சோ உயிரோடு இருந்திருந்தால் இப்போது என்ன கூறுவார்? ஒரு சுவையான கற்பனை

சமூக வலை தளங்களில் உலா வரும் பல பதிவுகள் சிரிக்க மட்டுமில்லாமல் சிந்திக்கவும் வைக்கின்றன. அப்படி ஒன்று தான் கீழே நீங்கள் பார்க்கப் போகும், சுவாமிநாதன் ராமசுப்பிரமணியன் என்னும் பெயரில் வாட்சாப், ஃபேஸ்புக்கில் வேகமாக பரவும் ஒரு பலே பதிவு:

சொர்க்கத்திலிருந்து ஒரு போன் கால்

சோ : என்ன சார், நாலு மிஸ்டு கால் பார்த்தேன். ரொம்ப அர்ஜெண்டா?

ஆமா சார், இன்னும் மூன்று நாட்கள் தான் இருக்கு. நீங்க இல்லாம போயிட்டீங்களேன்னு ரொம்ப வருத்தமா இருந்தது சார்.

சோ : ம். ற்…ற் (அதே கனைப்பு)… எலெக்ஷன் எப்படி போயிண்டுருக்கு?

அது விஷயமாத்தான் உங்களுக்கு போன் போட்டேன். என்ன சார் இது, துக்ளக் பத்திரிக்கையிலேயே திமுக ஸ்வீப்னு எழுதுறாங்களே சார்..

சோ : நல்ல செய்திதானே!!

என்ன சார் இப்படி சொல்றீங்க?

சோ : துக்ளக் கருத்து கணிப்பு என்னிக்கு சார் சரியா வந்திருக்கு? சொல்லப்போனால் துக்ளக்கும் லயோலாவும் ஒண்ணா ஒத்துப்போறது இந்த ஒரு விஷயத்தில தான். என்னுடைய கருத்தும் என் ஆபீஸ்ல இருக்கறவங்க கருத்தும் ஒரே மாதிரி இருந்ததே இல்லை. அவங்க பார்த்த மக்களை சந்தித்து எழுதுவாங்க. அவ்வளவு தான்.அதனால ரொம்ப மனசை போட்டு கஷ்டப்படுத்திக்காதீங்க.

நீங்க என்ன சார் நினைக்கறீங்க? மோடி வந்துடுவாரா?

சோ : அஞ்சு வருஷத்திலே கடுமையா உழைச்சிருக்கார். சில கஷ்டமான முடிவுகளை நாட்டு நலன் கருதி தையிரியமா எடுத்துருக்கார். அதனுடைய பாதிப்பு இல்லாமல் இருக்காது. அதை மீறியும் மக்கள் ஒரு உறுதியான லீடரா, ஊழல் செய்யாத நேர்மையாளரா மோடியை ஜனங்க பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. இது அவருக்கு ஒரு பலம். எதிர்க்கட்சியில் மோடி ஸ்டேச்சருக்கு இணையா ஒரு தலைவரை அவங்களால காட்ட முடியலை என்பது மற்றொரு ப்ளஸ் பாயிண்ட். போன முறை வந்த அளவுக்கு சீட் கிடைக்காட்டியும் தேவைப்படக்கூடிய 273 சீட் தனியாவே வரக்கூடும் என்றே நான் நினைக்கிறேன். NDA க்கு 320 முதல் 330 வரை கிடைக்கும் என்பதே என் எதிர்பார்ப்பு.

தமிழகத்தில் எப்படி சார் இருக்கும்?

சோ : ஜெயலலலிதா, கருணாநிதி போன்ற பெரிய தலைவர்கள் இல்லாமல் இருக்கின்ற சூழலில் இந்த முறை கணிப்பது சற்று கடினமான பணிதான். என் பார்வையில் ஆரம்பத்தில் அதிமுக அரசு கொஞ்சம் சறுக்கினாலும் கடைசி ஒன்றரை ஆண்டுகாலங்களில் எடப்பாடி அரசை சரியானபடி கொண்டு செல்வதாகவே நான் பார்க்கிறேன்.
ஜெ பாணியை விட எம் ஜி ஆர் பாணி அரசியலை நடத்தறார்னு தான் எனக்கு தோணுறது. புத்திசாலித்தனமாக ஒரு நல்ல கூட்டணியை உருவாகியிருக்கார். அது பெருமளவு பலனளிக்கும்னு தான் நான் நினைக்கிறேன். அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவே நான் கருதுகிறேன்.

