வயது மாறலாம்… கனவுகள் மாறாது! குடும்ப பாசத்தையும், நம்பிக்கையையும், வெற்றியின் பயணத்தையும் சொல்ல வரும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’!
சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி, ரசிகர்களிடையே உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. குடும்ப உறவுகள், கனவுகளை நோக்கிய பயணம், காதல், நகைச்சுவை, பாசம் மற்றும் உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் அழகாக இணைத்திருக்கும் இப்படம், இந்த ஆண்டு சுதந்திர தின வார இறுதியை குடும்பத்துடன் கொண்டாடும் சிறந்த திரையரங்க அனுபவமாக அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், நாற்பது வயதைக் கடந்த நிலையிலும் தனது கனவை விடாமல் இலக்கை நோக்கி பயணிக்கும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீரரான சஞ்சய் விஸ்வநாத் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். வயது என்பது கனவுகளுக்கு ஒருபோதும் தடையல்ல என்ற அழுத்தமான கருத்தை இப்படம் எடுத்துரைக்கிறது.
தன்னம்பிக்கை, நகைச்சுவை, அன்பு, பாசம் மற்றும் வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை சூர்யா தனது இயல்பான நடிப்பால் வெளிப்படுத்தியிருப்பது டிரெய்லரின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. வழக்கமான மாஸ் அம்சங்களைத் தாண்டி, மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் சூர்யாவை பார்க்க முடிவது ரசிகர்களுக்கு புதுமையான அனுபவமாக அமையும்.
மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் பங்களிப்பு படத்தின் குடும்ப உணர்வுகளுக்கு மேலும் வலு சேர்க்கிறது. ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும், நிமிஷ் ரவியின் அழகிய ஒளிப்பதிவும் டிரெய்லரின் சிறப்பை மேலும் உயர்த்துகின்றன.
திரைக்குப் பின்னால் உருவான சிரிப்புகள், நட்புகள், உழைப்பு மற்றும் அழகான தருணங்களை வெளிப்படுத்தியுள்ள Behind the Scenes காட்சிகளும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில், ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
கனவுகளை கொண்டாட… குடும்ப பாசத்தை ரசிக்க… சூர்யாவுடன் ஒரு அழகான திரைப்பயணத்திற்கு தயாராகலாம்! ❤️
Yuvraaj & Team.PRO
