சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கைவிட்டதன் பின்னணி

சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திமுக திரும்பப் பெறப்போவதாக அக்கட்சியின் தலைவர் மு க் ஸ்டாலின் சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று திடீரென அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப தனபால் மீது பதவி நீக்கத் தீர்மானத்தை கடந்த மே 1-ம் தேதி திமுக கொடுத்தது. நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்ற 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில், திமுக அமோக வெற்றியை எதிர்பார்த்திருந்த நேரம் அது!

தேர்தல் முடிந்ததும், கூடுகிற சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்துவிடலாம் என்கிற திட்டமிடல் அப்போது இருந்தது. ஆனால் 22 தொகுதி இடைத்தேர்தலில் 9 இடங்களை அதிமுக வென்றுவிட்டது. இதை திமுக எதிர்பார்க்கவில்லை.

இதன் மூலமாக சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை வலுவாக்கிக் கொண்டிருக்கிறது அதிமுக. தவிர, நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக படு தோல்வியை தழுவியதால், அந்தக் கட்சியின் ‘ஸ்லீப்பர் செல்’களாக இருந்த சில எம்எல்ஏக்களும் இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிக்க தயாராகிவிட்டார்கள்.

இந்நிலையில் நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தப்போவது இல்லை என்று கூறினார்.

மேலும் அன்றைய சூழலில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினோம், தற்போது அதை வலியுறுத்தப்போவதில்லை என்றார். சபாநாயகர் மீது கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை, வாய்மொழியாக இன்று திமுக திரும்ப பெற்றது.

தீர்மானம் தோற்றுப் போகும் என்பதால் திமுக பின் வாங்கியதாக அதிமுக வட்டாரங்கள் ஏளனம் செய்ய, திமுக பிரமுகர்களோ, ஒரு தடவை தீர்மானம் கொண்டு வந்து விட்டால் அடுத்த ஆறு மாதத்துக்கு கொண்டு வர முடியாது. விரைவில் அரசின் மீதே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன என்கின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, முதல்முறையாக தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் நேற்று தொடங்கியது. சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ், விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் எம்எல்ஏக்கள் 8 பேரின் மறைவுக்கும் பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த பின், தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.