பவர்கள் எல்லோரும் அழகி படத்திற்காகவும், சொல்ல மறந்த கதைக்காகவும் கிடைக்கும் பாராட்டுகள் என்னை எப்போதும் உற்சாகமாகவே வைத்திருக்கிறது. அவர் படத்தில் ஒரு ஓரத்தில் நிற்கக் கூடிய பாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன்.

தங்கர் பச்சான், எனக்கு கொடுத்த எனது போட்டோவில், ‘எனது நலன் விரும்பி’ என்று என்னை குறிப்பிட்டுள்ளார்..என்றார்.

தங்கர் பச்சான் சாருக்காக ‘லியோ’ சூட்டிங் இடைவெளியில் வந்தேன்.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

6 மாதங்களுக்கு முன்பு என்னைத் தொடர்பு கொண்டு உன்னை சந்திக்க வேண்டும் என்றார். முகவரி கொடுங்கள் வருகிறேன் என்றேன், ஆனால், நானே வருகிறேன் என்றார். அவரிடம் பேசும்போது தான் இன்னும் பல நேரம் பேச வேண்டும் என்று நினைத்தேன். அப்போது அவரிடம்.. அழகி எனக்கு மிகவும் பிடித்த படம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்களைப் பற்றியும் கூறினேன். அவருடைய அனைத்து படங்களையுமே பார்த்திருக்கிறேன்.

அவர் இந்த விழாவிற்கு அழைத்தார், என்னால் மறுக்க முடியவில்லை. ஆகையால், லியோ படத்தின் படப்பிடிப்பிற்கு இடையே வந்துவிட்டேன் என்றார்.

இயக்குநர் தங்கர் பச்சான் அவருடைய மண்ணில் விளைந்த முந்திரி பருப்பு மற்றும் பலாப்பழம் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொடுத்தார்.

தங்கர் பச்சான் லோகேஷ் கனகராஜை பற்றி பேசும் போது..
இந்திய சினிமாவே திரும்பி பார்க்கக் கூடிய இயக்குநராக  இருக்கிறார். வெற்றி மட்டுமல்ல, மென்மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும். இன்று விஜயை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார். நான் அழைத்ததற்காக படப்பிடிப்பை விட்டுவிட்டு வந்திருக்கிறார். நான் வந்திருப்பேனா என்று தெரியாது. அவருக்கு நன்றி என்றார்.

நிஜமாகவே அழுது நடித்திருக்கிறேன்..
– கவுதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கவுதம் மேனன் பேசும்போது,

தங்கர் பச்சான் கேட்டு என்னால் நோ என்று சொல்ல முடியாது. பாரதிராஜா சார் தான் இந்த படத்தின் கதாநாயகன் என்று கூறினார். நடிப்பதை விட இயக்குவது தான் சுலபம். இந்த படத்தில் நிறைய காட்சிகளில் புதுவிதமாக நடித்திருக்கிறேன். நிஜமாகவே அழுது நடித்திருக்கிறேன். ஆனால், யோகிபாபுவுடன் காட்சிகள் இல்லாததில் வருத்தமாக இருந்தது. அடுத்த படத்தில் அவருடன் நடிப்பது குறித்து பேசியிருக்கிறேன்.

இந்த படத்தில் அனைவருக்குமே ஒரு தேடல் இருக்கும். பாரதிராஜா சாருக்கு ஒரு தேடல் இருக்கும், அதிதி பாலன் ஒரு விஷயமாக தேடிக் கொண்டிருப்பார். நான் ஒன்றை தேடிக் கொண்டிருப்பேன். பாரதிராஜா சாருக்கு மகனாக நடித்திருக்கிறேன். இதில் ஒரு காட்சியில் பாரதிராஜா சார் என்னை அடிக்க வேண்டும், முதலில் தயங்கினார், பின்பு அடித்துவிட்டார். எப்போதோ வாங்க வேண்டியதை இப்போது வாங்கிவிட்டேன் என்று நினைத்துக் கொண்டேன்.

