‘தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது’ உலகநாயகன் கமல்ஹாசன் பூரிப்பு

‘பொன்னியின் செல்வனால் ஏற்பட்டிருக்கும் புத்துணர்ச்சி, உணர்வு, கூட்டுறவு நீடிக்கவேண்டும்’. உலகநாயகன் கமல்ஹாசன் வேண்டுகோள்

“பொன்னியின் செல்வன் போன்ற ஒரு பிரம்மாண்ட படைப்பை உருவாக்கியதற்காக தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குநர் மணிரத்னம் தலைமையிலான படக்குழுவினரை தமிழ் சினிமா சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன்/’ என உலகநாயகன் கமல்ஹாசன் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் எனும் சரித்திர நாவல், லைகா புரொடக்சன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் அதே பெயரில் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக உருவாகியிருக்கிறது- இதன் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியானது. வெளியான நாள் முதல் உலக தமிழர்களின் பாராட்டைப் பெற்று, வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன், பொன்னியின் செல்வன் படத்தை படக்குழுவினருடன் சென்னையில் பார்வையிட்டார்.

படத்தைப் பார்த்தபின் அவர் பேசுகையில்,“ ஒரு ரசிகனாக இந்த திரைப்படத்தை பார்க்கும் போது ஏற்பட்ட மலைப்பு, கண்டிப்பாக அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும் என நான் நம்புகிறேன். இந்த படத்தின் தொடக்கத்தில் பொற்காலத்தைப் பற்றிய ஒரு வசனம் இடம் பெறும் அது என்னுடைய குரலில் இடம்பெறும். அதை மீண்டும் ஒரு முறை நினைவூட்ட விரும்புகிறேன்.

எனக்கு தெரியும் என்பதால் சொல்லவில்லை. எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். படத்தை பார்த்த மகிழ்ச்சியில் சொல்கிறேன். தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது போன்றது உணர்வு எனக்குள் ஏற்பட்டிருக்கிறது. ஒரு தமிழ் சினிமா கலைஞராக.. தயாரிப்பாளராக …எனக்கு இது பெருமிதம் கொள்ளும் நேரமாகவும் இருக்கிறது. இந்த தருணத்தில் பொன்னியின் செல்வன் படக்குழுவினருடன் இணைந்து கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தின் இறுதியில் பட்டியலிடப்பட்டிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்களை பார்த்துக் கொண்டே இருந்தேன். அதில் என் பெயரும் இடம் பெற்றிருந்தது. அதை மகிழ்ச்சியாகவும், பாக்கியமாகவும் கருதுகிறேன். இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்கள், மணிரத்னம், லைகா புரொடக்ஷன்ஸை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களை மட்டும் வைத்துக் கொண்டு இரண்டு திரைப்படங்களை உருவாக்க முடியும். தற்போது நூற்றுக்கணக்கானவர்கள் இடம்பெற்றிருக்கும் பட்டியலை பார்த்து வியக்கிறோம். மலைப்பாகவும் இருந்தது. இப்படி தயாரிப்புக்கு துணையாக நின்ற லைகா சுபாஸ்கரன் அவர்களை, தமிழ் சினிமா சார்பாகவும், இதுபோன்றதொரு பிரம்மாண்ட முயற்சியை எடுத்ததற்காகவும் பிரத்யேகமாக நன்றி தெரிவிக்கிறேன்.

பொன்னியின் செல்வனில் நான் நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் தம்பி கார்த்தி நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் பல வேடங்களில் நானே நடிக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். போர்க்கள காட்சிகளை படமாக்குவது எத்தனை கடினம் என்பது எமக்குத் தெரியும். கத்தி, கேடயம், கவசம், கிரீடம், குதிரை, புழுதி இதனுடன் நடிப்பு என எல்லாவற்றையும் நன்றாக செய்ய வேண்டும். இவை எல்லாவற்றையும் சீயான் விக்ரம் மிக நன்றாக செய்திருக்கிறார். இந்த படத்தை பார்க்கும் போது நான் தயாரித்தது போன்ற ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. அதுவும் உண்மை. ஏனென்றால் தமிழ் சினிமா தயாரித்திருக்கிறது. இந்த புத்துணர்ச்சி நீடிக்க வேண்டும். இந்த உணர்வும், கூட்டுறவும் நீடிக்க வேண்டும். நாளை என்னுடைய படத்திற்கும் நீங்கள் இதுபோல் கொண்டாட வேண்டும்.” என்றார்.

சீயான் விக்ரம் பேசுகையில், ” எங்களுடைய கனவு நனவாகிவிட்ட நிஜமான சந்தோஷம் இது. மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதற்கு மிகவும் நன்றி. மூன்று தலைமுறையைச் சேர்ந்த ரசிகர்கள் இதனை பார்த்துக் கொண்டாடுகிறார்கள். இந்த படைப்பில் நாங்கள் இருக்கிறோம் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி. படத்தின் தொடக்கத்தில் கமல்ஹாசன் அவர்களின் குரலில் தான் தொடங்கும். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது எல்லாம் கடந்து இது அவருடைய படமாக நினைத்து, இங்கு வருகை தந்து, பார்த்து ரசித்ததுடன் மட்டுமல்லாமல், அந்தப் படத்தை பற்றி தன்னுடைய எண்ணத்தை மக்களிடத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய இந்த நேர்மையான அணுகுமுறையை மனதாரப் பாராட்டுகிறோம்.” என்றார்.

நடிகர் கார்த்தி பேசுகையில், ” அனைவருக்கும் முதலில் நன்றியைத் தான் தெரிவிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஒவ்வொருவரும் ‘இது நம்ம படம்’ என்று கொண்டாடுகின்றனர். அதிகாலை ஐந்தரை மணி காட்சிக்கு அம்மாவையும், பாட்டியையும் அழைத்து வந்து காண்பது என்பது இதுவரை நாம், நம் தமிழ் சினிமாவில் காணாத ஒரு விசயம். திருநெல்வேலியில் ஒருவர், ‘என்னங்க தியேட்டரெல்லாம் எப்படி மாறிவிட்டது. நான் தியேட்டருக்கு வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு’ என்று சொல்கிறார். இதுவரை தியேட்டருக்கே வராதவர்கள் கூட இந்த படத்திற்காக தியேட்டருக்கு வருகை தருகிறார்கள்.

உலக நாயகன் கமல்ஹாசனுடன் படத்தை பார்ப்பது எப்போதும் உற்சாகமான அனுபவம். நாங்கள் எத்தனை வெற்றிகளை பெற்றாலும் அது அவருக்கேச் சமர்ப்பணம். ‘பருத்திவீரன்’ படத்தின் தொடக்க விழாவின்போது உலகநாயகன் கமலஹாசன், மருதநாயகம் படத்தின் முன்னோட்டத்தை காண்பித்தார். அதில் அவருடைய நடிப்பும், குதிரை ஏற்றமும்.. இன்றும் பிரமிப்பு நீங்காமல் என் கண்களுக்குள் இருக்கிறது. ” என்றார்.

Share this:

Exit mobile version