சென்னையில் மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் அறிவிப்பு
தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ் தென் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை ரூ. 719.70 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது: சென்னையில் மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் அறிவிப்பு
பழனியில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டமைப்பை விரைவில் மேற்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார்
தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ் 2014-15 முதல் இதுவரை தென் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.719.70 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாக சென்னையில் இன்று நடைபெற்ற தேசிய ஆயுஷ் இயக்கத்தின் மண்டல ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் கூறினார். தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கேரளா, கர்நாடகா, லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஆயுஷ் இயக்கத்தின் மூலம் ஆயுஷ் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் தென் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் சிறப்பாகப் பணியாற்றி வருவதாக அமைச்சர் பாராட்டினார்.
“பழனியில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டமைப்பை விரைவில் மேற்கொள்ளுமாறு தமிழ்நாட்டின் ஆயுஷ் குழுவினரை நான் கேட்டுக்கொள்கிறேன்”, என்று கூறிய அமைச்சர், இதே போல விசாகப்பட்டினத்தில் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை மற்றும் அரசு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியின் கட்டமைப்புப் பணிகளை முடுக்கி விடுமாறு ஆந்திரப்பிரதேச ஆயுஷ் குழுவிற்கு அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
தென்னிந்தியாவில் 17 ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைகளுக்கு தமது அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாகவும், அவற்றில் 6 மருத்துவமனைகள் பயன்பாட்டில் இருப்பதாகவும் திரு சர்பானந்தா சோனோவால் குறிப்பிட்டார். 12,500 ஆயுஷ் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களில், தென்னிந்தியாவில் உள்ள 2,181 மையங்களுக்கு அமைச்சகம் அனுமதியளித்து, அவற்றில் 1518 மையங்கள் செயல்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார்.
சுகாதார சேவையில் மக்களுக்கு முழுமையான அணுகுமுறை கிடைப்பதற்கு ஏதுவாக ஏராளமான ஆயுஷ் இடை யீடுகளை அளிப்பது தொடர்பாக தேசிய ஆயுஷ் இயக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆயுஷ் பொது சுகாதார திட்டங்களை அமல்படுத்துமாறு தென் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை அமைச்சர் வலியுறுத்தினார். பள்ளிக் குழந்தைகளுக்கு ஆயுஷ் வாயிலான ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவித்தல் (ஆயுர்வித்யா), ஆயுஷ் தாய், சேய் இடையீடு (சுப்ரஜா), ஆயுஷ் மருந்துகளை அடிப்படையாகக் கொண்ட மூத்தக் குடிமக்களுக்கான திட்டம் முதலியவை ஆயுஷ் அமைப்புமுறையை வலுப்படுத்தும், என்றார் அவர்.
ஏழை எளிய மக்கள், ஆயுஷ் சேவைகளின் பயனை பெறுவதற்காக, தேசிய ஆயுஷ் இயக்கத்தை அடித்தட்டு அளவில் அமல்படுத்துமாறு மாநிலங்கள்/ யூனியன் பிரதேச அரசு அதிகாரிகளை திரு சர்பானந்தா சோனோவால் கேட்டுக்கொண்டார். உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் அதே வேளையில் நிறுவனங்களை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இயக்குவதற்கு கண்காணிப்பு, மனித ஆற்றல், உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் நிதி முதலியவற்றிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய ஆயுஷ் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் டாக்டர் முஞ்சபாரா மகேந்திர கலுபாய், தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன், கர்நாடக மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் திரு தினேஷ் குண்டுராவ் மற்றும் பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.