தினகரன் வாக்குகளை பிரிப்பார்னு சொல்றாங்களே சார்?

சோ : சமுதாய வாக்குகள் நிறைந்திருக்கும் இரண்டு மூன்று தொகுதிகளில் வேண்டுமானால் அவருடைய பாதிப்பு இருக்கலாம். மற்றபடி பெரிய தாக்கம் இருக்கும்னு நான் நினைக்கல சார்.

அப்ப திமுக வராதுன்னு சொல்றீங்களா?

திமுகவின் நடவடிக்கைகளை பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. கலைஞர் ஜெயித்தால் அண்ணா வழி , தோற்றால் பெரியார் வழின்னு தானே சொல்வார். கிருஷ்ணரை கேவலப்படுத்தி வீரமணி பேசறதும், ஹிந்து நம்பிக்கைகளை ஸ்டாலின் கொச்சைப்படுத்தறதும், ஆங்காங்கே கடைகளை உடைப்பதும், போலீசை மிரட்டுவதும், பெண்களிடம் முறையின்றி நடப்பதும், அசிங்க அசிங்கமான வார்த்தைகளை கொண்டு பிரதமர், முதலமைச்சர், அவரின் கூட்டணி கட்சியினரை கீழ்த்தரமாக பேசும் வீடியோக்களை பார்க்கும்போது ஸ்டாலின் பெரியார் வழிக்கு தன்னை தயார்படுத்தி கொள்வதாகவே தெரிகிறது.

அதிமுகவில் ஊழலே இல்லையா. நேத்தி வரைக்கும் பாமக அவர்களை திட்டியவர்கள் தானே, இவர்களுடன் மாற்று அரசியலை முன் வைக்கும் பாஜக கூட்டணி சேர்ந்ததை எப்படி சார் நியாயப்படுத்த முடியும்?

சோ : இந்த கொள்கை. கூட்டணி தர்மம் இதெல்லாம் சுத்த ஹம்பக், பம்மாத்துன்னு உங்களுக்கு தெரியாதா? இருக்கவே இருக்கு “அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை”. தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி..
வாஸ்தவம் தான். அதிமுக ஆட்சியில் கொஞ்சமல்ல நிறையாவே ஊழலே இருக்கு. நான் நிறையதடவை சொல்லியிருக்கேன். ஜனநாயகம்ங்கறது நாலு ராஸ்கலில் நல்ல ராஸ்கலை தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வளவுதான். கொள்ளையடிக்கும்போது ஒரு கொள்ளைக்காரன் அகப்பட்டுண்டுட்டான். போலீஸ் வரும்வரை எல்லாரும் சேர்ந்து அடிக்கும்போது அதில் ரெண்டு பிக்பாக்கெட்டும் சேர்ந்து அவனை ரெண்டு மொத்து மொத்துவான்.. அப்ப போய் எல்லா உத்தமர்களையும் ஊர்ல போய் கூட்டிக்கொண்டு வருகிறேன், பிறகு அடிக்கலாம் என்று காலம் தாழ்த்த முடியுமா?. இப்போதைக்கு கொள்ளைக்காரனை அடி .. பிக்பாக்கெட்டை பின்னாடி பார்த்துக்கலாம். அவனை மிரட்டலாம். சொல்லி நல்வழிப்படுத்தலாம். அவன் குடுமி நம்ம கிட்ட இருந்தால் சிண்டை பிடிச்சு உலுக்கலாம். அதிமுகங்கறது பிக்பாக்கெட் மாதிரி. இதுல போய் ரெண்டு பேருமே யோக்கியமில்லை, நான் நோட்டாவிற்கு போடறேன்னு பைத்தியக்காரத்தனம் பண்ணப்படாது. அது பல சமயங்களில் கொள்ளைக்காரனுக்குத்தான் சாதகமா முடியும், சொல்லப்போனால் அப்படி நோட்டாவிற்கு போடுவதற்கு பதில் அந்த கொள்ளைக்காரனுக்கு வாக்களிக்கலாம். இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

