“என் கைப்பிடித்து வாசிக்க வைத்தது அக்கா பவதாரிணி தான் -யுவன் சங்கர் ராஜா.”
“வளரும் நடிகர்கள் சமூக சேவை செய்வது நல்லதல்ல – இயக்குனர் அமீர்.”
“இரண்டு பெரிய நடிகர்கள் அரசியலுக்குள் வந்ததால் தமிழக அரசு விருது கொடுக்க யோசிக்கிறது – இயக்குனர் அமீர்.”
ஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் மாயநதி. அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பவதாரிணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர்கள் அமீர், சுப்பிரமணிய சிவா, எஸ்.ஆர்.பிரபாகரன், நடிகர் சவுந்தரராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.
இசை அமைப்பாளர் பவதாரிணி பேசும்போது, ‘எல்லாருக்கும் நன்றி. தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அவர்களுக்கு நன்றி. யுவன் அமீர் சாருக்கு நன்றி. படத்தில் பாடிய சிங்கர்ஸுக்கும் நன்றி’ என்றார்
.
இயக்குனர் அசோக் தியாகராஜன் பேசியதாவது, ‘இந்த மேடையை அலங்கரிக்கிற சினிமா ஜாம்பவான்களுக்கு நன்றி. நம் வாழ்க்கையும் நதிபோல் தான் நம்மால் கணிக்க முடியாத ஒன்று. அதுதான் மாயநதி படம். நதி நிறைய திருப்பங்கள் கொண்டது. நம் வாழ்க்கையில் நிறைய பக்கங்களை பெண்கள் தான் நிரப்பி வருகிறார்கள். படத்தில் மிக எதார்த்தமாக நடித்துள்ள நாயகன் அபி சரவணன், நாயகி வெண்பா ஆகியோருக்கு நன்றி. மேலும் படத்தில் ஒத்துழைத்து பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இந்த விழாவில் ஹீரோயின் இசை அமைப்பாளர் பவதாரிணி மேடம் தான். எல்லாப் பாடல்களையும் மிகச்சிறப்பாக தந்துள்ளார். இந்தப்படத்தை தனிப்பட்ட முறையில் உருவாக்கி விடவில்லை. ஒரு டீமாக இருந்து தான் உருவாக்கினோம். இசைஞானி இளையராஜா பாடல்கள் தான் நம் கவலைகளை ஆற்றுப்படுத்தியது. சந்தோஷத்தை அதிகப்படுத்தியது. அவர் வீட்டில் இருந்து இந்த விழாவிற்கு வருகை தந்த யுவன் சங்கர் ராஜாவிற்கு நன்றி” என்றார்
.
இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசும்போது, ‘பவதாரிணி இசை பற்றி நான் சொல்றது எப்படி இருக்கும்னு தெரியல. இந்தப்படத்தின் பாடல்கள் ரொம்ப நல்லாருக்கு. இசை எங்க ரத்தத்துல இருக்கு. என் கை பிடிச்சி வாசிக்க வைத்தது அக்கா பவதாரிணி தான். என்னை இந்தளவிற்கு கூட்டிட்டு வந்தது அக்கா தான். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்றார்
.
அமீர் பேசியதாவது, ‘இரண்டு நாட்களுக்கு முன்னாடி சுப்பிரமணிய சிவா இந்த விழாவிற்கு கூப்பிட்டார். நான் யோசிச்சேன். அப்புறம் பவதாரிணி இசை என்று சொன்னார்கள். என்னால் எதுவும் பேச முடியல. உடனே வருகிறேன் என்றேன். நடிகர் அபி சரவணன், கேமராமேன், என எல்லாரும் எனக்கு நெருக்கமானவர்கள். உலக வரலாற்றிலே இளையராஜா குடும்பம் போன்று உலகத்தில் எங்கேயுமே கிடையாது. இப்படி ஒரு குடும்பம் தமிழ்க்குடும்பமாக கிடைத்தது நாம் செய்த பாக்கியம். எம்.ஜி.ஆர் இன்று வரை நினைவுகூரப்படுகிறது. ஆனால் அவரோடு வேலை செய்தவர்களிடம் நிறைய விசயங்களை கேட்டு பதிவு செய்ய வேண்டும்..
நம் தமிழ்நாட்டில் இன்று மூன்றே கலைஞர்கள் தான் பெரிய கலைஞர்கள். இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பற்றிய பதிவுகளை உடனடியாக பதிய வேண்டும். அதனால் இளையராஜா பற்றிய பதிவுகளை யுவன்சங்கர் ராஜா பதிவு செய்ய வேண்டும். இதை எல்லாம் அரசு செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள். நம் சங்கங்கள் எல்லாம் இப்போது மூடுவிழா கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. வளரும் நடிகர்கள் சமூக சேவை செய்கிறார்கள். நல்ல விசயம் தான். ஆனால் அது அவர்களுக்கு நல்லதல்ல. இங்கு சேவை என்பது வேற. அரசியல் என்பது வேற. இங்கு பொது விசயங்களை செய்தால் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதை நானே அனுபவித்து இருக்கிறேன். தமிழ்சினிமாவில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் சினிமா தான் இங்கு ஆண்டு கொண்டிருக்கிறது. ஆனால் சினிமா முன்னேறவே இல்லை. இங்கு சினிமாவில் இருக்கும் பலரும் எம்.ஜி.ஆர் ஆக முயற்சிக்கிறார்கள். எம்.ஜி.ஆர், கலைஞர் ஆகியோரிடம் இருந்த ஆட்கள் எல்லாம் அவர்களுக்குத் தேவையானதைச் செய்து கொண்டார்கள். அவர்கள் சினிமாவிற்கு எதுவும் செய்யவில்லை.
கலைஞர், எம்.ஜி.ஆர் பிலிம்சிட்டியை அமைத்தார். ஜெயலலிதா வந்ததும் அந்தப்பெயரை மாற்றினார். ஆனால் சினிமா ஆட்கள் உடனே இந்த இதை மறுத்து ஜெயலலிதாவிடம் முறையிட்டிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. அதனால் கலைஞர் திரும்ப ஆட்சிக்கு வந்ததும் அந்த இடத்தில் பாதியை டைட்டில் பார்க்குக்கு கொடுத்து விட்டார்.
அதுபோல் கலைஞர் சினிமா தொழிலாளர்களுக்கு வீடு கொடுப்பதற்கு இடம் ஒதுக்கினார். அதுவும் நடக்கவில்லை. இங்கு இரண்டு பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வர இருப்பதால் தமிழக அரசு விருது கொடுக்க யோசிக்கிறது என்று யோசிக்கிறேன். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் பயப்பட வேண்டியதில்லை. ஏன் என்றால் அவர் எந்தப்பால் போட்டாலும் அடிக்கிறார். அதனால் அவரிடம் சினிமா விருதுகளை வழங்க வேண்டுமென கோரிக்கையாக வைக்கிறேன்.
இந்த மாயநதி என்ற திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றியடையணும். ஒரு ஆரோக்கியமான சூழல் சினிமாவிற்கு வரணும். இந்த விழா சிறியதாக ஆரம்பித்து பெரிதாக முடிந்திருக்கிறது” என்றார்.