முதல்வர், கவர்னர் சந்திப்பு: நடந்தது என்ன?

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜ்பவனில் நேற்று சந்தித்துப் பேசினார். அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், எம் பி, எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்த சில மணி நேரத்திலும், ஆளுனர் டில்லி சென்று திரும்பிய அடுத்த நாளும் இந்த சந்திப்பு நடந்ததால் அரசியல் வட்டரங்களில் பரபரப்பு நிலவியது.

டிஜிபி நியமனம், தலைமைச்செயலாளர் நியமனம், 7 பேர் விடுதலை விவகாரம் குறித்து ஆளுநருடன் முதல்வர் பேசியதாக கூறப்பட்டாலும், அரசியல் விஷயங்களும் அலசப்பட்டதாகவே தெரிகிறது. மேலும், டெல்லியில் 15ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் நாளை டெல்லி செல்கிறார். அது குறித்தும் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

புதிய தலைமை செயலராக நிரஞ்சன் மார்டி, டிஜிபியாக ஜாபர்சேட் ஆகியோரை நியமிக்க, முதல்வர், இபிஎஸ் விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால், தலைமை செயலராக, கவர்னரின் செயலராக உள்ள ராஜகோபால், டிஜிபியாக, திரிபாதி ஆகியோரை நியமிக்க, மத்திய அரசு விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் பன்வாரிலால் சந்தித்தார். ஆளுனர் சென்னை திரும்பியதும் முதல்வர் பழனிசாமி அவ‌ரை சந்தித்துள்ளார். அதனால், இந்த சந்திப்பு மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

முதல்வருடன் மூத்த அமைச்சர் டி ஜெயகுமார் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோரும் ஆளுநரை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது சட்டமன்ற கூட்டத்தொடர் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இம்மாதம், 10ம் தேதி, திடீரென டில்லி புறப்பட்டு சென்றார் புரோகித். அங்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.அப்போது, மத்திய உள்துறை அமைச்சரிடம், தமிழக அரசியல் சூழல், சட்டம் – ஒழுங்கு பிரச்னை, ஏழு பேர் விடுதலைபோன்றவை குறித்து பேசியதாக தகவல் வெளியானது.

சமீபத்தில், அதிமுக அரசுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்கள், கட்சியை வழிநடத்த ஒற்றை தலைமைதான் வேண்டும் என்று திடீர் போர்க்கொடி தூக்கினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது.