விஜய்யின் விசால மனசு: நெகிழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுனர்கள்

ஒவ்வொரு வருடமும் மே தினத்தனத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டும் தொழிலார்களுக்கு பரிசுப்பொருட்கள் மற்றும் மதிய உணவு வழங்குவது நடிகர் விஜய்யின் வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மே தினத்தன்று அவர் அப்படி செய்யாததால், ஒரு வேளை விஜய் தங்களை மறந்து விட்டாரோ என வருத்தத்தில் ஆழ்ந்தனர் ஆட்டோ டிரைவர்கள்.

ஆனால், இன்ப அதிர்ச்சியாக அவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் இருந்து நேற்று திடீர் அழைப்பு வந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டமையால், இவ்வாண்டுக்கான விழா தேவையில்லாத பரபரப்பை தவிர்ப்பதற்காக இதுவரை நடத்தப்படவில்லை.

இப்போது தேர்தல் முடிந்து விட்டதால், விழாவை இன்று நடத்தப் போகிறோம், அனைவரும் தவறாமல் வரவும் என அன்புக் கட்டளை இடப்பட்டதாம். இதைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் மே தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விஜய் படப்பிடிப்பில் உள்ளதால், அவரது உத்தரவின் பேரில் விழாவினை மாநில பொறுப்பாளர் புஸ்ஸி என் ஆனந்த் தலைமையேற்று ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு பரிசுகள் மற்றும் மதிய உணவை வழங்கினார். இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், விஜய் தனது பட விழாவில் பேசிய வீடியோ ஒன்றை நடிகர் பிரேம்ஜி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.