ஹெச் ராஜாவுக்கு சீட் உண்டா இல்லையா?

அதிமுக பாஜகவுடன் கூட்டணி உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நொடியில் இருந்தே, அதிமுக தலைமை பாஜக தலைமை கிட்ட ‘யாருக்கு வேணும்னா சீட் கொடுங்க, அது உங்க இஷ்டம், ஆனா ஹெச் ராஜாவுக்கு மட்டும் வேண்டாம்’னு சொன்னதா தகவல்கள் ரெக்கை கட்டி பறக்குது.

ஆனால் இது எல்லாம் உண்மை இல்லையாம். ராஜாவுக்கு சீட் வாங்குறதுல எந்த சிக்கலும் இல்லை, சிவகங்கை அல்லது தென் சென்னையில அவர் போட்டியிடுவது உறுதி என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ராஜாவுக்கு எதிரா சோசியல் மீடியாவுல ஒரு பெரிய கூட்டமே வேலை செய்யுது, அது கிளப்பி விடுற பொய்கள் தான் இவைன்னும் ராஜா ஆதரவாளர்கள் சொல்றாங்க.

ஆனால், சர்ச்சையை கிளப்புற மாதிரி எதுவும் பேசக்கூடாதுனு மட்டும் அவருக்கு பாஜக தலைமை சொல்லி இருக்காம். ‘ராஜா எப்போதுமே கட்சித் தலைமைக்கு மிக நெருக்கமானவர். சில தினங்களுக்கு முன் கூட பிரதமர் மோடி கன்னியாகுமாரியில் பேசியதை அவர் தான் தமிழில் மொழி பெயர்த்தார்,’னு அவங்க சுட்டி காட்டுறாங்க.

இதற்கிடையே, காரைக்குடியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் சாதனையை விளக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அந்த கட்சியின் தேசிய செயலாளர் எச் ராஜா தலைமை தாங்கினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

“வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாஜக–அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெரும். இந்த கூட்டணி வலிமைமிக்க கூட்டணியாகும். மதிமுக கட்சி என்பது ஒரு பூஜ்யம். அந்த கட்சி எங்களுடன் கூட்டணிக்கு வராதது பெரிய பாதிப்பு இல்லை,” என்று கூறினார்.

மேலும் அவர், பாகிஸ்தானில் இருந்து மீட்கப்பட்ட இந்திய வீரர் அபிநந்தன் மிகவும் தேச பக்தி உடையவர். பிரமர் மோடியினால் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக பாகிஸ்தானில் கைதியாக சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் அரசு விடுவித்தது. காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவத்தையடுத்து பிரதமர் பயங்கரவாதிகளை ஒடுக்கும் அதிரடி நடவடிக்கையை தொடங்கி உள்ளார்.

அவரது நடவடிக்கைக்கு அனைத்து நாடுகளும் முழு ஆதரவை கொடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையால் மிரண்டு போன பாகிஸ்தான் அரசு போர் வேண்டாம், சமாதான பேச்சு வார்த்தை நடத்த முன் வந்துள்ளது. ஆனால் இதற்கு முன்பு நடந்த மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு அப்போது பாகிஸ்தான் எவ்வித அனுதாபம் தெரிவிக்கவில்லை. இன்றை இந்திய இளைஞர்கள் வீரர் அபிநந்தனின் மன உறுதி மற்றும் அவரது தேச பற்றை கடைப்பிடித்து அவரை முன் உதாரணமாக வைக்க வேண்டும்,” என்று கூறினார்.