சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண்ணை வெட்டிய காதலன்: நடந்தது என்ன?

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலையை போன்று, சென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் இன்னொரு காதல் கொடூர சம்பவம் நேற்றிரவு நடந்தது. பெண் ஒருவரை அவரது காதலன் அரிவாளால் வெட்டி சாய்த்துவிட்டு தானும் ரெயில் முன் பாய்ந்தார்.

இருவரும் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடை சேர்ந்தவர், தேன்மொழி, 25. சென்னை, எழும்பூரில் உள்ள, தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, ‘ஈகா’ தியேட்டர் அருகே உள்ள, தமிழ்நாடு கூட்டுறவு சார்பதிவாளர் அலுவலகத்தில், மூன்று மாதங்களாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், அதே மாவட்டத்தை சேர்ந்த சுரேந்தர், 28, என்பவனுக்கும் இடையே, பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு, சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில், தேன்மொழியும், சுரேந்தரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுரேந்தர், பையில் மறைத்து வைத்திருந்த கத்தியால், தேன்மொழியின் தாடையிலும், இடது கையிலும் குத்தினார்.

தேன்மொழியின் அலறலை கேட்டு, பயணியர் ஓடி வர, அச்சமடைந்த சுரேந்தர், அந்த வழியாக வந்த மின்சார ரயிலில் பாய்ந்தார். ரயிலில் அடிபட்டு பலத்த காயமடைந்தார். எழும்பூர் ரயில்வே போலீசார், இருவரையும் மீட்டனர். தேன்மொழியை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், சுரேந்தரை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் இருவருக்கும், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தேன்மொழி நேற்று இரவு 10.30 மணி அளவில் கண் விழித்தார். அப்போது டாக்டர்களிடம் அவர் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

“நானும் சுரேந்தரும் கடந்த 3 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம். எங்களின் காதலுக்கு சாதி குறுக்கே வந்தது. நாங்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் எனது பெற்றோர் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தோம். ஆனால் எனது பெற்றோர் சுரேந்தருக்கு என்னை திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டனர். சுரேந்தரிடம் நான் பேசுவதற்கும் தடை விதித்தனர். இதனால் நான் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன். எங்கள் காதலும் முறிந்துபோனது.

இந்த நிலையில் நான் வேலை கிடைத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் சென்னை வந்துவிட்டேன். இதையடுத்து சுரேந்தர் என்னை தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்று அழைத்தார். நானும் எனது நிலையை எடுத்துக்கூற சேத்துப்பட்டு ரெயில் நிலையம் சென்றேன். இருவரும் அங்கு பேசினோம். எனது நிலையை எடுத்துக்கூறினேன். ஆனால் எனது விளக்கத்தை அவர் ஏற்கவில்லை. இருவரும் காரசாரமாக பேசிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென நான் எதிர்பாராத நிலையில் சுரேந்தர் என்னை அரிவாளால் வெட்டி விட்டார்.”

இது தொடர்பாக எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி சென்னையில் பரபரப்பாக பேசப்படுகிறது.