உச்சத்துக்கு போகும் உதயநிதி, சினிமாவுக்கு முழுக்கு?

நடிகர், தயாரிப்பாளராக இருந்தாலும், முரசொலி நிர்வாக இயக்குனராகவும் இருக்கும் உதயநிதி ஸ்டாலின், சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

திமுக கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், கட்சியினரால் ‘மூன்றாம் கலைஞர்’ என அழைக்கப்படும் உதயநிதி, திமுகவின் இளைஞர் அணி செயலாளராக விரைவில் நியமிக்கப்படுவார் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் வெள்ளக் கோவில் சாமிநாதன் தாமாகவே முன்வந்து இளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை திமுக தலைவர் மு க ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார்.

இதை ஏற்றுக் கொண்டதாக ஸ்டாலின் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. என்றாலும் அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு உதயநிதி இளைஞர் அணி செயலாளராக அறிவிக்கப்பட உள்ளதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து உதயநிதி சினிமாவை குறைத்துக்கொண்டு அரசியலில் அதிக கவனம் செலுத்தவிருப்பதாக தெரிகிறது. இது குறித்து பேசிய அவர், “இனி ஆண்டுக்கு ஒரு படம் என்று சினிமாவை குறைத்துக்கொண்டு அரசியலில் அதிக கவனம் செலுத்த இருக்கிறேன்,” என்றார்.

வரும் தேர்தலில் போட்டியிடுவீர்களா என கேட்டதற்கு, “கடந்த தேர்தலில் அப்பா கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்றதுமே அவரது தொகுதியான ஆயிரம் விளக்கு தொகுதியில் நான் போட்டியிட போவதாக செய்திகள் வந்தன. அது வெறும் வதந்தி என்று உறுதியானது. இப்போது மீண்டும் இதுபோன்ற வதந்தி கிளப்பப்படுகிறது. எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை,” என்றார்.

மேலும் அவர், “நான் தேர்தலில் நிற்பதை பற்றி யோசிப்பதற்கான நேரம் இது இல்லை. கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்பட காரணம் நடிகராக இருப்பதும் கட்சியின் செய்தித்தாளுக்கு மேலாளராக இருப்பதும் தான்.

ஒரு கட்சி உறுப்பினராக தான் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் மட்டும்தான் போராட்டங்களில் கலந்து கொள்கிறேன். எந்த சூழ்நிலையிலும் எம்.எல்.ஏ. சீட்டோ வேறு எந்த பதவியோ கேட்க மாட்டேன்,” என்றார்.