Tamil Movie Event Photos Tamil News

அகரம் பத்தாண்டுகள் ‘தடம் விதைகளின் பயணம்’

Sathish

அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவ மாணவியரில் படித்து முன்னேற வேண்டும் என்ற கனவோடு இருக்கும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், பெற்றோரை இழந்தவர்கள், வறுமையில் உழல்பவர்கள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு, கலை என கல்வி இணை செயல்பாடுகளில் மிகுந்த ஈடுபாடுட்டுடன் சிறப்பிடம் பெற்றவர்கள், கணிதம் மற்றும் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தும் திறன்பெற்ற மாணவர்கள் என அகரம் விதைத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கிறோம்.  கடந்த பத்து ஆண்டுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த 3,000 மாணவர்களின் கல்லூரிக் கனவை ‘விதைத் திட்டம்’ மூலமாக நிறைவேற்றி இருக்கிறோம். இத்தனை தொலைவை கடந்துவர துணை நின்ற அறம்சார் மனிதர்கள், சமூக நலன்சார் கொடையாளர்கள், தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவர் குறித்து நினைவுகள் சூழ, அகரம் பத்தாண்டுகள் ‘தடம் விதைகளின் பயணம்’ நிகழ்வு 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை சோழிங்கநல்லூர் சத்யபாமா பல்கலைகழகதத்தில் இன்று நடைபெற்றது. தொழில் நுட்பங்களும், தொடர்பு கொள்ளும் வசதிகளும் விரல் நுனிக்கு வந்துவிட்ட காலம் இது. தகவல் தொழில்நுட்பம், உலகின் அத்தனை தகவல்களையும் அள்ளித் தந்தாலும், வாய்ப்புகளும் வழிகாட்டல்களும் தேவைப்படும் கிராமப்புற முதல் தலைமுறை மாணவர்கள், தங்களின் கல்லூரிக் கல்விக்காக இன்றும் காத்திருக்கிறார்கள். அத்தகைய மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் பட்டப்படிப்பு பயில்வதற்கான வாய்ப்பினை உருவாக்கி தருவதே அகரம் விதைத் திட்டம்.

விழாவில் நடிகர் சிவகுமார், “அகரத்தின் பயணம் பல நூறு ஆண்டுகள் செல்லவேண்டும். இன்றைய மாணவர்களுக்கு உதவ அகரம் அறக்கட்டளை இருக்கிறது. ஆனால் என் காலத்தில் கல்வியுதவி செய்ய யாருமில்லை. நானும் உங்களை போல்தான்.

நான் பிறந்த ஒரு வருடத்தில் என் தந்தையை இழந்தேன். சிறுவயதில் சகோதரன், சகோதரியை இழந்தேன். பஞ்சமிகுந்த அந்த காலகட்டத்திலும் என் தாயின் அரவனைப்பால் ஊக்குவிப்பால் இன்று உங்கள் முன்னால் நிற்கின்றேன். நான் இருந்ததால் தான் இன்று சூர்யா, கார்த்தி மற்றும் அவர்களுடன் அகரம் இருக்கிறது. எனவே அந்த தாய்க்குதான் நன்றியை தெரிவிக்க வேண்டும்.

விட்டில் ஒருவாராவது படிக்க வேண்டும் என்பதற்காக எனது அக்காவின் படிப்பை நிறுத்தி என்னை படிக்க வைத்தார்கள். அந்த கால கட்டத்தில் தீபாவளி பொங்கலுக்கு புதிய உடைகள் அணிந்ததில்லை. துணி கிழிந்தால் மாற்று துணி மட்டும் கிடைக்கும். பள்ளியில் எடுத்த மாணவர்களின் குழு புகைப்படத்தை வாங்க பணம் இல்லை. அதே பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு பிறகு என்னுடன் படித்த மாணவர்கள் சில பேர் மீண்டும் நாங்கள் படித்த பள்ளியில் சந்தித்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். இன்று அந்த பள்ளியை நானும் என்னுடன் படித்த மாணவர்களுடன் சேர்ந்து தத்தேடுத்துள்ளேன். எங்களால் முடிந்த தொகையை வசூலித்து, அரசு செய்த உதவியுடன் சேர்த்து எங்கள் கல்வி அறக்கட்டளையின் மூலமாக ஒரு அரங்கமும், 5 வகுப்பறைகளையும் கட்டிக்கொடுத்தோம். சூர்யா, கார்த்தி அந்த பள்ளியில் 500 நாற்காலிகளை நன்கொடை அளித்தனர். அதுதான் நான் எங்கள் பள்ளிக்கு செலுத்திய மரியாதை.

