சென்னை தியாகராய நகர், தக்ஷின் பாரத் இந்தி பிரசார சபாவில் அகரம் அறக்கட்டளை நூல் வெளியீட்டு விழா (5/1/2020) நடைபெற்றது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் இரண்டு நூல்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் கலந்து கொண்டு வெளியிட்டார்கள்.
பேராசிரியர் ச. மாடசாமி எழுதிய ‘வித்தியாசம்தான் அழகு’ மற்றும் கிராமப்புறங்களில் படித்து முதல் தலைமுறை பட்டதாரி ஆன மாணவர்கள் எழுதிய அனுபவங்களின் தொகுப்பான உலகம் பிறந்தது நமக்காக’ எனும் இரண்டு நூல்களை வெளியிட்டு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ. செங்கோட்டையன் பேசியதாவது :
“இந்திய அளவில் தமிழக பள்ளிக் கல்வி சிறந்த முன்னுதாரணங்களோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு தொண்டு நிறுவனங்களை இணைத்துக் கொண்டு,மாணவர் திறன் மேம்பாட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். உலக அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆங்காங்கு நடைபெற்று வரும் மாற்றங்கள் வருங்காலங்களில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையில் பெரும் போட்டியை உருவாக்கும்.
கல்வியுதவி என்பது ஒருவரின் குடும்பத்தையே மேம்படுத்தும் உதவி. அப்பெரும் உதவியை திரு.சூர்யா “அகரம் அறக்கட்டளை”மூலம் செயல்படுத்துவது அவரது மனித நேயத்யத்தை காண்பக்கின்றது.
கல்வி நிகழ்வான இந்த புத்தக வெளியிட்டு விழாவில் அரசு அமைக்கவிருக்கும் புதிய
திட்டங்களை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விழைகிறேன்
1. இனி 3ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ள்ள மாணவர்கள் சரலமாக ஆங்கிலம் பேச வாரம் ஒரு நாள் 45 நிமிடம் பயிற்சி அளிக்கப்படும்
2. 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வாரத்தில் வரும் விடுமுறை நாட்களில் அவர்கள் சுற்றுபுறத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினார்.”.
பொதுவாக மாணவர்களை நீதிக் கதைகள் படி என்றால், அது பெரியவர்களுக்கானது என்று எண்ணுவார்கள். பேராசிரியர் ச. மாடசாமி அவர்கள் எழுதிய ‘வித்தியாசம்தான் அழகு’ நூல் மாணவர்கள் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் எழுதப்படுள்ளது. மாணவர்களை அவர்களுக்குரிய நிறை குறைகளோடு சேர்த்து பரிவோடு அணுக வேண்டும் என பெரியவர்களுக்கும் எடுத்துச் சொல்கிறது. பேராசிரியர் ச. மாடசாமி அவர்கள் சக மனிதர்களை பாகுபாடின்றி நேசிக்கும் எளிய மக்களுக்காகவும், வகுப்பறைகளை அன்பின் மையங்களாக்கும் ஆசிரியர்களுக்காகவும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
‘உலகம் பிறந்தது நமக்காக’ நூல் அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிட அகரம் எடுக்கும் முயற்சிகள், கல்வியை வழங்குவதோடு இல்லாமல் சமூகத்திற்கான எதிர்கால தலைமுறையினரை உருவாக்கிட அகரம் மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து எடுத்துச் சொல்கிறது. அகரம் சமூகத்திற்கான கூட்டுச் செயல்பாட்டை முன்னெடுத்து இருக்கிறது. பத்தாண்டுகளாக பரிசோதித்துப்பார்த்த வெற்றிக்கான நடைமுறைகளை பதிவு செய்திருக்கிறார்கள் அதை ஒவ்வொருவரும் எடுத்துச் செய்திட வேண்டும் என்ற வேட்கை அதில் வெளிப்படுகிறது. மாணவர்கள் நம்பிக்கையுடன் பயின்றால் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். கல்வி சாமானியர்களையும் சாதனையாளர்களாக மாற்றும் என்பதற்கான உதாரணங்கள் இந்தப்புத்தகங்களின் வாயிலாக வெளிப்படுகிறது.
அகரம் அறக்கட்டளை நிறுவனர் நடிகர் சூர்யா பேசியதாவது : அகரம் பத்தாண்டுகளில் 3000 மாணவர்களை படிக்க வைத்திருகிறது. இதன் பின்னணியில் எண்ணற்ற தன்னார்வலர்களின் உழைப்பு இருக்கிறது. எண்ணற்ற நன்கொடையாளர்களின் பங்கேற்பு இருக்கிறது. சமூக அக்கறையுடன் கல்வி வாய்ப்பு அளித்த கல்வி நிறுவனங்கள இருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வி குறித்த ஒரு நிகழ்வு என்றதும் உடனே கலந்துக்கொள்வதாக சொல்லி இன்று இந்த புத்தக வெளியிட்டு விழாவிற்கு வந்து இந்த விழாவை சிறப்பித்த மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ. செங்கோட்டையன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் முன்னாள் அரசு பள்ளி மாணவர்களை இணைத்து அவர்கள் படித்த பள்ளிகளின் மேம்பாட்டிற்க்கு அகரம் அறக்கட்டளை “இணை” எனும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.
