“ராமராஜனை வித்தியாசமாக காட்டியுள்ளீர்கள்” ; சாமானியன் குழுவை பாராட்டிய இசைஞானி இளையராஜா
தமிழ் புத்தாண்டில் இசைஞானி இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்ற சாமானியன் குழு
சாமானியன் பின்னணி இசைகோர்ப்பில் இசைஞானி இளையராஜா தீவிரம்
எண்பது, தொண்ணூறுகளில் மக்கள் நாயகன் என எளிய மக்களின் முகமாக அறியப்பட்டவர் நடிகர் ராமராஜன். தொடர்ந்து வெள்ளி விழா படங்களை கொடுத்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு. இவரது வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை கொடுத்தவர் இசைஞானி இளையராஜா.
தற்போது இவர்கள் இருவரும் 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ என்கிற படத்தின் மூலம் மீண்டும் கைகோர்த்துள்ளனர். இப்படி ஒரு அபூர்வ கூட்டணியை மீண்டும் இணைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் இயக்குநர் R.ராகேஷ். இவர் இதற்கு முன்னதாக தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கியவர்.
இந்த படத்தை எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரித்து வருகிறார். கதாநாயகிகளாக ஸ்மிருதி வெங்கட், அபர்னிதா மற்றும் நக்சா சரண் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், கே எஸ். ரவிக்குமார், சரவணன் சுப்பையா, ராஜாராணி பாண்டியன், மைம் கோபி, கஜராஜ், முல்லை கோதண்டம், விஜய் டிவி தீபா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, படத்தொகுப்பை ராம்கோபி கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைக்கிறார். எஸ் கே கலை இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது படத்திற்கான போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் இந்தப்படத்திற்கான பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் இசைஞானி இளையராஜா.
இந்தநிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சாமானியன் பட நாயகன் ராமராஜன், தயாரிப்பாளர் V.மதியழகன், இயக்குநர் ராகேஷ் ஆகியோர் இசைஞானி இளையராஜாவை நேரில் சென்று சந்தித்து தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து, அவரிடம் ஆசீர்வாதம் பெற்று வந்துள்ளனர். .
பின்னணி இசையமைக்கும்போது படத்தின் பல காட்சிகளில் குறிப்பாக ராமராஜன் கதாபாத்திரத்தையும் அவரது நடிப்பையும் பார்த்து வியந்துபோன இசைஞானி இளையராஜா, “இந்தப்படத்தில் வித்தியாசமான ராமராஜனை காட்டியுள்ளீர்கள்.. படம் நன்றாக வந்துள்ளது” என பாராட்டியுள்ளார்.
தமிழ் புத்தாண்டு தினத்தில் அவரிடமிருந்து இப்படி ஒரு பாராட்டு கிடைத்தது சாமானியன் படக்குழுவினருக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளித்துள்ளது
சாமானியன் படத்தை வரும் மே மாதத்தில் ரிலீஸ் செய்யும் விதமாக பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.