14 வயது வரை 14 படங்களை மட்டுமே பார்த்த நான், 14 வருடங்களில் 100 படங்களை நடித்தேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து 1980ம் ஆண்டு சிவகுமார் கல்வி அறக்கட்டளையை துவக்கினோம். +2 மாணவர்களுக்கு அந்த காலகட்டத்தில் முதல் பரிசு 1000 ரூபாய், இரண்டாம் பரிசு 750 ரூபாய், மூன்றாம் பரிசு 500 ரூபாய் கொடுத்து வந்தேன்.

25 ஆண்டுகளாக சிவகுமார் கல்வி அறக்கட்டளை நடந்து 2006ம் ஆண்டு அகரமாக தொடங்கப்பட்டது. இன்றும் நாற்பது ஆண்டுகளாக சிவகுமார் கல்வி அறக்கட்டளை நடைபோட்டு கொண்டிருக்கிறது.

பல படங்களில் சூர்யா நடித்தாலும் அவருக்கு நிலையான பெயர் அகரத்தின் மூலமே கிடைக்கும். அகரம் அறக்கட்டளையே சூர்யாவின் அடையாளம். விவசாயத்திற்கு உதவும் உழவன் பவுண்டேஷனே கார்த்தியின் அடையாளம். மாணவர்கள் அனைவரும் தைரியமாக இருங்கள், நான் உங்களை விட அதிகம் கஷ்டங்களை சந்தித்தவன். ஆனால் இன்று இந்த நிலையில் உள்ளேன். சத்தியமாகவும் நேர்மையாகவும் நீங்கள் உழைத்தால் வெற்றியின் உச்சத்திற்கு செல்வீர்கள்” என்றார்.

விழாவில் நடிகர் கார்த்தி, “இங்கு அனைவரிடத்திலும் ஒரு பெரிய சந்தோஷத்தை காண முடிகிறது. அகரம் குழுவிடம் உற்சாகத்திற்கு என்றும் குறைவிருக்காது என்பதை இன்று கண்கூடாக பார்க்கிறேன்.

நான் இங்கு ஒரு விருந்தினராக வந்துள்ளேன். என்றுமே வாங்குவதை காட்டிலும் கொடுப்பதில் மகிழ்ச்சி அதிகம் உள்ளது. ஆகவே நாம் வாங்கி கொண்டாலும் கொடுக்கும் நிலையை என்றும் பின்பற்றுவோம். மற்றவர்களுக்கு கொடுத்து உதவுவது நம் சந்தோஷத்தை நிலை நிறுத்தும்.

உங்களை யாரோடும் ஒப்பிடாதீகள். நீங்கள் மற்றவர்களை விட மேலானவரும் இல்லை, கீழானவரும் இல்லை, சம நிலையில் உள்ளவரும் இல்லை. நீங்கள் என்றுமே தனித்துவம் வாய்ந்தவர். மற்றவர் பெறும் வெற்றிக்கு மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் என்றுமே தேடல் என்பது தேவை. நாம் எப்போதும் நம் வாழ்வில் புது தேடலை கண்டு மேம்படுத்திக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் சமநிலை மிகவும் முக்கியமானது. திருமணமான பின்பு குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துங்கள். சகிப்புத்தன்மை, தேடல், சம நிலை ஆகியவை உங்கள் வாழ்வில் முக்கியம்” என்றார்.

விழாவில் நடிகர் சூர்யா, “முதலில் சத்யபாமா பல்கலை கழக வேந்தர் மரியஜீனா ஜான்சன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அகரம் கட்டளையின் இந்த வளர்ச்சிக்கு என் நண்பன் ஞானவேலும், ஜெயஶ்ரீ அவர்களும் முக்கிய காரணம். அவர்களின் எண்ணங்களும், ஊக்குவிப்பும் மேலும் இரவு பகல் பார்க்காமல் அவர்கள் செலுத்தும் அசூர உழைப்பினால் தான் இன்று அகரம் இந்த 10 ஆண்டுகள் கடந்தும் கம்பீர நடைபோட்டு கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நான் நன்றி கூற இயலாது, அடையாளம் காண்பிக்க முடியும்.

அகரம் ஒரு குடும்பம், பழைய தலைமுறையினருடன் புதிய தலைமுறையினரும் ஒன்று சேர்ந்து பயணிக்கும் பாதையே அகரம். அகரம் குடும்பத்தில் 3000க்கும் அதிகமான மாணவர்கள் என்பது எளிதான காரியமல்ல, இங்குள்ள அனைவரின் ஒட்டுமொத்த உழைப்பே அகரம்.

மாணவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அவர்களின் வாழ்க்கைதரத்தை கல்வி அளிப்பதின் மூலம் மேம்படுத்தி அவர்களின் குடும்பம், சொந்த பிரச்சனைகளை சமாளித்து அவர்களை சரியான பாதையில் பயணிக்க வைப்பது என்பது அகரம் அனைவரின் மூலம் நிகழ்த்தும் சாதனை.

அகரம் அறக்கட்டளையில் அனைத்து தம்பி தங்கைகளுடன் நானும் ஒரு சகபயணியாக பயணிப்பது மட்டுமன்றி எனது பங்களிப்பையும் செலுத்துவேன்.

மூன்று விஷயங்கள் என்றுமே நம்மை சுற்றி இருக்கும். நம் குடும்பம், நம் சமுகம், நம் வேலை. இந்த மூன்றிலும் நாம் சமநிலையை பராமிரிக்க வேண்டும். மூன்றிற்கும் உங்களால் முடிந்த நேரத்தை செலவிடுங்கள். அகரம் அறக்கட்டளையின் வெற்றி என்பது அகரம் மாணவர்கள் கல்வி, வேலை ஆகியவற்றில் பெறும் வெற்றியே என்று நான் கூறுவேன். நாம் மற்றவர்களுக்கு பயனுள்ளவர்களாக இருந்தால் நம் வாழ்க்கை முழுமை பெறும்.

அகரம் அறக்கட்டளையின் புதிய முயற்சி “இணை”. முன்னாள் அரசு பள்ளி மாணவர்களை இணைத்து அவர்கள் படித்த பள்ளிகளின் மேம்பாட்டிற்க்கும், அங்கு படிக்கும் மாணவர்களின் வளரச்சிக்கும் உதவுவதே இந்த முயற்சியின் நோக்கம்.

மேலும் நிறைய படங்களில் நடிப்பேன், நன்றாக சம்பாதிப்பேன், நிறைய நல்ல உதவிகளை செய்வேன்” என்றார்.

அகரம் செயல்படுத்தும் மற்ற திட்டங்கள் குறித்து ஒரு பார்வை :

அகரம் ‘நமது பள்ளி’ திட்டம் மறைமலைநகர் மற்றும் கருங்குழி பகுதிகளில் தலா ஒரு அரசுப் பள்ளியை தேர்ந்தெடுத்து, மாணவர்களின் கற்றல் திறன மேம்பாட்டுப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். இரண்டு வருட நமது பள்ளி திட்ட செயல்பாடுகளால் பள்ளி இடைநிற்றல் குறைந்து, சேர்க்கை விகிதமும் உயர்ந்துள்ளது. சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின்படி பெரு நிறுவனங்களை அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு தேவைகளை நிறைவேற்றி வருகிறோம்.

‘இணை’ திட்டத்தின் மூலமாக அரசுப் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து, பள்ளி நிகழ்வுகளை எடுத்துச் செய்வது, கல்வி சீர் வழங்குதல், மரம் நடுதல், பள்ளிச் சேர்க்கை எண்ணிக்கையை உயர்த்த, பெற்றோர்கள் மத்தியில் அரசுப் பள்ளி குறித்தான பெருமையை தக்கவைக்க என பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை எடுக்க இருக்கிறோம். முன்னோட்டமாக கடந்த ஒரு வருடம் திண்டிவனம் மற்றும் மதுரை பகுதியைச் சேர்ந்த 30 பள்ளிகளில் ‘இணை’ திட்டப் பணிகளை பரிசோதித்து மெருகேற்றி இருக்கிறோம். அடுத்ததாக தமிழகம் முழுவதும் இணைத் திட்டத்தை விரிவுபடுத்த இருக்கிறோம்.

சமூகத்தில் பின்தங்கிய மக்கள் இருக்கும் திருவள்ளுவர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று கிராமங்களில் ‘நமது கிராமம்’ திட்டத்தை தொடங்கி, அவர்கள் வாழ்வியல் மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுத்து வருகிறோம்.

‘தைத் திட்டத்தின்’ மூலம் கல்வி இடை நிற்றல் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கி, சிறந்த பணி வாய்ப்பை அவர்கள் பெற்றிட வழிகாட்டுகிறோம்.

நிகழ்வில் நடிகர் சிவகுமார், அகரம் அறக்கட்டளை நிறுவனர் நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி, சத்யபாமா பல்கலை கழக வேந்தர் மரியஜீனா ஜான்சன், சரவணா ஸ்டாக்ஸ் தலைவர் திரு. சத்யமூர்த்தி,  மற்றும் அகரம் பயிற்றுநர்கள், தன்னார்வலர்கள், மூன்றாயிறத்திற்கும் மேலான மாணவர்கள் கலந்து கொண்டனர்.