உங்க நண்பர் ரஜினிகாந்த், என்ன சார் ஆட்சி தர்பாருக்கு வருவார்னு பார்த்தா கடைசியில் அவருக்கு தெரிஞ்ச சினிமா தர்பாருக்கு போயிட்டார்? நீங்க இருந்தால் அவரை சரியாக வழி நடத்தியிருப்பீர்கள்ன்னு பேசிக்கிறாங்க சார்..

சோ : ரஜினிக்கு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை. அவருக்கே சொந்தமாக சரியாக முடிவெடுக்கும் திறமை உண்டு. மோடிக்கு அவர் நேரடியாகவே சப்போர்ட் பண்ணியிருக்கணும் என்பதே என்னுடைய அபிப்ராயம். அவர் நேரடியாக சொல்லலைங்கறதுக்காக என் அபிப்ராயத்தை மாத்திக்க முடியாது.
அவர் எதிர்கால சட்டசபை தேர்தலை மனதில் வைத்து சில கணக்குகள் போடறார். பார்ப்போம். மொத்தத்தில் அவர் மூலம் தமிழகத்திற்கு நல்லது நடந்தால் சரி

சார், செத்துப்போன காங்கிரஸ் கட்சி கூட காமராஜர் ஆட்சின்னு சொல்றாங்க, பி ஜெ பி யும் கூட காமராஜரை தூக்கி பிடிக்கிறது. எடப்பாடியோ அம்மா ஆட்சிங்கறாங்க. வராவிட்டாலும் கூட ரஜினியும் கூட எம் ஜி ஆர் ஆட்சின்னு சொல்றார், கமலும் வாத்யார் மடியில்தான் வளர்ந்தேன்னு சொல்லி டி வி யை கூட உடைக்கிறார். ஸ்டாலின் உள்பட யாருமே “கலைஞர் ஆட்சி மலரும்னு ” சொல்ல மாட்டேங்கறாங்களே?

சோ : ஓ , கமல் டி வி யை எல்லாம் உடைக்கிறாரா? சபாஷ். கலைஞர் இல்லாத குறையை அவர்தான் தீர்த்து வைக்கிறார் போலிருக்கே. இனி சத்யா பாடு கொண்டாட்டம்தான்!

கருணாநிதி ஆட்சின்னு சொன்னால், விஞ்ஞான முறைப்படி ஊழல், 2 ஜி, நில அபகரிப்பு, வன்முறை, ரவுடியிசம், சினிமாத்துறையையே தன் கைக்குள் கொண்டுவந்து தமிழகத்தையே சுரண்டுவது, கஜானா காலி, ஜாக்ட்டோ ஜியோ போன்ற அரசாங்க அமைப்பை கைக்குள் வைத்து மக்களை மிரட்டுவது , பெண்கள் பாதுகாப்பின்மை , இருட்டு, திருட்டு இப்படி திமுகவின் பல சாதனைகள் மக்கள் கண்ணு முன்னாடி வந்துபோனால் அவருடைய ஆசை எப்படி நிறைவேறும்? அதுக்காகத்தான் திமுக என்றாலே ஹிந்து என்றுதான் பொருள் , கலைஞர் குல்லா அணியாத முல்லா. கேளுங்கள் பெறப்படும் தட்டுங்கள் மீண்டும் பெறப்படும்னு என்று புதிய கருத்தை உருவாக்குவது தானே சார் முறை. தேர்தல் காலம் இல்லையா!

சரி, நான் போனை வச்சுடறேன். மே 23 “சோற்றாலடித்த பிண்டங்கள்”, “பண்டார பரதேசிகள் ஆட்சி கட்டிலில்”,”வாக்கு இயந்திரத்தை நம்பி மோசம் போனோம்”, “பார்ப்பன சூழ்ச்சிக்கு தமிழன் பலி” இப்படடிப்பட்ட தலைப்புகளோடு பத்திரிகைகளோட வாங்க சந்திப்போம்.