தங்கர் பச்சானுடன் நிறைய பேசுவோம். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆகையால் தான் இப்படத்தில் நான் இருக்கிறேன்.

தங்கர் பச்சான் என்னுள் நிறைந்தவன் என்று என்னைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அது ஏன் என்று எனக்கு மட்டும் தான் தெரியும். அதேபோல், அவரும் எனக்குள் நிறைந்திருப்பார். ஜி.வி. நீங்கள் நன்றாக பணியாற்றியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் இன்னும் படம் பார்க்கவில்லை, வாழ்த்துகள் என்றார்.

பாரதிராஜா சாருடன் நடித்திருப்பதில் பெருமையடைகிறேன்..
நடிகை மஹானா சஞ்சீவி..!

நடிகை மஹானா சஞ்சீவி பேசும்போது,

பள்ளிக்கூடம் படிக்கும்போது தங்கர் பச்சான் சாரின் பள்ளிக்கூடம் படம் பார்த்தேன். இந்த படத்திற்கு என்னை அழைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நீ தமிழ் பெண் என்பதால் தான் உன்னை இந்த படத்திற்கு அழைத்தேன் என்று கூறினார், அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பெரிய இயக்குநர்களுடன் நடித்திருப்பதில் பெருமையடைகிறேன். ஜி.வி.பிரகாஷ் சார் இசையில், சைந்தவி மேடம் பாடியிருக்கிறார். வைரமுத்து சார் வரிகளில் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது.

என்னுடைய கதாபாத்திரம் மீனாகுமாரி, என்னுடைய வயதிற்கு மீறியதாக இருக்கும். இப்படத்தில் நடித்திருக்கிறேன் என்பதை விட வாழ்ந்திருக்கிறேன் என்று தான் கூறவேண்டும். அதேபோல், கிளிசரீன் உபயோகிக்காமல் நடித்தேன். அதற்காக எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்று கேட்டார், நான் இரண்டு நிமிடங்கள் எடுத்து கதாபாத்திரத்தை நினைத்து ஒவ்வொரு காட்சியிலும் கிளிசரீன் போடாமல் தான் நடித்திருக்கிறேன். மேக்கப் இல்லாமல் என்னை அழகாக காட்டியிருப்பதற்கு நன்றி.

பாரதிராஜா சாருடன் நடித்திருப்பதில் பெருமையடைகிறேன்.

‘எல்லைக் கடந்த வியப்பு’ என்று என்னை குறிப்பட்டதற்கு நன்றி, தங்கர் பச்சான் சார்..!
நடிகை அதிதி பாலன் !!

வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம் , தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன”. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல் பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது.
கதாநாயகி அதிதி பாலன் பேசும்போது,

பல இயக்குநர்கள் ஜாம்பான்களுடன் நடித்திருக்கிறேன். அதிகமான காட்சிகள் பாரதிராஜா சாருடன் தான். இப்படம் எனக்கு கற்றுக் கொள்ளக் கூடியதாகத்தான் இருந்தது. பாரதிராஜா சாரின் ஒவ்வொரு வசனம், அவர் எப்படி உச்சரிக்கிறார் என்று ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டே இருப்பேன்.

இப்படத்திற்காக தங்கர் பச்சான் சாரின் அலுவலகத்திற்கு அழைத்து கதை கூறினார். எனக்கு பிடித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனாலும், மற்றவர்கள் அவர் மிகவும் கோபப்படக் கூடியவர் என்று கூற கேள்விப்பட்டிருந்தேன். ஆகையால், சிறிது பயத்துடனே தான் சென்றேன். ஆனால், அவர் என்னை திட்டவில்லை, அதிகமாக பாராட்டியது என்னைத்தான்.

எல்லைக் கடந்த வியப்பு என்று என்னைக் குறிப்பிட்டிருக்கிறார். உங்களுடன் பணியாற்றிதை நான் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வேன், மிகவும் நன்றி என்றார்.

