சிறையில் இருந்து கிடைத்த சிக்னல், அதிரடியை ஆரம்பிக்க போகும் டிடிவி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள தனது சித்தியும், கட்சியின் பொதுச்செயலாளருமான‌ சசிகலாவை நேற்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள், அதன் வேட்பாளர்கள், சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்வது குறித்து டிடிவி தினகரன், சசிகலாவிடம் பேசி ஆலோசனை பெற்றதாக கூறப்படுகிறது.

அப்போது, தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களத்தில் தான் சில அதிரடிகளை நிகழ்த்த இருப்பதாகவும், அதுக்கு சின்னம்மா பெர்மிஷன் வேணும்னும் தினகரன் கேட்டதாக கூறப்படுகிறது. அவரது திட்டத்தை உன்னிப்பாக கேட்ட சசிகலா, கிரீன் சிக்னலும் கொடுத்துட்டாராம்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சமயத்தில், தொப்பி சின்னத்திற்கு ஏற்பட்ட சிக்கலைப் போல, தற்போது குக்கர் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால் என்ன செய்வது என்று தினகரனிடம் சசிகலா கேட்டபோது, தேர்தல் ஆணையம் தேர்வுசெய்துள்ள சின்னங்களில் 4 சின்னங்களைத் தேர்வுசெய்து கொடுத்து, இந்த நான்கு சின்னங்களில் ஒன்று கிடைக்கும்படி பார்த்துக்கொள்ளும்படி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருங்கியவரான சசிகலா நடராஜன் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து பெங்களூரு பரப்பன அக்ராஹரா சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். சசிகலாவின் உறவினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலருமான தினகரன் அவ்வப்போது சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து பேசுவது வழக்கம்.

அதன்படி நேற்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒப்புதல் பெற்றதாக கூறப்படுகிறது. மதியம் 12.30 மணிக்கு சிறைக்குள் சென்ற டி.டி.வி.தினகரன், சசிகலாவை சந்தித்து விட்டு மதியம் 1.40 மணியளவில் வெளியே வந்தார்.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சசிகலா இன்னும் ஆறு மாதங்களில் விடுதலையாவார் என்கிறார் தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல். இது அதிமுகவுல பரபரப்பை கிளப்பி இருக்கு.