‘கடலில் கட்டுமரமாய்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இப்படம் முழுக்க முழுக்க விவசாயிகளை மையப்படுத்தி எடுத்திருக்கிறார்கள். நடன இயக்குநர் ஸ்ரீதர் இப்படத்தைப் பற்றி கூறும்போது, ஒரு நல்ல கருத்துக்கு அனைவரும் ஆதரவு கொடுப்பார்கள் என்றார். அதேபோல், ‘ஜாகுவார்’ தங்கமும் வெளியிலிருந்து வரும் தயாரிப்பாளர்களுக்கு நாங்கள் எப்போதும் ஆதரவு கொடுப்போம். ‘தோல உரிச்சுப் போட்ருவேன் நிலத்துல கால வெச்சா’ என்று இப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் அனைத்து விவசாயிகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். இப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என்றார். மேலும், இப்படத்தைப் பற்றியும் இப்படத்தின் பாடல்களைப் பற்றியும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பேசியதாவது
கதாநாயகி ரித்திகா பேசும்போது,
இப்படம் குடும்பத்தோடு வந்து பார்க்கும்படி அமைந்திருக்கும் படம். இப்படத்தில் நாயகி கதாபாத்திரத்தில் நீ தான் நடிக்க வேண்டும், நீ தான் இதற்கு பொருத்தமாக இருப்பாய் என்று இயக்குநர் என்னிடம் கூறினார். படப்பிடிப்பில் எனக்கு உறுதுணையாக இருந்த படக்குழுவினருக்கு நன்றி என்றார்.
நடன இயக்குநர் ஸ்ரீதர் பேசும்போது,
கடலில் கட்டுமரமாய் படத்தின் பாடலை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான்காவது பாடலை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரமேஷ்ரெட்டி நடனத்தை இயக்கி அவரே ஆடியும் இருக்கிறார். நான் ராஜுசுந்தரம் மற்றும் பிரபுதேவா இருவரிடமும் உதவியாளனாகவும் நடனம் ஆடுபவனாகவும் பணிபுரியும்போதே அவரை எனக்கு தெரியும். அவரிடம் தொழில் பக்தியைக் கற்றுக் கொண்டேன். ஆகையால் தான் அவரால் இந்த உயரத்திற்கு வரமுடிந்தது. என்னுடைய நடனத்தை பிரம்மாண்டமாக கொண்டு செல்வது பத்திரிகை மற்றும் மீடியா நண்பர்கள் தான். அவர்களுக்கு நன்றி. மேலும், இப்படத்தின் கதை, இசை, பாடல்கள் என அனைத்தும் பிரம்மாண்டமாக வந்திருக்கிறது. இப்படம் வெற்றியடைய படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்றார்.
நடன இயக்குநர் ரமேஷ் ரெட்டி பேசும்போது,
ஸ்ரீதரை எனக்கு மிகவும் பிடிக்கும். எனது நண்பரும் கூட. ராஜுசுந்தரத்திடம் 15 வருடம் பணிபுரிந்திருக்கிறோம். நாங்கள் செய்யும் பணியை அர்ப்பணிப்போடு செய்வதற்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம். ‘கடலில் கட்டுமரமாய்’ படத்திற்கு குழுவாக பணிபுரிந்ததில் மகிழ்ச்சி என்றார்.
கதாநாயகன் ரக்ஷன் பேசும்போது,
இது எனக்கு இரண்டாவது படம். விவசாயத்தை மையப்படுத்தி அமைந்திருக்கும் படம் என்றார்.
தயாரிப்பாளர் முனுசாமி பேசும்போது,
இப்படம் வரலாறு படைக்கும் திரைப்படமாக இருக்கும் என்றார்.
இசையமைப்பாளர் ராம்ஜி பேசும்போது,
‘கடலில் கட்டுமரமாய்’ படத்தை மிகுந்த சிரமத்தோடு எடுத்திருக்கிறோம். இப்படத்திற்காக பணிபுரிந்த அனைவரும் கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். பிடித்த வேலையை எப்போதும் கஷ்டப்பட்டுதான் செய்ய வேண்டும். இப்படம் நன்றாக வந்திருக்கிறது என்றார்.