ஒவ்வொரு இசையும் தியானம் தான்..!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்..!!

வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம் , தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன”. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல் பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பேசும்போது,

ஒவ்வொரு இயக்குநரிடமும் ஒவ்வொன்றைக் கற்றுக் கொள்கிறேன். ஒவ்வொரு படமும் கற்பது தான். அதேபோல், ஒவ்வொரு இசையும் தியானம் தான். இசையைப் பொறுத்தவரை அந்தந்த தருணத்தில் உருவாவது தான்.

இந்த படம் இரண்டு தந்தைகளைப் பற்றிய கதை.

காக்கா முட்டை, விசாரணை, வெயில் அதேபோல், கலைநயமிக்க இசையமைக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்த படம் தான் கருமேகங்கள் கலைகின்றன. ஆகையால் தான் சம்பளத்தைப் பற்றி நான் நினைக்கவே இல்லை. கையிலே ஆகாசம் பாடலை இறுதியாகத்தான் சுதாவிடம் கூறினேன். அதேபோல், இயக்குநர்கள் அந்த நம்பிக்கையை கொடுக்கும்போது நிறைய படைப்பு உருவாகும். அதுபோல், தங்கர் பச்சான் சாரும் என்மீது நம்பிக்கை வைத்தார். தங்கர் பச்சான் சார், பாலா சார் போன்றோர்கள் உணர்வுபூர்வமாகத்தான் இசை இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் எதிர்ப்பார்த்த டியூன் கிடைத்து விட்டால் திருப்தியாக இருக்கும். எனக்கு எப்போதுமே மக்களின் உணர்வுகளை மையப்படுத்தப்படும் படம் தான் மிகவும் பிடிக்கும். இப்படம் வியாபார ரீதியாகவும் வெற்றிபெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

இசையமைப்பாளராக என்னை உணர்வுகளோடு அழைத்து செல்ல வேண்டும். மேலும், ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்து தான் இசையமைத்து வருகிறேன்.

எம்.எஸ்.வி, இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் போன்ற அனைவரின் இசையைக் கேட்டு அதிலிருந்து தான் என்னுடைய இசையை அமைத்து வருகிறேன்.. என்றார்.

அதன் பிறகு..
கருமேகங்கள் கலைகின்றன படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை மேடையில் அவரே இசையமைத்து பாடினார். எம்.எஸ்.வி. சாருக்கு இந்த பாடலை அர்ப்பணிக்கிறேன் என்றார்.

இயக்குநர் வெற்றி மாறனுக்கு, எள்ளு வய பூக்கலையே….
இயக்குநர் செல்வராகவனுக்கு, உனக்கென மட்டும் வாழும் இதயமடி….
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு, கண்ணாளனே எனது கண்ணை…..
இசைஞானி இளையராஜாவிற்கு, நினைவோ ஒரு பறவை…..
நடிகர் விக்ரமிற்கு, தெய்வத்திருமகள் படத்தில் வரும் பின்னணி இசை….
இயக்குநர் தங்கர் பச்சானுக்கு, ஒளியிலே தெரிவது தேவதையா….

மேற்கண்டவர்களுக்கு என்ன பாடலை அர்ப்பணிப்பீர்கள் என்ற கேள்விக்கு, இந்த பாடலை அர்பணிப்பேன் என்று பாடி, இசையமைத்தார்.

தங்கர் பச்சான் ‘இசை இளவரசன்’ என்று என்னை குறிப்பிட்டிருக்கிறார், அவருக்கு நன்றி  என்றார்.

