வாரிசுகளுக்கு சீட்: வாய்க்கால் தகராறுக்கு தயாராகும் திமுக‌

பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை கட்சி தலைவர் முக ஸ்டாலின் நேற்று மாலை அறிவித்தார். இது உடன்பிறப்புகள் மத்தியில் உற்சாகத்தை விட உச்சக்கட்ட வெறுப்பையே உருவாக்கி இருக்குது.

இதற்கு காரணம், 20 வேட்பாளர்களில் குறைந்தது ஆறு பேர் அரசியல் வாரிசுகள் என்பது தான். வாரிசுகளுக்குத் தான் வாய்ப்பு என்றால், கட்சிக்காக பல வருஷம் உயிரைக் கொடுத்து உழைத்தவர்களின் நிலை என்ன என்று கட்சி பிரமுகர்கள் முணுமுணுக்கிறார்கள்.

அதுவும், சென்னையில் இருக்கும் மூன்று தொகுதிகளிலும் வாரிசுகள் ஆதிக்கம் தான். வட சென்னையில் ஆற்காடு வீராசாமியின் மகன் டாக்டர் கலாநிதியும், மத்திய சென்னையில் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறனும், தென் சென்னையில் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள் தமிழச்சியும் போட்டியிடுறாங்க.

இதைத்தவிர தூத்துக்குடியில் கருணாநிதியின் மகள் கனிமொழியும், வேலூரில் துரை முருகன் மகன் டி எம் கதிர்ஆனந்தும், கள்ளக்குறிச்சியில் பொன்முடியின் மகன் கௌதம்சிகாமணியும் திமுக வேட்பாளர்களா அறிவிக்கப்பட்டு இருக்காங்க.

இவர்களுக்கு எல்லாம் என்ன தான் பணபலமும் படை பலமும் இருந்தாலும், லோக்கலில் உள்ள தொண்டர்களும், பிரமுகர்களும் ஒத்துழைப்பாங்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மக்களின் சப்போர்டை இவங்க பெறுவதும் டவுட் தான் என்று கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட இதே நிலைமை தான் அதிமுகவிலும். அங்கும் வாரிசு அரசியல் தலை தூக்கியுள்ளது. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கும், ஜெயகுமார் மகன் ஜெயவர்த்தனுக்கும் மற்றும் ராஜன் செல்லப்பா மகனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 26-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 18 தொகுதிகளுக்கான தேர்தலும் பாராளுமன்ற தேர்தலுக்கான அட்டவணைப்படியே ஏப்ரல் 18-ந் தேதி நடக்க உள்ளது. அந்த தொகுதிகளுக்கும் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.