இப்படத்தில் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து செய்திருக்கிறோம். இப்படத்தின் நான்கு பாடல்களும் நான்கு விதமாக இருக்கும். ‘கானா’ வேலு, பாலா அன்பு, ரமேஷ் என்று புதுமுக கவிஞர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பாடல்களை இயற்றியிருக்கிறார்கள். இப்படத்தின் இயக்குநர் என்னுடைய நண்பர். என்மீது நம்பிக்கை வைத்து இப்படத்தைக் கொடுத்ததற்கு நன்றி. இப்படத்தின் தயாரிப்பாளர் முனுசாமி அற்புதமான மனிதர். அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது என்றார்.
நடிகர் மகேந்திரன் பேசும்போது,
சினிமா என்பது அம்மா மாதிரி. ஒருமுறை அவரை நம்பி வந்துவிட்டால் நிச்சயம் கைகொடுப்பாள். இயக்குநர் கடின உழைப்பால் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு பாடல்கள் மிகவும் முக்கியம். பாடல்களும் அதன் காட்சி அமைப்புகளும் தரமானதாக இருக்கிறது. ஒவ்வொரு நொடிக்கும் ஒரு நடிகன் பிறந்துகொண்டே இருக்கிறார். சினிமாவில் எப்போதும் புதிதாக கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அனைவரும் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிட்டும் என்றார்.
இயக்குநர் யுவராஜ் முனிஷ் பேசும்போது,
முழுக்க முழுக்க விவசாயிகளைப் பற்றி கூறும் படமாக எடுத்திருக்கிறோம். கதாநாயகன் சிறப்பாக நடித்திருக்கிறார். இப்படத்தை டிசம்பர் மாதம் வெளியிட முடிவு செய்திருக்கிறோம் என்றார்.
திமுக துணை பொது செயலாளர் வி.பி.துரைசாமி பேசும்போது
இன்றைய சூழலில் விவசாயம் தான் பிரதானம். நம் நாட்டில் தற்போது விவசாயம் செய்வதற்கு தேவையான நிலபரப்பு மிகவும் குறைந்து வருகிறது. அதை வைத்து நாட்டிற்கு தேவையான கருத்துக்களை எளிய பட்ஜெட்டில் இத்திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பதை ‘குடலை உருவி மாலையா போட்ருவேன் விவசாய நிலத்தை தொட்டா’ என்ற கதாநாயகனின் ஒரே வசனத்தில் நான் புரிந்துகொண்டேன். அந்த ஒரு வசனம் என் மனதை தைத்துவிட்டது. நானும் சினிமா ரசிகன் தான். இதில் நடித்த அனைவருரின் நடிப்பும் மிகவும் அனுபவம் வாய்ந்ததாக தெரிகிறது. இன்றைய நடைமுறையைப் பற்றி அறிந்து இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநருக்கு பாராட்டுக்கள்.
குறிப்பாக இப்படத்தின் இசையைப் பற்றி நான் சொல்லியாக வேண்டும். இப்படத்திற்கு பலம் சேர்க்கும் விதமாக பாடல் வரிகள் புரியும்படி அளவோடு இசையமைத்திருக்கிறார் ராம்ஜி. பாடல் வரிகளும் எதுகை மோனையில் ரசிக்கும்படி இயற்றியிருக்கிறார்கள் பாடலாசிரியர்கள்.
விவசாயத்தை வலியுறுத்தும் விதமாக தைரியமாக முயற்சி செய்திருக்கிறார்கள். இத்திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.
‘கடலில் கட்டுமரமாய்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் ‘ஜாகுவார்’ தங்கம், விஜயமுரளி, பெருதுளசி பழனிவேல், அபி சரவணன், மகேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள்.நிகழ்ச்சியின் இறுதியில், இப்படத்தின் இசை தகடு வெளியிடப்பட்டது.Priya (PRO)