ஜி.வி.பிரகாசுக்கு அவர் உருவப்படம் பொறித்த புகைப்படம் ஒன்றை பரிசாக அளித்து விட்டு
தங்கர் பச்சான் பேசியதாவது..
 இசை இல்லையென்றால் இன்று பாதி பேருக்கு பைத்தியம் பிடித்திருக்கும். இசையமைப்பாளர்கள் எல்லோரும் வைத்தியம் பார்ப்பவர்கள். மிக கடினமான சூழலை நான் சுலபமாக கூறிவிட்டேன். ஆனால், இந்த தலைமுறையும் ரசிக்கும்படி ஜி.வி.இசையமைத்திருக்கிறார். அவருக்கு நான் என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை, ஆனால் நிச்சயம் ஏதாவது செய்வேன். இது வெறும் இசை வெளியிடும் நிகழ்ச்சி மட்டுமல்ல, வரும் தலைமுறைகளுக்கு மிகப் பெரிய சொத்தை விட்டு போகிறோம் என்றார்.

இந்த படத்தை தயாரித்ததில் எனக்கு பெரு மகிழ்ச்சி..
தயாரிப்பாளர் துரை வீரசக்தி ..!

வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம் , தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன”. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல் பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது.

தயாரிப்பாளர் துரை வீரசக்தி பேசும்போது,

தங்கர் பச்சானுடன், நண்பராக, அண்ணனாக பல ஆண்டுகளாக இருக்கிறோம். ஒருமுறை இந்த கதையை தங்கர் பச்சான் கூறினார். #OMG படம் முடிந்ததும், இந்த படத்தை தயாரிக்கிறேன் என்றேன். இந்த படத்தை தயாரிக்க யாரும் முன்வர மாட்டார்கள். நன்றாக யோசித்துக் கொள் என்றார். இந்த படம் அவருக்கு மறுபிறவி என்று தான் சொல்ல வேண்டும். நான் மறுபடியும் ஆரம்பித்து வைத்திருக்கிறேன். அவருடைய பயணம் மீண்டும் தொடரும் என்று நம்புகிறேன். இந்த படத்தை தயாரித்தேன் என்ற பெருமை எனக்கு இருக்கும்.

இந்த படத்திற்கு இவ்வளவு தான் செலவு செய்ய முடியும் என்று திட்டமாக கூறினேன். ஆனால், ஒவ்வொரு ஜாம்பான்களும் வரவர பயம் கூடிக்கொண்டே வந்தது. அதேபோல், ஜி.வி.க்கு என்னைவிட வயதில் சிறியவராக இருந்தாலும், இதுவரை 100 ரூபாய் கூட கொடுத்ததில்லை. இந்த படத்திற்கு வரும் லாபத்தில் அவருடைய பங்கை அவர் வீட்டிற்கே சென்று கொடுப்பேன்.

பாலுமகேந்திராவின் மாணவராக இருந்த சிவபிரகாசம் இயக்கத்தில் பேரன்பும், பெருங்கோபமும் என்ற படம் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகிக் கொண்டிருக்கிறது. என்னுடைய பணத்தை இயக்குநர் அவருடைய பணமாக நினைத்து இயக்கும் இயக்குநர்களுக்கு நிச்சயம் வாய்ப்புக் கொடுப்பேன்.

இதற்கிடையில், தயாரிப்பாளர் வீரசக்தியின் தாயார் அவருக்கு பிடித்த சிலையை பரிசளித்து வாழ்த்தினார். (இன்று (07.05.2023) தயாரிப்பாளர் வீரசக்தி தாயாரின் பிறந்தநாள்)
ரூ.300 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து இந்தளவிற்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் தனி ஆளாக இருந்து என்னை வளர்த்த என் அன்னை தான் காரணம். இன்றோடு அவருக்கு 74 வயது முடிந்து 75 தொடங்குகிறது. இன்றும் அவர் மாடியில் வடகம் போட்டு வியாபாரம் செய்து வருகிறார். அது, வெளிநாடு வரை வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது என்றார்.

