மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ், ஜான் மேக்ஸ் புதிய படத்தை தயாரித்து வருகிறார். ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன், பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்திற்கு சம்பவம் என்று தலைப்பு வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு ரஞ்சித் பாரிஜாதம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் கூறும்போது, நான் சம்பவம் என்ற படத்தை இயக்கி வருகிறேன். ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ், பூர்ணா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்து வருகிறார்கள். சம்பவம் என்ற தலைப்பை முறையாக பதிவு செய்து இப்படத்தின் படப்பிடிப்புகளை நடத்தி வருகிறோம். ஆனால் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு சம்பவம் என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது எங்கள் படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் என்ற தலைப்பு எங்களுக்கு சொந்தமானது. அதனால் விஜய் படம் பற்றி வரும் வதந்திகளை நம்பாதீர்கள்’ என்றார்.-Kumaresan:PRO