ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் போராடி உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய “அமரன்” திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியானது.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் தீரத்துடன் போராடி உயிரிழந்த தமிழ் இளைஞர் மேஜர் முகுந்த் வரதராஜனின் கதை அமரன் எனும் திரைப்படமாக  தீபாவளி தினத்தில் வெளியானது.

சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாக நடித்துள்ளார். முகுந்தின் காதல் மனைவி இந்து ரெபெக்கா வர்க்கீஸாக சாய் பல்லவி நடித்துள்ளார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கியுள்ள அமரன் திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், ஆர். மகேந்திரனும் இணைந்து தயாரித்துள்ளனர்.

அசோக் சக்ரா விருதைப் பெற்றுள்ள நான்கு தமிழர்களில் முகுந்த் வரதராஜனும் ஒருவர். மேஜர் முகுந்த் மறைந்தபோது அப்போது திமுகவின் பொருளாளராக இருந்த மாண்புமிகு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் “தமிழகத்தின் வீரம் மீண்டும் ஒரு முறை இமயமலைச் சாரலில் தன் அழுத்தமான முத்திரையைப் பதிக்கும் விதத்தில், சென்னையைச் சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் காஷ்மீரில் தீவிரவாதிகளை எதிர்த்துத் துணிவுடன் போரிட்டபொழுது கொல்லப்பட்டிருக்கிறார். அவருடைய உயிர்த்தியாகத்திற்கு வீரவணக்கம் செலுத்துகின்ற அதே நேரத்தில், அந்த வீரப்புதல்வரை நாட்டிற்குத் தந்த அவருடைய பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன். இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்கும் உன்னதப் போராட்டத்தில் அந்த இளைஞர் முகுந்த் வரதராஜன், ஏற்கனவே ஐ.நா. அமைதிப் படையின் சார்பில் லெபனான் நாட்டில் பணிபுரிந்தவர் என்ற தகவல் ஒவ்வொரு தமிழரும், இந்தியரும் பெருமைப்படும் செய்தியாகும்” என்று அவரது வீரத்தைப் போற்றி இருந்தார். அதுமட்டுமின்றி, அவரது பெற்றோர், மனைவி, மகள் ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதலும் தெரிவித்திருந்தார்.

நாளை தீபாவளி தினத்தில் வெளியாகும் அமரன் படத்தின் பிரத்யேகக் காட்சியை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் படக்குழுவினருடன் அமர்ந்து பார்த்தார்.

தன் வீரத்தாலும் தியாகத்தாலும் தாய் நாட்டையும், தமிழ் நாட்டையும் பெருமைப்படுத்திய முகுந்திற்குப் புகழாரம் சூட்டும் அமரன் படத்தை உணர்ச்சி பொங்க பாராட்டினார். அத்துடன் அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன் அவர்களை தொலைபேசியில் அழைத்து தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார்.

படத்தின் கதாநாயகனான சிவகார்த்திகேயன், கதாநாயகி சாய் பல்லவி ஆகியோரும் படத்தைப் பார்த்துவிட்டு உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினர்.

தன்னைத் தந்து மண்ணைக் காத்த தமிழ் வீரன் மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரத்தையும் தியாகத்தையும் இந்தியாவே அறிந்து கொள்ளும் விதமாக வெளியாகும் அமரன் படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுக்க 3200-க்கும் அதிகமான ஸ்கீரின்களில் அமரன் வெளியாவது குறிப்பிடத்தக்கது.