5 ஸ்டார் கதிரேசன் பேசும்போது,

தங்கர் பச்சானைப் பற்றி கூறுவதற்கு ஒரு நாள் போதாது. அழகி, சொல்ல மறந்த கதை போன்ற படங்கள் மக்களோடு சேர்ந்து எடுத்திருக்கிறார். மெலோடி பாடல்கள் என்றால் ஜி.வி.பிரகாஷ் தவிர யாராலும் கொடுக்க முடியாது. யோகிபாபு பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். புது இயக்குநர்களுக்கு யோகிபாபுவும், டெல்லி கணேஷ் சாரும் உறுதுணையாக இருந்து வருகிறார்கள் என்றார்.

ஜி.வி.பிரகாஷ் எனது கணவர் என்பதை விட நல்ல நண்பர்..
பாடகி சைந்தவி!

பாடகர், இசையாமைப்பாளர், நடிகர் மூன்றுக்கும் எவ்வளவு மதிப்பெண் கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு, 100க்கு 100 மதிப்பெண் கொடுப்பேன் என்றார். அவரைப் போன்ற உறுதுணையான கணவர் கிடைப்பது கடினம். மேலும், அவர் எனக்கு கணவரை காட்டிலும் எப்போதும் நண்பர் தான் என்றார். பின்பு, இந்த படத்திற்காக அவர் பாடிய பாடல்களில் ஒன்றைப் பாடினார்.

அவர் பாடி முடித்ததும், ஜி.வி.பிரகாஷ் மேடைக்கு வந்து…

அழகி படம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒளியிலே பாடலை லைட் இல்லாமல் எடுத்திருப்பார்கள். சொல்ல மறந்த கதை படம் வந்த போது யார் இந்த இயக்குநர் என்று கேட்டு அறிந்து கொண்டேன்.

கள்வன் என்ற ஒரு படத்திற்காக நானும் பாரதிராஜா சாரும் சத்தியமங்கலம் பகுதியில் படப்பிடிப்பு நடித்துக் கொண்டிருக்கும்போது, இந்த படத்தின் கதையை தங்கர் பச்சான் கூறினார். ஏற்கனவே, பாரதிராஜா சார் மற்றும் யோகிபாபு இக் கதையை சொல்லி இருந்தார்கள்..பிடித்திருந்ததால் ஒப்புக் கொண்டேன். அதேபோல், கமர்ஷியல் படங்கள் மட்டும் அல்லாமல், இதுபோன்ற உணர்வுபூர்வமாகவும் இசையமைக்க வேண்டும் என்று எப்போதுமே நினைப்பேன்..என்றார்.

பார்த்து விட்டு வெளியே வந்தவுடன்..
 இன்னும் சில காலம் என் பெற்றோருடன் நேரம் செலவழித்திருக்கலாம் என்று தோன்றியது.
– படத்தொகுப்பாளர் ஆண்டனி!!

படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசும்போது,

இந்த படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பார்த்து விட்டு வெளியே வந்தவுடன்..
 இன்னும் சில காலம் என் பெற்றோருடன் நேரம் செலவழித்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால், வாழ்க்கை, வேலை என்று வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது. ஆகையால், நேரம் செலவழிக்க இயலவில்லை. கமர்சியல் படங்களைவிட இப்படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என் இதயத்தை தொட்டு விட்டது என்றார்.

நான் நடித்தால், ரஜினி நடித்த ‘பரட்டை’ கதாத்திரத்தில் தான் நடிப்பேன்..
நடிகர் யோகி பாபு!!

நடிகர் யோகிபாபு பேசும்போது,

இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த வீரசக்தி மற்றும் தங்கர் பச்சான் சாருக்கு நன்றி. இப்படத்தின் கதையைக் கூறினார். இந்த கதையில் முக்கியமான பாத்திரம் குழந்தை தான். அதன்பிறகு பாரதிராஜா சார், கௌதம் மேனன் சார் என்று பலரும் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அனைவரும் உறுதுணையாக இருந்திருக்கிறர்கள்.

