எஸ்,ஜே.சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடிய ஜப்பானிய ரசிகைகள்!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து ஜப்பானிய ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக மாறிய எஸ்.ஜே.சூர்யா.
தமிழ் சினிமாவிலிருந்து முதன்முதலாக ஜப்பான் வரை சென்று தனது படங்களால், நடிப்பால், ஸ்டைலால் அங்குள்ள ரசிகர்களையும் வசியப்படுத்தியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும், ஒவ்வொரு பட ரிலீஸின் போதும் ஜப்பான் ரசிகர்கள் அதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி வருவதையும் ரஜினிகாந்த் நடித்த படங்களை பார்ப்பதற்காகவே ஜப்பானிய ரசிகர்கள் சென்னை வந்து செல்வதையும் கூட பல வருடங்களாக நாம் பார்த்து வருகிறோம்.
அதற்கு அடுத்ததாக தற்போது அப்படி ஒரு அன்பை நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே சூர்யா பெற்றுள்ளார் என்பதுதான் பிரமிப்பூட்டும் தகவல். சமீப வருடங்களாக எஸ்.ஜே. சூர்யா தேர்ந்தெடுத்து நடிக்கும் வித்தியாசமான கதைகளாலும் கதாபாத்திரங்களாலும், அவரது தனி ஸ்டைலான நடிப்பினாலும்.. அவருக்கு பான் இந்தியா என்கிற எல்லையையும் தாண்டி தற்போது வெளிநாடுகளிலும் ரசிகர் வட்டம் உருவாகி உள்ளது.
அந்த வகையில் ஜப்பானில் உள்ள நகோயா என்கிற பகுதியில் வசிக்கும் எஸ்.ஜே சூர்யாவின் தீவிர ஜப்பானிய ரசிகர், ரசிகையர்கள் சமீபத்தில் எஸ்.ஜே சூர்யாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதுடன் மதிய உணவும் பலருக்கு விருந்தாக வழங்கப்பட்டு வெகு விமரிசையாக கொண்டாடிய நிகழ்வு தான் தற்போது தமிழ் திரையுலகில் ‘ஹாட் ஆப் தி டாபிக்’ ஆக மாறி உள்ளது.
அவரது படங்களை பார்த்து ரசித்து விட்டுப் போவதுடன் நின்று விடாமல் எஸ்.ஜே சூர்யா இதுவரை நடித்த அவரது ஒவ்வொரு படங்களிலிருந்தும் அவரது புகைப்படங்கள், அவரது படங்களின் டிவிடிக்கள் அனைத்தையும் சேகரித்து, நவராத்திரி கொலு வைப்பது போல அடுக்கி வைத்து, இரண்டு புறமும் அவருடைய மினி கட் அவுட்டுகளையும் நிறுத்தி, அதற்கு மாலை போட்டு, நண்பர்கள் சகிதமாக வெகு விமர்சையாக எஸ்.ஜே சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்கள். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.
அஜித் நடித்த வாலி திரைப்படம் மூலம் வெற்றிகரமான இயக்குநராக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்த எஸ்.ஜே சூர்யா, அதன் பிறகு குஷி, நியூ உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தார். ஆனாலும் அவர் சினிமாவில் நுழைந்ததன் லட்சியமே ஒரு நடிகராக ஆக வேண்டும் என்பதுதான். வெற்றிகரமான இயக்குநராக தன்னை நிரூபித்த எஸ்.ஜே சூர்யா, பின்னர் நடிப்பில் களமிறங்கி தன்னை ஒரு மிகச்சிறந்த நடிகராகவும் நிரூபித்து வருகிறார். வில்லனாக, கதாநாயகனாக என தற்போது ஒரு வெற்றிகரமான நடிகராகவும் தனது திரை பயணத்தை தொடர்ந்து வருகிறார். எஸ்.ஜே சூர்யா ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இயல்பாகவே அதிகரித்து விடுவது வாடிக்கையாகி விட்டது.
இந்த நிலையில் தற்போது கில்லர் என்கிற படத்தை இயக்கி நடிப்பதன் மூலம் 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பி உள்ளார் எஸ்.ஜே சூர்யா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பான் இந்திய படமாக இந்த படம் வெளியாக இருக்கிறது. கதாநாயகியாக அயோத்தி புகழ் பிரீத்தி அஸ்ராணி நடிக்க இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பாக கோகுலம் கோபாலன் இப்படத்தை தயாரிக்கிறார்.
எஸ்.ஜே சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Johnson Pro