இதற்கான முயற்சிக்கு அரசு பள்ளி சார்பில் முழு ஒத்துழைப்பு தரப்படும் என்று கூறிய மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ. செங்கோட்டையன் அகரம் அறக்கட்டளை சார்பான எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
எந்த ஒரு தன்னார்வ அறக்கட்டளைக்கும் எந்த வித தோய்வுமின்றி சீராக நடைபெற நிதி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அகரம் அறக்கட்டளைக்கு இன்று ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்த ராம்ராஜ் காட்டன் திரு. நாகராஜ் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று வெளியான இந்த இரு புத்தகங்களும் தனித்தன்மை வாய்ந்தது, அகரம் இந்த இரு புத்தகங்களையும் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது.
எந்த ஒரு சூழ் நிலையையும் புரிந்து கொள்வதற்கும், சிறப்பாக செயல்படுவதற்க்கும் கல்வி முக்கிய பங்கு வகிக்கின்றது. “அகரம்” மூலம் என் தம்பி தங்கைகளுக்கு கல்வியுதவி அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
நாம் அனைவரும் தான் “அகரம்”.” என்று கூறினார்
அறநெறிகளை எடுத்துச் சொல்லும் வகையில் ஒவ்வொரு மாதமும் உதாரணக் கதைகளோடு ‘யாதும்’ மாத இதழில் பேராசியர் ச. மாடசாமி அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘ வித்தியாசம்தான் அழகு’. பெரும் எண்ணிக்கையிலானவர்களை புத்தகம் வாசிப்பாளர்களாக மாற்றும் வல்லமை கொண்டது பேராசிரியர் மாடசாமி அய்யா அவர்களின் எழுத்தும் சிந்தனையும். அதை புத்தகமாக பதிப்பிப்பதில் அகரம் பெருமை கொள்கிறது.
இன்றும் கிராமங்களின் எளிய மனிதர்களுக்கான ஒரே நம்பிக்கை அரசுப் பள்ளிகளும் அதன் ஆசிரியர்களுமே. பன்னிரெண்டாவது வகுப்பு வரை தட்டுத் தடுமாறி படித்து வெளிவரும் மாணவர்கள் உயர்கல்வி பெறுவதில் பெரிய இடைவெளி இருக்கிறது. பொருளாதார, சமூகக் காரணங்களால் உயர்கல்வி பெற இயலாத நிலையில் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கான கல்வியை உறுதி செய்வதே அகரம் அறக்கட்டளையின் பணி.
தொடர்ச்சியாக மாணவர்களோடு பயணிக்கையில் நம்பிக்கை என்பது மாணவர்களிடையே பெருமளவில் குறைந்து கொண்ட வருகிறது என்பதை அறியமுடிந்தது. எனவே மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்திட , அதே போன்ற சூழ்நிலையை கடந்து வந்த மாணவர்கள் தங்கள் அனுபவப் பகிர்வுகளை பதிவு செய்து, தாங்கள் வெற்றி அடைந்த காரணிகளை கட்டுரையாக எழுதியிருக்கிறார்கள். இக்கட்டுரைகளில் அவர்களை உருவாக்கிட அகரம் கைக்கொண்ட வழிமுறைகளை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். இதே உத்வேகம்தான் அகரம் கல்வி தொடர்பான புத்தகங்களை பதிப்பித்து வெளியிட உந்து சக்தியாகவும் அமைந்துள்ளது.
நிகழ்வில் அகரம் அறக்கட்டளை நிறுவனர் நடிகர் சூர்யா, பேராசிரியர் ச. மாடசாமி, ராம்ராஜ் காட்டன் திரு. நாகராஜ், சத்யபாமா பல்கலை கழக வேந்தர் மரியஜீனா ஜான்சன், சரவணா ஸ்டாக்ஸ் தலைவர் திரு. சத்யமூர்த்தி, பேராசிரியர் காளீஸ்வரன், திரு. ஜெயச்சந்திரன், திருமதி.மா. லைலாவதி, பேராசிரியர் ராஜு, பேராசிரியர் பாரதி பாலன் மற்றும் அகரம் பயிற்றுநர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தன்னார்வலர் பாலகுமார் மற்றும் அகரம் முன்னாள் மாணவர் பிரதீப் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.