தங்கர் பச்சான் எவ்வளவுதான் கோபப்பட்டாலும், அவருடைய மனைவி, ‘மாமா கோபப்படாதீர்கள்’ என்று கூறிவார். அதற்கு, இல்லைமா இவர்களுக்கு தமிழே வர மாட்டேங்குது, கோபப்பட்டால் தான் நடிகர்கள் சரியாகப் பேசுவார்கள் என்று கூறுவார் என்று நகைச்சுவையாகப் பேசினார்.

’16 வயதினிலே’ படத்தில், சப்பாணி, பரட்டை, டாக்டர் இந்த மூன்று கேரக்டரில் நீங்கள் நடித்தால் எந்த கேரக்டரில் நடிப்பீர்கள் என்று யோகி பாபுவிடம் கேட்க்கப் பட்டது. அதற்கு, டக்டர் கேரக்டர்.. மயில் வாழ்க்கையை ஏமாத்திட்டு போயிட்டான். அது வேண்டாம். எனக்கு ரஜினி நடித்த நடித்த ‘பரட்டை’ கதாபாத்திரத்தில் தான் நான் நடிக்க விரும்புவேன்.. என்றார். அப்போது அரங்கமே அதிர்ந்தது.

தங்கர் பச்சான் ‘நடிப்பு செம்மல்’ என்று என்னைக் குறிப்பிட்டிருக்கிறார், அதற்கு நன்றி என்றார்.

இதற்கிடையில் யோகிபாபுவிற்கு தங்கர் பச்சான் முந்திரி பருப்பும், பலாப்பழமும் கொடுத்துவிட்டு, எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கக் கூடியவர் யோகிபாபு, அவரை சரியாக கையாண்டால் மிகச் சிறந்த நடிப்பைப் பெறலாம். இதுவரை எல்லோரையும் சிரிக்க வைத்தவர் இந்த படத்தில் எல்லோரையும் அழ வைப்பார். இவர் நடிக்க ஒப்புக் கொண்ட பின்பு தான் இந்த படம் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தது என்பதில் சந்தேகமில்லை. மிக மிக அழுத்தமாக பாத்திரம், இதற்கு மேல் ஒரு படத்தைக் கொடுக்க வேண்டும். இசையோடு சேர்ந்து இவருடைய காட்சிகளைப் பார்க்கும்போது சிறப்பாக இருந்தது. இப்படத்தில் மூன்று விதமான இசை இருக்கிறது என்றார்.

நான் பார்த்து என்னை பாதித்த இரண்டு கேரக்டர்..!

தங்கர் பச்சன் .

2003-ல் நான் எழுதிய ஒரு சிறுகதை. தி.நகரில் திருப்பதி கோயிலின் அருகில் ஒரு நண்பரை சந்திக்க காத்திருந்தேன். அப்போது கோயில் வாசலில் இருவர் அங்கு அமர்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு உலகத்தை விட்டே போய் விட வேண்டும், வாழவே விருப்பமில்லை என்ற முகம். அவர் கையில் யோகிபாபு கையில் வைத்திருப்பது போல ஒரு பை வைத்திருந்தார். அதற்கு நேர்மாறாக.. இன்னொருவரும் அதே மனனிலையில். ஆனால் அவர், வாழ்க்கையில் உயர்ந்த பதவியில் இருப்பவராக தோன்றியது. இருவர் முகமும் எழுதப்படாத, உச்சரிக்கப்படாத ஒரே உணர்வை எனக்கு கூறியது. கோயிலில் இருந்து ஒருவர் பிரசாதம் கொண்டு வந்து தருகிறார். அந்த ஏழை வாங்கிக் கொள்கிறார். ஆனால், அந்த பணக்காரர் தன்மானம் காரணமாக வாங்க மறுக்கிறார். பிறகு வாங்கிக் கொள்கிறார், அவர் கண்களில் பசி தெரிந்தது. அன்று இரவு வீட்டிற்கு செல்லும்போது இந்த இரு மனிதர்களும் என்னை பாதித்தார்கள். அப்போது தான் இந்த கதையை எழுதினேன். கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன என்று தான் பெயர் வைத்தேன். ஆனால், கருமேகங்கள் கலைகின்றன என்று மாறியது. ஆனால், இதையும் ‘கேகே’ என்று மாற்றி விடுகிறார்கள். தமிழை சுருக்கும் கொடுமை நடந்து வருவது வருத்தமாக இருக்கிறது. ( அரங்கத்தில் சிரிப்பலை )

