மத்திய மந்திரி கனவில் இருக்கும் தமிழக புள்ளிகள் யார், யார்?

எக்சிட் போல் கருத்து கணிப்புகள் மத்தியில் பாஜக மறுபடியும் ஆட்சிக்கு வருமென்றும், தமிழகத்தில் திமுக அதிக இடங்களை பிடிக்கும் என்றும் கூறியுள்ளதால், அதிமுக, திமுக என இரு கூடாரங்களுமே மகிழ்ச்சியில் உள்ளன.

பாஜக பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணியினருக்கு மந்திரி சபையில் இடம் அளிக்கும் வழக்கம் உள்ள கட்சி என்பதால், அதிமுகவில் சில பேர் மத்திய மந்திரியாகும் கனவில் உள்ளனர். அவர்களில், தற்போதைய பாராளுமன்றத்தில் உயர் பதவியில் உள்ளவரும், வாரிசு அரசியல்வாதியும், மூத்த தலைவரும் அடக்கம்.

திமுகவிலோ, மந்திரி ஆசையில் மிதப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். முன்னாள் மத்திய அமைச்சர்கள் நான்கு பேரும், புதிதாக களம் இறங்கிய வாரிசுகளும் மந்திரிகளாக போட்டி போடுவார்கள் எனத் தெரிகிறது. இதில் சிலர் ஒரு படி மேலே போய், எந்த இலாகா கேட்டு பெற வெண்டும் என்று கூட முடிவு செய்துள்ளதாக கேள்வி.

ஆனால், அதிமுக திமுக தலைமைகளோ, இதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் உள்ளனவாம். அவர்கள் எண்ணமெல்லாம், 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் மீதே இருக்கிறதாம். அதிமுகவுக்கு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்றும், திமுகவோ ஆட்சிக்கு வர வேண்டுமென்றும் பிடிவாதமாக இருக்கின்றன.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கருத்து கணிப்புகள் எல்லாம், கருத்து திணிப்புகள் எனக் கூறியிருந்தார். திமுக தலைவர் மு க ஸ்டாலினோ, “கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை. 23-ம் தேதி மக்களின் தீர்ப்பு தெரியும்,” என்று கூறினார்.

மே 23-ந் தேதி டெல்லியில் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது என்று உங்களிடம் சொன்னது யார்? என செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பிய ஸ்டாலின், மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தான் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.

மேலும் அவர் வெளியிட்ட‌ அறிக்கையில், “இந்திய மக்கள் எழுதியிருக்கும் தீர்ப்பு வெளிவரப் போகிறது. அதன் விளைவாக, ஆட்சி மாற்றம் ஏற்படவிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டு மக்கள் இரண்டு ஆட்சிகளை மாற்றுவதற்கானத் தீர்ப்புகளை எழுதியிருக்கிறார்கள். ஜனநாயக ரீதியில் மக்கள் எழுதிய தீர்ப்புகளை அதிகாரத்தின் கொடுங்கரங்கள் மூலம் எப்படித் திருத்தி எழுதலாம் என ஆட்சியில் இருப்பவர்கள் திட்டமிட்டு வருகிறார்கள். அதனை முறியடிக்க வேண்டிய கடமை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது,” எனக் கூறியிருந்தார். நம்பிக்கை தானே எல்லாம்.