சிவகார்த்திகேயனின் காயத்துக்கு காரணம் என்ன?

மிஸ்டர் லோக்கல் சரியாக ஓடாத நிலையில், சிவகார்த்திகேயனின் க‌ரியர் அவ்வளவு தான் என அவரது விமர்சகர்கள் கூறிய நிலையில், விழுந்தாலும் நான் மீண்டும் எழுவேன் என்னும் ரீதியில் பேசியுள்ளார் சினா கானா.

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:

“ரசிகர்கள் கொடுக்கும் நம்பிக்கை தான் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது. ஜெயிக்கும் போது ஒரு அணியாக நிற்பது போல் தெரியும். தோற்கும் போது தான் தனியா நிற்கிறோம் என்பது புரியும்.

ஆனா தோற்கிறதோ தனியா நிற்கிறதோ பிரச்சனையல்ல. நிற்கிறோம்கிறது தான் பிரச்சனை. நான் நிற்கிறேன். கடைசி படம் சரியாக போல. ஆனா அடுத்தடுத்த படங்கள் இப்படி இருக்காது. இதெல்லாம் ஒரு விளையாட்டு தான். ஒரு மேட்சுல அவுட்டாயிட்டோம் தோத்துட்டோம் அப்படினா அந்த மேட்ச் தான் முடியும், லைஃப் முடியாது.

இனி நான் நடிக்கும் படங்கள் என்னுடைய தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படமாகத்தான் இருக்கும். நான் கடைசியா பண்ண படம் என்னுடைய தயாரிப்பாளருக்கு லாபகரமான படம் தான். அது பற்றி பேச வேண்டாம். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா,” என்றார்.

சிவகார்த்திகேயன் இவ்வளவு காயத்துடன் பேசுவதற்கு காரணம் அவருக்கு நெருக்கமானவர்கள் சிலரே அவருக்கு எதிராக செய்த சில செயல்கள் தான் என கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் ‍ இயக்குனர் எம்.ராஜேஷ் இணைந்திருந்த‌தால் மிஸ்டர் லோக்கல் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. ஆனால் கடந்த மாதம் 17-ம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியைத் தழுவியது.

இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.