வாழ்ந்து முடித்த ஒருவர், வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து அன்புக்காக ஏங்கும் மற்றொருவர் இந்த இரண்டு பேர் போல உலகம் முழுக்க இருக்கிறார்கள். அன்புக்காக ஏங்கி தவிக்கிறார்கள். யாருக்கும் யார் மீதும் அன்பு இல்லை. அதைக் கூற வேண்டும் என்று நினைத்தேன்.

எல்லா ஊர்களிலும் சென்று வியாபாரம் செய்வது சிறந்த படமல்ல. எல்லா ஊர்களிலும் உள்ள மக்களைப் பற்றி எடுக்க வேண்டும். ஆனால், தரமான படங்களை யார் கொண்டாடுகிறார்கள். மக்கள் நல்ல படங்கள் திரையரங்கில் பார்க்கக் கூடாது, வீட்டில் தான் பார்க்க வேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறார்கள். படம் நன்றாக இல்லை என்று கூறினால் , ஏன் படம் நன்றாக இல்லை என்று கூறிகொண்டு  ரூ.1000/- க்கு டிக்கட் எடுக்கிறார்கள். ம். ஆனால், இது போன்ற நல்ல படங்களை திரையரங்கில் வந்து பார்த்தால் இன்னும் இது போன்ற பல படங்களை இயக்குவேன். மக்களின் வாழ்வியலை சொல்லும்படியாக என்னிடம் பல கதைகள் இருக்கிறது.

பாரதிராஜாவிடம் இந்த கதையைக் கூறிவிட்டு ஒரு வருடம் காத்திருந்தேன். இந்த கதையை யோகிபாபுவிடம் கதையைக் கூறும்போது, இவர் நடிப்பாரா? இந்த கதாபாத்திரம் அவருக்கு ஏற்றதாக இருக்குமா? என்றும் சந்தேகம் மனதில் எழுந்து கொண்டு இருந்தது. கதை கேட்டு முடித்ததும், இதைதான் எடுக்க வேண்டும் என்று உறுதியாக கூறினார். அப்போது தான் அவர் எப்படிப்பட்ட மனிதர் நான் தெரிந்து கொண்டேன்.

ஆனால், நான்  எடுத்த படத்தை பாராட்டுகிறார்கள், கொண்டாடுகிறார்கள். பள்ளிக்கூடம் படத்தைப் பார்த்து இன்று பல பள்ளிகள் புதுபிக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால், பாக்ஸ் ஆபிஸில் என்ன வந்தது. அப்போது யார் குற்றவாளிகள்? இந்த படம் பார்த்ததும் யார் யாரெல்லாம் அப்பாவைத் தேடி ஓடப் போகிறார்கள் என்று பாருங்கள். இதற்கு மேல் நீங்கள் படம் பாருங்கள்.

இந்த படத்தை,  யான் பிரதாப் அவருக்கு படையல் செய்கிறேன். எல்லோரும் சினிமா என்று ஒரே மாதிரி எடுத்துக் கொண்டிருக்கும்போது, திரை மொழியை அடித்து உடைத்தவர். படத்தொகுப்பில் இலக்கணத்தைப் சுக்குநூறாக புரட்டிப் போட்டவர். அதை இந்த படத்தில் கையாண்டிருக்கிறேன். அவர் மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்தார். அவர் அப்பா பிரஞ்சு, அம்மா சுவிட்சர்லாந்து. சுவிட்சர்லாந்து நாட்டில் அவர்களுடைய இறுதி வாழ்க்கையை அவர்கள் முடிவு செய்துக் கொள்ளலாம் என்று சட்டம் இருக்கிறது. ஆகையால், அவருடைய முடிவை அவரே தேடிக் கொண்டார்.

