முதல்வருடன் விமானத்தில் பயணித்த மர்ம நபர்

ஓரு மூத்த பத்திரிகையாளரின் டிவிட்டர் பதிவால் நேற்று அரசியல் மற்றும் மீடியா வட்டாரங்களில் பரபரப்பு கிளம்பியது. நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு தகவல் வந்ததாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பத்திரிகையாளர் ஆர் கே ராதாகிருஷ்ணன், இவ்வாறு ஆங்கிலத்தில் கூறியிருந்தார்:

“சென்னையிலிருந்து மதுரை செல்லும் விமானத்தில், தமிழக முதல்வர் 1டி இருக்கையில் முதலில் அமர்ந்திருந்தார். பின்னர் 1எஃப் இருக்கைக்கு சென்றார். விமானம் கிளம்பிய பிறகு, 3ஏ இருக்கையில் இருந்த‌ சேகர் ரெட்டி முதல்வர் அருகில் சென்று அமர்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். விமானம் இலக்கை நெருங்கும் போது, மீண்டும் தனது இருக்கைக்கு சென்று அமர்ந்தார். ஏன்?”

இந்த பதிவு சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியதோடு மட்டுமில்லாமல், அரசியல் மட்டங்களிலும் புருவங்களை உயர்த்தியது. ஆனால், அதிமுக வட்டாரங்களில் விசாரித்த போது, “ஆர் கே ராதாகிருஷ்ணன் திமுக ஆதரவு பத்திரிகையாளர். திமுக தலைமைக்கு மிகவும் நெருங்கியவர், அவரது பதிவுகள் அப்படித்தான் இருக்கும்,” என்றனர்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். சட்டசபை இடைத்தேர்தல் பிரசார பணிகளில் கவனம் செலுத்தி வருவதால், அவர் இந்த பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாடவில்லை. பழனிசாமியின் 65வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், பிற மாநில தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியும் பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். நேற்று காலை தொலைபேசி மூலம் எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொண்ட மோடி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார். மேலும் தேர்தல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர். பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த‌ தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், “சாமானிய மக்களின் தொண்டராக தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கி மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் வழியில் சாமானிய மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி ஏழை, எளிய மக்களின் கனவுகளை நனவாக்கி வரும் தமிழக முதல்வர் அண்ணன் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

தாங்கள் நீண்ட ஆயுளுடன், உடல் நலத்துடன் மக்கள் சேவையாற்ற இறைவனை பிராத்திக்கின்றேன். இந்த தேர்தல் வெற்றியோடு இன்னும் பல வெற்றிகளை பெற்று மக்கள் தொண்டாற்ற வாழ்த்துகிறேன்,” என்றார்.

பழனிசாமிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது:‍ “தங்களது பிறந்தநாளையொட்டி எனது இதயபூர்வமான வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு மகிழ்ச்சியையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் வழங்கிட வேண்டுகிறேன். உங்களின் சேவை இந்த நாட்டுக்கு இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கட்டும்.”