தில்லியில் கவர்னர்: திக் திக் நிமிடங்கள்

தமிழகத்தில் ஆளும் அதிமுகவுக்குள் மோதல் எழுந்துள்ள நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று திடீர் பயணமாக புது தில்லி புறப்பட்டு சென்றார். இது அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை பரப்பியது.

தலைநகரத்தில் அவர் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது மாநிலம் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து அமித்ஷாவுடன் ஆளுனர் ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து ஒரு சில ஊடகங்கள், “வழக்கமான நல விசாரிப்புகள் மற்றும் வாழ்த்துக்கள் முடிந்த பிறகு நேரடியாக தமிழக அரசியல் குறித்து தான் இருவரும் பேசியுள்ளனர். தமிழகத்தில் பாஜக கூட்டணி படுதோல்வி அடைய காரணம் என்ன என்பது தான் அமித் ஷா நேரடியாக ஆளுநரிடம் கேட்ட கேள்வி.

அதற்கு அதிமுக அரசு மீதான மக்களின் அதிருப்தி தான் படு தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் திமுகவின் சிறப்பான தேர்தல் பிரச்சாரம் மற்றும் கூட்டணி கணக்கு அவர்களுக்கு சாதகமாக அமைந்து விட்டதாகவும் பன்வாரிலால் புரோஹித் கூறியதாக சொல்கிறார்கள்.

மேலும் தேர்தல் சமயத்தில் திமுகவினர் சிறப்பாக செயல்பட்டு பணத்தை கச்சிதமாக செலவழித்து வெற்றி பெற்றதாகவும் ஆனால் அதிமுக நிர்வாகிகள் பணத்தை செலவழிக்காமல் தங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்வதிலேயே குறியாக இருந்ததாக உளவுத்துறை கொடுத்து தகவலையும் அமித்ஷாவிடம் எடுத்து வைத்துள்ளார் பன்வாரிலால் புரோஹித்.

மேலும் சமீபகாலமாக பாஜகவிற்கு நெருக்கமானவர்களை தமிழக ஆளும் கட்சி சீண்டுவதும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தான் தோல்விக்கு காரணம் என்று அமைச்சர் சிவி சண்முகம் பேசி வருவது குறித்தும் அமித்ஷா கவனத்திற்கு ஆளுநர் கொண்டு சென்றதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

இதேபோல் கடந்த இரண்டு வருடங்களாக அமைச்சர்கள் மீது வந்துள்ள புகார்கள் மற்றும் அதற்கான ஆதாரங்கள் அடங்கிய சில கோப்புகளை அமித்ஷாவிடம் பன்வாரிலால் புரோஹித் கொடுத்துள்ளார். அதில் தற்போது முதலமைச்சருக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர்கள் முதல் பட்டும் படாமல் இருக்கும் அமைச்சர்கள் வரை பலரது ஜாதகமே அடங்கி உள்ளதாக கூறுகிறார்கள்,” என்று செய்தி வெளியிட்ட நிலையில், நாம் இது குறித்து தகவலறிந்த வட்டாரங்களிடம் விசாரித்தோம்.

அப்போது அவர்கள், “புரோகித் மட்டுமல்ல, மேற்கு வங்காள கவர்னர் கேசரிநாத் திரிபாதி, தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களின் கவர்னர் இ எஸ் எல் நரசிம்மன், ஜார்கண்ட் மாநில கவர்னர் திரவுபதி முர்மு, அருணாசலபிரதேச கவர்னர் பி டி மிஸ்ரா ஆகியோரும் அமித்ஷாவை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள்.”

மாநில கவர்னர்கள் புதிய‌ உள்துறை மந்திரியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாகவும், தங்கள் மாநில பிரச்சினைகள் குறித்து அவருடன் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்தனர்.