ஆண்டனியின் படத்தொகுப்பைப் பார்த்து ஆச்சர்யம். அவர் மாடர்ன் எடிட்டர். அவரின் உலகம் வேறு. அவரின் பார்வையில் இப்படம் எப்படி இருக்கிறது என்று கேட்க ஆசை. அவருக்கு மட்டும் தான் இப்படத்தை முதலில் காண்பிக்க நினைத்தேன். இப்போது இப்படத்தைப் பற்றி அவர் கூறுவார்.

இந்த படத்தில் எல்லோரும் என்னைத் திட்டியிருப்பார்கள். பாரதிராஜா அண்ணன் இன்னமும் என்னை இப்படி செய்து விட்டான் என்று திட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு நல்ல படைப்பைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டும் தான். யோகிபாபு இன்னும் 5 நாள் இருந்திருந்தால் பிரமாதமாக இருந்திருக்கும். ஆனால், அவரை குறைகூற இயலவில்லை. அவ்வளவு படங்கள் வைத்திருக்கிறார். 3 நாட்கள், 5 நாட்கள் என்று டேட் கொடுத்து  பலரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷை அவ்வப்போது அழைத்து வேலை வாங்குவேன். இந்த குரல் வேண்டாம் என்று பல குரல்களை மறுத்திருக்கிறேன். அனைத்திற்கும் பொறுமையாக இசையமைத்துக் கொடுத்தார்.

வீரசக்தி என் தாயின் வயிற்றில் பிறக்காத சகோதரன்.

எங்கள் மகள் 6 மாதத்திலிருந்து எங்களுடன் இருக்கிறார். ஒவ்வொரு கட்டத்திலும் அவருடன் எடுத்துக் கொண்ட வீடியோ இருக்கிறது. அவர் தான் சாரல், அவரை இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். நிறைய திட்டியிருக்கிறேன். ஆனால், பேசாமலேயே நடிப்பார். அனைவரையும் அழ வைக்க போகிறார்.

6 நிமிடம், 71/2 நிமிடம் என்று ஒரே நேரத்தில் ஓடக்கூடிய கடையில் அதிதி பாலன் அசத்திருக்கிறார். அந்த காட்சியை பார்த்து விட்டு  அனைவரும் கொண்டாடுவீர்கள் என்றார்.

Karumegangal kalaigindrana movie audio & Trailer launch event video links

Lokesh Kanagaraj
https://we.tl/t-NSjLES6IvM

Dilli Ganesh
https://we.tl/t-pWF0Aait7h

Thangar bachan
https://we.tl/t-yEEvAK7MTv

G.V Prakash
https://we.tl/t-8qVlmmvdiV

5 star kathiresan
https://we.tl/t-5lxAgbp2fN

Aditi Balan
https://we.tl/t-cZ990rg77E

Saindhavi GV
https://we.tl/t-84C40BhSKx

Gautham Vasudev Menon
https://we.tl/t-xyLXUXA1uP

Mahanaa
https://we.tl/t-J03BntLPiN

Natrai
https://we.tl/t-UIBrWrbzvt

Perarasu
https://we.tl/t-5tYvYydCJ0

Durai Veerasakthi producer
https://we.tl/t-vJF42K1keb

Dir SAC
https://we.tl/t-s0kvNHbMip

Suseenthiran
https://we.tl/t-wuUaHAxdlO

Vairamuthu
https://we.tl/t-y8YmQRqcFw

Yogibabu
https://we.tl/t-c0J3fBmkEn

Karumegangal kalaigindrana Full event video link

https://we.tl/t-BHzEtdNr3s