முத்தக் காட்சி எடுப்பது தவறில்லை – ஆர்.கே.சுரேஷ்
எல்லா படங்களுக்கும் தியேட்டர் கிடைக்க வேண்டும் என்று விஷாலிடம் கூறினேன் – ஆர்.கே.சுரேஷ்
மது அருந்தும் காட்சியில் ஹீரோக்கள் நடிக்க கூடாது – ஜாக்குவார் தங்கம் வேண்டுகோள்
தாயின் அருள் புரொடக்ஷன்ஸ் வழங்கும் படம் எதிர்வினையாற்று. இதில் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், சம்பத்ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் நாயகன் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், சம்பத்ராம், லட்சுமி பிரியா ஒளிப்பதிவாளர் மனோஜ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினரும், தயாரிப்பாளர் தனஞ்செயன், விஜிபி சந்தோஷம், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.
விழாவில் அலெக்ஸ் பேசிம்போது, ‘இந்தப்படம் கடந்த ஆறு மாதமாக எப்படி கடந்தது என்றே தெரியவில்லை. இந்தப்படத்தில் உழைத்த அனைவருக்கும் பெரிய நன்றி. டாக்டராக இருந்தவன் எப்படி நடிகராக மாறினார் என்று கேட்டார்கள். எனக்கு சின்ன வயதில் இருந்தே நடிப்பு மீது ஈர்ப்பு உண்டு. முதல் நன்றி என் அம்மாவிற்குத் தான். அவரிடம் ஒருபடத்தை நானே நடித்து இயக்க வேண்டும் என்றதும், என் அம்மா என்னை ஊக்கப்படுத்தினார். இந்தப்படத்தை இரவு பகலாக உழைத்து 24 நாட்களில் முடித்தோம். அதற்கு காரணம் என் டைரக்ஷன் டீம் தான். ஆர்.கே.சுரேஷ் அண்ணா சிறந்த நடிகர். அவரை முதலில் புக் பண்ணிவிட்டுத் தான் கதை எழுதினேன். சனம் ஷெட்டி மிகவும் சவுகரியமான நடிகை. மேலும் படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி’ என்றார்.
நாயகி சனம்ஷெட்டி பேசும்போது, ‘என் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தில் வாய்ப்பு தந்த அலெக்ஸுக்கு நன்றி. தயாரிப்பாளர் அனிதா மேடம் அவர்களுக்கும் நன்றி. படத்தின் பாடல்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு. ஒளிப்பதிவாளர் சாருக்கு நன்றி. சில பிரேம்களில் என்னை ஆச்சர்யமாக பார்க்க வைத்திருக்கிறார். ஆர்.கே.சுரேஷ் அவர்களுடன் பணியாற்றியது பெரும் மகிழ்ச்சி. அலெக்ஸ் தெளிவான நபர். எல்லாவற்றையும் நன்கு திட்டுமிட்ட வேலை செய்யக்கூடியவர். இந்தப்படம் பெரியளவில் பேசப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்’என்றார்.
நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, ‘சினிமாவில் டிஸ்டிப்யூட்டராக வந்து தயாரிப்பாளராக மாறி, இயக்குநர் பாலா மூலம் படத்தில் நடிகராக அறிமுகமாகி இந்த வளர்ச்சியை அடைந்துள்ளேன். படத்தின் தயாரிப்பாளர் அனிதா மேடத்திற்காகவே நான் நடிக்க ஒத்துக்கிட்டேன். அலெக்ஸ் மேல் எனக்கு யோசனை இருந்தது. டாக்டராக இருந்தவர் எப்படி படத்தைச் சரியாக எடுக்கப்போகிறார் என்று நினைத்தேன். ஆனால் அவர் கதை சொல்லிய விதத்திலே இவர் சரியாக எடுத்துவிடுவார் என்று முடிவு செய்துவிட்டேன். மனோஜ் திறமையான கேமராமேன். அவர் தல அஜித்திற்கு மிகவும் நெருக்கமானவர். ஹீரோயின் சனம்ஷெட்டி பப்ளி கேர்ள். இந்தப்படத்தில் புதிதாக ஒரு விசயத்தை அலெக்ஸ் கையாண்டிருக்கிறார். முத்தக் காட்சி எடுப்பது தவறில்லை. முத்தம் அன்பின் வெளிப்பாடு, அதுபோன்ற காட்சிகளை தவறு என்று சொல்லக் கூடாது. நிச்சயம் படம் பெரிதாக பேசப்படும். நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படாமல் சிக்கலில் உள்ளது வருத்தமடைய செய்கிறது. எல்லா படங்களுக்கும் தியேட்டர் கிடைக்க வேண்டும் என்று விஷாலிடம் கூறினேன். ஆனால், அப்படி நடக்கவில்லை. படங்கள் எடுப்பவர்கள் கவனித்து எடுங்கள். விநியோகிஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர் சங்கங்கள் சரியாக இயங்கினால்தான் திரைத்துறை நன்றாக இருக்க முடியும்” என்றார்.
ஜாக்குவார் தங்கம் பேசும்போது, ‘இந்தப்படத்தை 24 நாட்களில் எடுத்தது மிகப்பெரிய சாதனை. இப்படத்தின் டிரைலரை ஒரேநாளில் கட் செய்திருக்கிறார்கள். இந்த டீமிற்கு அதற்காகவே பெரிய வாழ்த்துகள். தாயின் அருள் என்பது மிகப்பெரிய விசயம். அந்த அருள் அலெக்ஸுக்கு கிடைத்துள்ளது. படத்தில் கேமரா ஆங்கிள்ஸ் எல்லாம் ஆச்சர்யப்படுத்தியது. முத்தக்காட்சிகள் எல்லாம் இப்ப சாதாரணமாகி விட்டது. இப்படத்தில் லிப்லாக் காட்சியில் சனம்ஷெட்டி சிறப்பாக நடித்துள்ளார். சிம்புகூட நயன்தாரா லிப்லாக் சீனில் நடித்த பிறகுதான் பெரிய அளவில் ரீச் ஆனார். அதனால் முத்தக்காட்சிகள் தவறில்லை. குடிப்பது போல காட்சிகள் வைப்பது தான் தப்பு. தயவுசெய்து பெரிய ஹீரோக்கள் எல்லாம் குடிப்பது போல் நடிக்காதீர்கள். இப்படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியடையும்’ என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, ‘இப்படத்தில் அலெக்ஸுக்கு நன்றி சொல்லணும். அவர் நினைத்தால் அவர் தயாரிக்கும் இந்தப்படத்தில் இயக்குநராக அவர் பெயரை மட்டுமே போட்டிருக்கலாம். ஆனால் எங்கள் பாஃப்டா டீமில் இருந்து வந்த இளைமைதாஸ் அவர்களையும் இயக்குநராக இணைத்துள்ளார். அலெக்ஸுக்கு அந்த மனது உள்ளது. தாயின் அருள் இருந்தால் தான் ஜெயிக்க முடியும். அது அலெக்ஸுக்கு கிடைத்துள்ளது. இப்படம் பக்கா க்ரைம் திரில்லர் படமாக வந்திருக்கும் என்ற நம்புகிறேன். ஆர்.கே சுரேஷ் இப்படி ஒரு டீமிற்கு சப்போர்ட் பண்ணதுக்கு நன்றி” என்றார்.
R. KUMARESAN, PRO