சிரிக்கவும் முடியாமல், அழவும் முடியாமல் தவிக்கும் இரு தமிழக தலைவர்கள்

எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் முடிவுகளால் திரிசங்கு சொர்க்கத்தில் தவிக்கிறார்கள் தமிழக அரசியல்வாதிகள். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள், திமுக தலைவர் மு க ஸ்டாலினும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்.

பெரும்பாலான டிவி சேனல்களின் எக்ஸிட் போல்கள், தமிழகத்தில் திமுக தலைமையிலான காங்கிரசை உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெறும். ஆனால், மத்தியில் பாஜக தான் ஆட்சி அமைக்கும் என்றும் கூறுகின்றன. இதனால், ஸ்டாலின், எடப்பாடி இருவருமே அப்செட்டாம்.

அதுவும், ஸ்டாலின் கொஞ்சம் அதிகமாகவே விசனப்படுகிறாராம். ஜெயித்தும் பயன் இல்லாமல் போய்விடுமோ என்னும் பயம் தான் அது. அதனால் தான், தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி பேட்டி அளித்த போது சுரத்தே இல்லாமல் இருந்தாராம்.

“கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை. 23-ம் தேதி மக்களின் தீர்ப்பு தெரியும்,” என்று ஸ்டாலின் கூறினார்.

மேலும், மே 23-ந் தேதி டெல்லியில் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது என்று உங்களிடம் சொன்னது யார்? என செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பிய ஸ்டாலின், மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தான் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்னும் மூன்றே நாட்களில் இந்திய மக்கள் எழுதியிருக்கும் தீர்ப்பு வெளிவரப் போகிறது. அதன் விளைவாக, ஆட்சி மாற்றம் ஏற்படவிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டு மக்கள் இரண்டு ஆட்சிகளை மாற்றுவதற்கானத் தீர்ப்புகளை எழுதியிருக்கிறார்கள். ஜனநாயக ரீதியில் மக்கள் எழுதிய தீர்ப்புகளை அதிகாரத்தின் கொடுங்கரங்கள் மூலம் எப்படித் திருத்தி எழுதலாம் என ஆட்சியில் இருப்பவர்கள் திட்டமிட்டு வருகிறார்கள். அதனை முறியடிக்க வேண்டிய கடமை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது.

மே 23ந் தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முகவர்கள், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே மையங்களில் இருக்க வேண்டும். காலதாமதம் என்பதே கூடாது. வாக்கு எண்ணிக்கைக்காக மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் முறைப்படி அமைந்துள்ளனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வாக்குப் பதிவுக்குப் பிறகு, இயந்திரங்களுக்கு வைக்கப்பட்ட சீல் முறையாக உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திட வேண்டும்.

பதிவான வாக்குகளும், எண்ணிக்கையில் உள்ள வாக்குகளும் சரியான அளவில் உள்ளனவா என்பதை ஒப்பீடு செய்ய வேண்டும். எண்ணிக்கையில் சந்தேகம் இருப்பின், மாதிரி வாக்குப்பதிவுக்கு வலியுறுத்தி, வாக்கு இயந்திரத்தின் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்வது பற்றி, வாக்கு மையத்தில் உள்ள அதிகாரிகள் பலருக்கும் மத்திய-மாநில ஆட்சியாளர்களால் நிறைய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்பதை இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள எதிர்க்கட்சிகள் எச்சரிக்கையாகவே வெளியிட்டுள்ளன. அந்த எச்சரிக்கையை நாமும் அலட்சிப்படுத்திவிடக் கூடாது,” என்று தெரிவித்துள்ளார்.