என்ன ஆச்சு கேப்டனுக்கு? மீண்டும் அமெரிக்காவுக்கு பறக்கும் விஜயகாந்த்

கொஞ்ச நாளாத்தான் தேமுதிக தொண்டர்கள் தங்கள் தலைவர் விஜயகாந்தை மறுபடியும் தெம்பா பார்த்த உற்சாகத்தில் இருக்காங்க. இப்போ அதுக்கும் ஆப்பு வைக்கும் விதமா விஜயகாந்த் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்காவுக்கு போகப்போறார் என்னும் செய்தி வந்திருக்கு.

ஆனால், தேமுதிக வட்டாரத்தில் விசாரித்த போது, தொண்டர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில ஒரு தகவல் கிடைச்சது. “கேப்டன் உடல்நிலையில நல்ல முன்னேற்றம் இருக்குது. ஆனால், அவரோட சிகிச்சை இன்னும் முழுமையா முடியலை. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சென்னைக்குத் திரும்பினார்.

தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில், மூன்றாம் கட்டமாக அவர் மீண்டும் அமெரிக்கா செல்லவுள்ளார். இந்த தடவை சிகிச்சை முடிந்து தாயகம் திரும்பும் போது ரமணா விஜயகாந்த் போல கம்பீரமா வருவார்,”னு சொன்னாங்க.

கடந்த சில ஆண்டுகளாகவே விஜயகாந்த் உடல்நிலை பாதிப்படைந்துள்ளது. தொண்டையில் ஏற்பட்ட நோய்த் தொற்று, சிறுநீரகப் பிரச்னையால் அவர் பெரிதும் அவதிப்பட்டார். சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டவர், 2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார்.

சிங்கப்பூரிலுள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் ஒரு மாத காலம் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக்கொண்டும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. 2018 ஜூலை மாதம் அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்த பின்னர், விஜயகாந்த்தின் உடல்நிலையில் முன்னேற்றம் தென்பட்டது.

இரண்டாம் கட்டமாக, கடந்தாண்டு டிசம்பர் 18-ம் தேதி அமெரிக்கா சென்றவர், இரண்டு மாதகாலம் அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு, நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சென்னைக்குத் திரும்பினார்.

சமீபத்தில் தேமுதிக பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா தமிழகம் முழுவதும் சூறாவளி பரப்புரை மேற்கொண்டார். தவிர, விஜயகாந்த் சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் வேனில் இருந்தவாறே மக்கள் மத்தியில் பரப்புரை செய்தார்.