ஒரு மனிதன் அதிகமான போதைக்கு அடிமையானால் என்ன விளைவு நடக்கும் என்பதைக் கூறும் படம் மரிஜுவானா – இயக்குநர் எம்.டி.ஆனந்த்
‘மரிஜுவானா’ படத்தைப் பற்றி அப்படத்தின் இயக்குநர் எம்.டி.ஆனந்த், கதாநாயகன் ரிஷி ரித்விக் மற்றும் தமிழ் தாய் கலைக் கூடத்தின் எஸ்.ராஜலிங்கம் கூறியதாவது:-
கதாநாயகன் ரிஷி ரித்விக் பேசும்போது,
‘அட்டு’ படத்திற்கு பிறகு இந்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், அப்படத்தின் உடல்மொழி இருக்கக்கூடாது. மேலும் காவல் துறை அதிகாரியாக நடித்திருப்பதால் காவல் துறையில் பணிபுரியும் என் அண்ணனுடன் 8 நாட்கள் இருந்து கற்றுக் கொண்டேன். இப்படம் சமூக அக்கறை கொண்ட படம். நாயகியும் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆனால், எங்கள் இருவருக்கும் காதல் காட்சிகளும் இருக்கிறது என்றார்.
இயக்குநர் எம்.டி.ஆனந்த் பேசியதாவது,
இது எனக்கு முதல் படம்.
சைக்கோ திரில்லர் படம். ஒரு மனிதன் அதிகமான போதைக்கு அடிமையானால் என்ன விளைவு நடக்கும் என்பது தான் இப்படம். உண்மை சம்பவங்களை தான் படமாகியிருக்கிறோம். பெண்களுக்கான பாதுகாப்பு என்பது சமூகம் கொடுக்க வேண்டுமா? அல்லது பெற்றோருடைய பொறுப்பா? ஒருவன் தவறான பாதைக்கு செல்வதற்கு யார் காரணம்? என்னைப் பொறுத்தவரை பெற்றோர்கள் தான் காரணம்.
ஏழையாக இருக்கும் குழந்தை தவறு செய்கிறது. வறுமை தான் தவறு செய்யத் தூண்டுகிறது என்ற கருத்தை கூறியிருக்கிறோம்.
நட்டியின் உதவியாளராக இருந்த பாலா ரோசய்யா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமானின் இசைப் பள்ளியில் பயின்ற கார்த்திக் குரு இசையமைக்கிறார். கலையை சரவணன் செய்திருக்கிறார். படத்தொகுப்பை எம்.டி.விஜய் கவனிக்கிறார்.
‘அட்டு’ பட நாயகன் ரிஷி ரித்விக், நாயகி ஆஷா பாத்தலோம், பவர் ஸ்டார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
பெண்கள் குறிப்பாக 40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஆனால், சென்சாரில் ‘A’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். 52 காட்சிகளை நீக்கினால் தான் ‘A’ சான்றிதழை கொடுக்காமல் இருப்போம் என்றார்கள். ஆனால், ஒரு இளைஞன் பெற்றோர்களுக்குத் தெரியாமல் என்னென்ன தவறுகளைச் செய்கிறான் என்பதைக் காட்சிப்படுத்தினால் மட்டும் தான் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள். அதை விளக்கிக் கூறி வேண்டுமானால் U/A சான்றிதழலாவது கொடுங்கள் என்று கேட்டோம். ஆனால் மறுத்துவிட்டார்கள். ஆனால், கதை மற்றும் காட்சிகள் குடும்பத்துடன் பார்க்கும் படியாக இருக்கும்.
மரிஜுவானா என்றால் கஞ்சா என்று அர்த்தம். கஞ்சாவை நேரடியாக காட்டவில்லை. இலையையும் சாணத்தையும் வைத்து தான் காட்சிப் படுத்தினோம். இது போன்ற போதைக்கு அடிமையாகும் பொருட்கள் நிறைய இருக்கிறது.
எங்களை போன்ற இயக்குநர் உருவாவது பத்திரிகையாளர்களாலும், எழுத்தார்களாலும் தான்.
பிப்ரவரி மாதத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.
தமிழ் தாய் கலைக் கூடத்தின் எஸ்.ராஜலிங்கம் பேசியதாவது,
இப்படத்தை நான் தேர்ந்தெடுத்ததற்கு காரணம், கதை தான். இதற்கு முன்பு உள்ள தலைமுறை இளைஞன் எப்படி இருந்தான். இப்போதுள்ள இளைஞன் எப்படி இருக்கிறான் என்பதைக் கூறும் படம். இப்போதுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செலவுக்கு கொடுக்கும் பணத்தை எந்த மாதிரியான விஷயங்களுக்கு செலவு செய்கிறார்கள் என்பதை கவனிக்க தவறி விடுகிறார்கள். குழந்தைகள் பாதிப்பிற்கு ஆளாகும் போது தான் தெரிகிறது. ஆகையால், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இப்படத்தை எடுத்திருக்கிறோம்.
200 திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.
இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை யோகிபாபு வெளியிடுகிறார்.
‘தேர்டு ஐ கிரியேஷன்’ எம்.டி.விஜயிடம் இருந்து தமிழ் தாய் கலைக் கூடத்தின் எஸ்.ராஜலிங்கம் மற்றும் மைதீன் ராஜா இருவரும் வாங்கி வெளியிடுகிறார்கள்.