VCK being chased out of DMK alliance, Thiruma gets ready for revenge

விரட்டப்படும் விடுதலை சிறுத்தைகள், திமுகவை திருப்பி அடிக்க தயாராகும் திருமா

விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக கூட்டணியில இருந்து எப்படியாவது வெளியேற வைக்கணும் சில சக்திகள் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுதாம். என்ன தான் விசிக தலைவர் திருமாவளவன் இணக்கமா போக நினைச்சாலும், திமுகவில் உள்ள சில பேரின் கருத்துகள் அவரை சுணக்கம் அடைய வைக்குதாம்.

இதனால, நட்பு, அரசியலை விட தன்மானமே பெருசு‍ன்னு நினைக்க ஆரம்பிச்சுட்ட விடுதலை சிறுத்தைகள், கூட்டணியில இருந்து வெளியேறும் எண்ணத்துல இருக்காங்களாம். ஒரு வேளை அப்படி வெளியேறி விட்டால், திமுகவுக்கு பாடம் கற்பிக்காம இருக்க மாட்டோம்னு வெறியேறிப் போய் இருக்காங்களாம்.

வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலிலும் சரி, அதற்கு பிறகு நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலிலும் சரி, எங்கள் பலம் என்னனு திமுகவுக்கு புரிய வைப்போம், எங்களை கிள்ளூகீரையா நினைக்குற திமுக பிரமுகர்களுக்கு நாங்க யாருன்னு தெரிய வைப்போம்னு அவங்க ரொம்பபே சூடாகிக் கிடக்கிறாங்களாம்.

சமீபத்தில், திருமாவளவன் நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசிய திருமாவளவன், ‘நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவேன். சிதம்பரம் தொகுதி எனது சொந்த தொகுதி. அங்கு எனக்கான வாக்குகளும் அதிகம். இது குறித்துக் கூட்டணிக் கட்சிகளிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளேன். நாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலைத் தயாரித்து அதைக் கூட்டணிக் கட்சிகளிடம் கொடுப்போம். அதன் பின் போட்டியிடும் தொகுதிக் குறித்து முடிவு செய்யப்படும்’ எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், ‘மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் ஒருமித்த கருத்துள்ள யாவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் என் விருப்பம். பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணிக்கு முன்னணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி வைப்பது நல்லதல்ல’ என்று கூறினார்.

தமிழ்நாடு பட்ஜெட் பற்றி அவரிடம் கருத்து கேட்ட போது, ‘தமிழக பட்ஜெட்டில் ஒன்றுமே கிடையாது. எந்தவித புதிய அறிவிப்புகளும் இல்லை. தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி கிடைக்கவில்லை என்பதை பட்ஜெட்டில் விமர்சித்து இருக்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.