பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் “கேம் சேஞ்சர்” படத்தின் டிரெய்லர் ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது

குளோபல் ஸ்டார் ராம்சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில், “கேம் சேஞ்சர்” படத்தின் டிரெய்லர், ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது !!

குளோபல் ஸ்டார் ராம்சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா திரைப்படமான “கேம் சேஞ்சர்” படத்தின் அதிரடி டிரெய்லர் ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் ஜனவரி 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சமீபத்தில், தயாரிப்பாளர்கள் டல்லாஸில் பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வை நடத்தினர். அந்நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு இந்தியப் படத்தின் முதல் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு இதுதான். தற்போது, கேம் சேஞ்சர் மற்றொரு சாதனையைப் படைத்துள்ளது. விஜயவாடா பிருந்தாவன் காலனியில் உள்ள, வஜ்ரா மைதானத்தில் 256 அடி உயரத்தில் ராம் சரண் நிற்கும் வகையில் மிக உயரமான கட்-அவுட், இன்று ஆயிரக்கணக்கான மெகா ரசிகர்கள் முன்னிலையில் அமைக்கப்பட்டது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த உயரமான கட்-அவுட் சர்வதேச அதிசய சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தில் ராஜு…,
“என்னுடைய ஃபோனில் இப்போது படத்தின் டிரெய்லர் உள்ளது. ஆனால் அது உங்களுக்கு வந்து சேர, நாங்கள் இன்னும் நிறைய உழைக்க வேண்டும். இந்த நாட்களில் படத்தின் தலைவிதியை டிரெய்லர் தான் தீர்மானிக்கிறது. ஜனவரி 1 புத்தாண்டு தினத்தில், நீங்கள் டிரெய்லரைப் பார்க்கலாம். விஜயவாடா தெலுங்கு திரையுலகின் தாய்வீடு, இங்கு மெகா ரசிகர்கள், பவர் ஸ்டார் ரசிகர்கள் மற்றும் மெகா பவர் ஸ்டார் ரசிகர்கள் இணைந்து, ராம் சரணுக்காக இந்த 256 அடி கட்-அவுட்டை அமைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பவர் ஸ்டார் பவன் கல்யாண் கலந்துகொள்ளும் வகையில், கேம் சேஞ்சரின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு ஜனவரி 4 அல்லது ஜனவரி 5 ஆம் தேதி நடைபெறும் என்று தில் ராஜு கூறினார். மேலும் அவர் கூறுகையில்.., “நாங்கள் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம், அது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதுபோன்ற ஒரு வெற்றிகரமான நிகழ்விற்குப் பிறகு, எங்கள் துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்து கொள்வதால், நாங்கள் மீண்டும் ஒரு பெரிய நிகழ்வை நடத்த விரும்பினோம். இந்நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்கும்.

படம் குறித்து சிரஞ்சீவியின் கருத்தைப் பற்றிப் பேசிய தில் ராஜு…,
“இன்று மதியம் 1 மணிக்கு சிரஞ்சீவிக்கு போன் செய்து, படம் பார்க்கச் சொன்னேன். மதியம் 2:45 மணிக்குப் பார்க்கத் தொடங்கினார். அவருடைய கருத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன். ஜனவரி 10 ஆம் தேதி பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறப்போகிறோம் என அவரிடம் இருந்து எனக்குச் செய்தி வந்தது.

தில் ராஜு மேலும் கூறுகையில், குளோபல் ஸ்டார் ரசிகர்களுக்கு இந்த சங்கராந்தி பிரமாண்டமான விருந்தாக இருக்கும் என்றார். “நான்கு வருடங்களுக்கு முன்பு ஷங்கர் சார் என்னிடம் கதை சொன்னபோது, நான் உணர்ந்ததைத்தான் இன்று படத்தைப் பார்த்த சிரஞ்சீவியும் உணர்ந்தார். ஐஏஎஸ் அதிகாரியாக, போலீஸ் அதிகாரியாக இரட்டை வேடத்தில் ராம்சரணின் முழுத்திறமையை, அதிரடி நடிப்பை நீங்கள் பார்க்கலாம். ஷங்கரின் பாடல்களை நீங்கள் கொண்டாடுவீர்கள், 10 முதல் 12 நாட்கள் வரை அவர் பாடல்களைப் படமாக்குவார், அதே போல் படமும் 2 மணி நேரம் 45 நிமிடம் தாருங்கள் என்றேன், சொன்ன நேரத்தில் கமர்ஷியல் ரீதியிலான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி, ஒரு அற்புதமான ப்ளாக்பஸ்டர் படத்தைத் தந்துள்ளார்.”

இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒரு பாத்திரத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகவும், மற்றொன்றில் சமூக அக்கறைகொண்ட இளைஞனாகவும் தோன்றுகிறார். இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயராம், நவீன் சந்திரா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பிரபல ஒளிப்பதிவாளர் எஸ்.திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய, பிரபல இசையமைப்பாளர் எஸ்.தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் சார்பில், தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10, 2025 அன்று தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பிரமாண்டமாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழில் எஸ்.வி.சி மற்றும் ஆதித்யராம் மூவீஸ் தயாரித்துள்ள இப்படத்தை, ஏஏ பிலிம்ஸ் இந்தியில் வெளியிடவுள்ளது. வட அமெரிக்காவில், ஷ்லோகா என்டர்டெயின்மென்ட்ஸ் மூலம் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெளியிடப்படவுள்ளது.

Share this:

Exit mobile version